தியாகராஜா (நாவல்): வாசிப்புக்கான சில குறிப்புகள்

சுப்புடு மாதிரி பொளந்து கட்டீரீரே. எங்கு கற்றீர்? யார் குரு?

வி. பாலசுப்ரமணியன்

நான் தில்லியில் பத்தாண்டு காலம் வசித்த போது சுப்புடுவை அங்கே நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். மற்றபடி சுப்புடுவின் ஒரு வாக்கியத்தைக் கூட படித்தது இல்லை.  ஆனால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமர்சனம் செய்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்போது அவர் கட்டுரைகள் கிடைத்தால் படிக்கக் கூடிய மனநிலை இருக்கிறது.  ஆனால் அவர் கட்டுரைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. 

பாலா சார், உங்களுடைய ஒரு கேள்வியைப் படித்ததும் இசை தொடர்பான பல விஷயங்கள் என் நினைவில் வந்து மோதுகின்றன.  இசையை மையமாக வைத்து தமிழில் எழுதப்படும் இப்போதைய புனைகதைகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கின்றன.  தி. ஜானகிராமனுக்குப் பிறகு இசையை மையமாக வைத்து எழுதப்பட்ட பல நாவல்கள், சிறுகதைகள் எதுவுமே எனக்குத் திருப்தி அளிக்காததோடு மட்டும் அல்லாமல் மிகுந்த எரிச்சலையே தருகின்றன.  சென்ற ஆண்டு கூட ஒரு சிறுகதையை வைத்துக்கொண்டு என் நண்பர் அப்படி ஒரு கதை உலக இலக்கியத்திலேயே இல்லை என்பது மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தார்.  கிட்டத்தட்ட அழுது விட்டார் என்றே சொல்ல வேண்டும்.  அவர் மட்டும் அல்ல.  தமிழ் இலக்கிய உலகமே அழுதது.  அதேபோல் இன்னொரு சிறுகதைக்கும் அழுதது.  நானும் அழுதேன், இந்தப் பாடாவதியையெல்லாம் படிக்க வேண்டியிருக்கிறதே என்று. 

காரணம், நான் கொஞ்சம் இசையை மையமாக வைத்து எழுதப்பட்ட சர்வதேச இலக்கியப் படைப்புகளைப் படித்துத் தொலைத்து விட்டேன்.  அதனால் இங்கே எழுதப்படும் ”நெஞ்சுருக்கும்” கதைகளை என்னால் படிக்க முடியவில்லை.

நான் படித்த அத்தகைய படைப்புகளில் ஒன்றிரண்டைப் பற்றி இங்கே சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறேன். 

தாமஸ் மன் எழுதிய டாக்டர் ஃபாஸ்டஸ். கற்பனையான ஜெர்மன் இசைக்கலைஞர் Adrian Leverkühn அந்த நாவலின் நாயகர். இந்தப் பாத்திரத்துக்கான உந்துதல் Arnold Schoenberg மற்றும் ஃபாஸ்ட் பற்றிய புராணிகக் கதை.

தாமஸ் மன் எழுதிய மற்றொரு புகழ் பெற்ற நாவல், தெ மேஜிக் மௌண்டன். ஐரோப்பிய செவ்வியல் இசையை தத்துவப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவலில், வாக்னரின் ஆபரா Parcifal முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பின்னணி என்று சொன்னது கூடத் தவறு; காலம், பிரக்ஞை, ஜனனத்துக்கும் மரணத்துக்குமான ஊடுபாவு போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்கான ஒரு சாதனமாகவே தாமஸ் மன் ஐரோப்பிய செவ்வியல் இசையை இந்த நாவலில் பயன்படுத்துகிறார்.

மேஜிக் மௌண்டனின் மையப்பாத்திரமான Hans Castorp ஒரு சமயம் கிராமஃபோன் ரெக்கார்டிலிருந்து Schubert’s Lindenbaum (from Die Winterreise), Debussy’s Prélude à l’après-midi d’un Faune, Verdi’s Aida மற்றும் Wagner’s Parsifal prelude ஆகியவற்றைக் கேட்கிறான். ஷூபர்ட்டின் லிண்டன்பாமைக் கேட்டு ஹான்ஸ் ஒருவித நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறான். இழந்து போன தனது பால்ய பருவத்து ஞாபகங்கள் அவனை வாட்டுகின்றன.  பால்ய காலத்து கலகலப்புக்காகவும், வெகுளித்தனத்துக்காகவும் ஏங்குகிறான். தன்னால் இப்போது, இந்தக் கணத்தில் அனுபவிக்க முடியாத, தன் கையை விட்டுப் போய் விட்ட கடந்த காலம் என்ற அற்புதமும் நிகழ்காலத்தின் சீரழிவும் அவனை அலைக்கழிக்கிறது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்தின் சிக்கலினிடையே அவன் மகத்தான அர்த்தங்களைத் தேடி ஏமாற்றம் அடைகிறான்.

இங்கே ஹான்ஸ் கேட்கும் செவ்வியல் இசையின் தன்மைக்கும், அவனுடைய நிகழ்காலத்துக்குமான தொடர்பைக் காண்போம்.

ஸ்விஸ்ஸில் உள்ள ஆல்ஃப்ஸ் மலைப்பகுதியில் உள்ள ஒரு காசநோய் மருத்துவமனைக்குத் தன் உறவினனைப் பார்ப்பதற்காகச் செல்கிறான் ஹான்ஸ்.  மூன்று வாரம் தங்கலாம் என்று திட்டம்.  ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரிகிறது, அவனுடைய நுரையீரலில் காசநோயின் ஆரம்பநிலைக்கான அறிகுறிகள் இருக்கின்றன என்பது.  அதனால் அவன் அந்த சானடோரியத்தில் நோயாளியாகச் சேர்க்கப்படுகிறான். 

மலைகளால் சூழப்பட்ட அந்தக் காசநோய் விடுதியின் தனிமை, நோய்மை, இருண்மை, மரணத்தின் நிழல் படிந்த மனிதர்கள் – அந்த மருத்துவமனையே நாவலில் ஒரு குறியீடாக வருகிறது.  எதார்த்த உலகிலிருந்து முற்றிலும் விலகிய ஓர் உலகம்.  எதார்த்த உலகின் பரபரப்போ, காலம் பற்றிய பதற்றமோ இல்லாத இடம்.  மரணம் குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்பும் இடம்.  எதார்த்த வாழ்வில் யாரும் மரணம் பற்றி நினைப்பதில்லை.  இங்கோ ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.  எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கும் வெளி அது.  அப்போது ஹான்ஸ் மானுட வாழ்வின் நிலையாமை பற்றிச் சிந்திக்கிறான். 

அப்போதுதான் அவன் மேலே குறிப்பிட்ட பாடல்களையும், இசைக்கோர்வைகளையும் கேட்கிறான். 

க்ளாத் தெபுஸ்ஸி இயற்றிய Prélude à l’après-midi d’un Faune ஹான்ஸுக்கு அந்தச் சூழலில் அவனது புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைத் தருகிறது.  அவனது தத்துவத் தேடலுக்கான வாசலைத் திறந்து விடுகிறது. நனவுலகின் தட்டையான தளத்திலிருந்து அவனை ஒருவித விசித்திரமான கனவுலகத்துக்குக் கொண்டு செல்கிறது. தவிரவும், காலம் பற்றிய குழப்பம் மற்றும் கேள்விகள், எக்ஸிஸ்டென்ஷியல் பதற்றம் மற்றும் தவிப்பு, துய்ப்புணர்வின் அலைக்கழிப்பு எல்லாமாகச் சேர்ந்து ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது தெபுஸ்ஸியின் Prélude.

நான் பலமுறை பல இடங்களில் எழுதியிருக்கிறேன், ஐரோப்பிய இலக்கியமும் சினிமாவும் மரண அச்சத்தையும், மரணத்தினால் ஏற்படும் தவிப்பையும், பதற்றத்தையும் தத்துவார்த்தப்படுத்துகின்றன.  மரணம்தான் ஐரோப்பியத் தத்துவத்தின் அச்சாகவே சுழல்கிறது.  அதற்கு ஐரோப்பியக் குளிரும் அவர்களின் தனிமையும் காரணம்.  சார்த்தரின் கண்டு பிடிப்பான Other is Hell என்பதெல்லாம் இந்தத் தனிமையுணர்வினாலும் மரண அச்சத்தினாலும் ஏற்பட்டதுதான்.   பெர்க்மனின் ஒரு திரைப்படத்தில், பிரசவ விடுதி ஒன்றில் குழந்தைகள் தொடர்ந்து இறந்தே பிறப்பதால் ஒருத்தன் கேட்பான், இது பிரசவ விடுதியா, சவக் கிடங்கா என்று. 

ஹான்ஸ் கிராமஃபோனில் கேட்கும் இன்னொரு பாடல், O terra, addio.  இந்த ஆபராவின் கதை:  எத்தியோப்பிய இளவரசி Aida (எகிப்தில் அடிமையாக்கப்பட்டவள்) மற்றும் Radamès (எகிப்திய இராணுவத் தளபதி) ஆகியோரின் காதல் துரோகமாகக் கருதப்பட்டு இருவரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். Radamès ஒரு கல்லறையில் அடைக்கப்படுகிறான்.  Aida, அவனுடன் மரணிக்க முடிவு செய்து, அவனுடைய விதியைப் பகிர்ந்து கொள்ள கல்லறையின் உள்ளே மறைந்திருக்கிறாள்.

“O terra, addio” என்ற டூயட்டைப் பாடியபடியே இருவரும் இந்த உலகிலிருந்து விடைபெறுகிறார்கள். வாழ்க்கையிலிருந்து கிடைத்த இன்பங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் நன்றி தெரிவித்து, மரணத்தை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.  இசையின் மென்மையான, ethereal மெலடியுடன் ஒரு hauntingly beautifulஆன சூழலை உருவாக்குகிறார்கள். இந்தத் தருணம், ஹான்ஸ் கிராமஃபோனில் கேட்கும்போது அவனைத் தாக்குகிறது.

நண்பர்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள்.  ஹான்ஸின் சூழலைக் கற்பனை செய்யுங்கள்.  சுற்றிலும் பனி படர்ந்த மலைகள், நோய்மை, மரணம்.  குளிர்.   வாழ்வதற்கான தவிப்பும், தவிர்க்க முடியாத மரணமும் கலந்த இயல்பை அந்த டூயட் வெளிப்படுத்துகிறது.

அந்த இத்தாலிய டூயட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே.  (இது நான் செய்த மொழிபெயர்ப்பு அல்ல; பொதுவாக இந்த மொழிபெயர்ப்பே இந்த டூயட்டின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாகக் கொள்ளப்படுகிறது.)

Aida and Radamès (together):

O earth, farewell; farewell, vale of tears,

Dream of joy that vanished in sorrow;

The heavens open to us, our souls take flight,

To the light of eternal day.

Aida (alone, then joined by Radamès):

My heart foresaw this cruel fate,

Yet I could not flee from love.

Now, in death, we are united,

In the stars, we’ll live forever.

Radamès (alone, then together):

The fatal stone now seals us in,

This is our tomb, our end on earth.

But in this darkness, I see your face,

And death becomes a radiant dawn.

Together (final lines):

Farewell, O earth, farewell, our fleeting joys,

Our souls ascend to realms divine.

O earth, farewell, forevermore,

To eternal love, our spirits soar.

Amneris (outside the tomb, in the temple above, as a counterpoint):

My heart weeps for you, beloved Radamès,

Peace be with you, Aida, in death’s embrace.

“O terra, addio” என்பது Giuseppe Verdi-யின் Aida ஆபராவின் இறுதிப் பகுதி, Act IV, Scene 2-ல் Aida மற்றும் Radamès ஆகியோரால், அவர்கள் ஒன்றாக மரணத்தை எதிர்கொள்ளும் போது, ஒரு கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட நிலையில் பாடப்படுகிறது.

மேலே நான் விவரித்த சூழலை நினைவு கொள்ளுங்கள்.  ஹான்ஸ் இருப்பது ஒரு மரண பூமி.   காதலர் இருவரும் வாழ்க்கையிலிருந்து விடைபெற்று மரணத்தைத் தழுவுகிறார்கள்.  டூயட் மரணத்தின் துயரத்தையும் transcendence-ஐயும் கலந்து வழங்குகிறது.

என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பு கீழே.  (சற்றே சுதந்திரமாக மொழிபெயர்த்திருக்கிறேன்.  இதை விட நல்ல மொழிபெயர்ப்பைச் செய்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.)

ஓ பூமியே, உன்னிடமிருந்து விடைபெறுகிறோம்

கண்ணீரின் பள்ளத்தாக்கு,

மகிழ்ச்சியின் கனவு துக்கத்தில் மறைகிறது

வானங்கள் எங்களுக்குத் திறக்கின்றன

எங்கள் ஆன்மாக்கள் அங்கே பறக்கின்றன

நித்திய நாளின் ஒளியைத் தேடியபடி.

Aida (தனியாக, பின்னர் Radamès இணைகிறார்):

என் இதயம் இந்தக் கொடூரமான விதியை முன்கூட்டியே அறிந்திருந்தது

ஆனால் காதலிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.

இப்போது, மரணத்தில், நாங்கள் ஒன்றிணைகிறோம்

நட்சத்திரங்களில், நாங்கள் என்றென்றும் வாழ்வோம்.

Radamès (தனியாக, பின்னர் ஒன்றாக):

மரணத்தின் பாறாங்கல் இப்போது எங்களை மூடுகிறது

இந்தக் கல்லறை, பூமியில் எங்கள் முடிவைத் தெரிவிக்கிறது

ஆனால் இந்த இருளில்

நான் உன் முகத்தைப் பார்க்கிறேன்

மரணம் ஒரு ஒளிரும் புலரியாக மாறுகிறது.

ஒன்றாக (இறுதி வரிகள்):

பூமியே, ஓ பூமியே, உன்னிடமிருந்து விடைபெறுகிறோம்

எங்கள் கணநேர மகிழ்ச்சிகளும்

எங்கள் ஆன்மாக்களும் தெய்வீக உலகங்களை

நோக்கிச் செல்கின்றன

ஓ பூமியே, விடை பெறுகிறோம்

என்றென்றுமான நித்தியக் காதலுக்கு

எங்கள் ஆவிகள் உயர்கின்றன.

Amneris (கல்லறைக்கு வெளியே, கோயிலில், ஒரு counterpoint-ஆக):

என் இதயம் உனக்காக அழுகிறது, அன்பே Radamès,

மரணத்தின் அரவணைப்பில் உனக்கு அமைதி கிடைக்கட்டும், Aida.

இந்த இடத்தில் இந்தியத் தத்துவமும் இந்திய வாழ்வும் மரணத்தைக் கொண்டாடுகிறது என்பதை நினைவு கூருங்கள். 

தியாகராஜர் விடுதலையையும் கொண்டாட்டத்தையுமே பாடுகிறார்.  மீதியை நாவலில் பார்க்கலாம்.  ஒருவகையில் தியாகராஜா நாவல் மேஜிக் மௌண்டனுக்கான இலக்கிய எதிர்வினை என்றும் நீங்கள் கொள்ளலாம்.   

உங்களுக்கு மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் அனுபவம் இல்லாவிட்டாலும் நான் குறிப்பிடும் இந்த இசைக் கோர்வைகளையும், பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.

இங்கே நான் கொடுத்துக்கொண்டிருக்கும் இசைக் குறிப்புகளை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தியாகராஜா நாவலை சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு உதவும். ஹான்ஸின் அற்புதம் அவன் இழந்து போன கடந்த காலம் என்றால், தியாகராஜருக்கு அவர் காணப் போகும் எதிர்காலம் அற்புதம்.  எதிர்காலம் அவருக்கு விடுதலையை அளிக்கப் போகிறது. சாதாரண விடுதலை அல்ல; இனிமேலான பிறப்புகளிலிருந்தே விடுதலை.  எதிர்காலத்தில் அவர் தன் ராமனைக் காணப் போகிறார்.  ராமனுடனேயே வாசம் செய்யப் போகிறார்.  கீழ்மையில் உழலும் இந்த மானிடப் பிறவி அவருக்கு இதோடு முடியப் போகிறது.

இப்படியாக, தாமஸ் மன்னின் வாசிப்பு தியாகராஜரின் வாழ்வைப் புரிந்து கொள்ள எனக்குப் பெரிதும் உதவியது.

பின்குறிப்பு: பாலா சார் ஏதோ கேட்டதற்கு நான் ஏதோ பதில் எழுதி விட்டேன்.  கர்னாடக சங்கீதத்தில் என் குரு எஸ். தியாகராஜன்.  ஓ.எஸ். தியாகராஜன் வேறு.  இந்த எஸ். தியாகராஜன் வேறு.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஆண்டுகள் இவரிடம் கற்றேன்.  மைலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சந்தில் தனி வீட்டில் வசித்தார்.  இவரது சிறப்பு, இவர் ஒரு சமயத்தில் ஒரு மாணவருக்குத்தான் கற்பிப்பார்.  இவரைப் பற்றி இப்போது விக்கிபீடியாவில் கூட விவரம் இல்லை. 

(சந்தா மற்றும் நன்கொடை அனுப்பித் தாருங்கள்)

சந்தா/நன்கொடை அனுப்ப விவரம்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai