ஃபூக்கோவின் குஞ்சாமணி

காலையிலேயே ஒரு நண்பர் ஃபோன் செய்து, ஒரு இத்தாலிய நாவலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். உங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதே, என்ன செய்வீர்கள் என்றேன். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புக்கு எந்த மொழியும் தேவையில்லை, க்ரோக்கிடம் கொடுத்தால் போதும், இத்தாலிய மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து விடலாம் என்றார். அதோடு விட்டிருக்கலாம். விதி யாரை விட்டது? என்ன நாவல் என்று கேட்டுத் தொலைத்தேன். ஃபூக்கோவின் குஞ்சாமணி என்றார்.

ஐயோ.

பயப்படாதீர்கள். க்ரோக்கிடம் போவதற்கு முன்னால் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் மொழிபெயர்ப்பு நடக்கிறது. அதில் Foucault’s Pendulum என்று போட்டால் இப்படித்தான் வருகிறது. இப்போதைய ட்ரெண்ட் ஊம்பர்ட்டோ எக்கோதானே?

மொழிபெயர்ப்பு வந்து விட்டால் எப்படியும் தமிழ் எழுத்தாளர்கள் வந்து சப்பொர்ட் பண்ணுவார்கள். நீங்கள் ஒரு ஆள் திட்டுவீர்கள். உங்களை ஆபாச எழுத்தாளர் என்று சொல்லி விட்டால் தீர்ந்தது கதை. அதற்குள் இன்னொரு எழுத்தாளரை நீங்கள் ஃபாஸிஸ்ட் என்பீர்கள். அதன் விளைவாக அவர் சப்போர்ட்டும் கிடைக்கும். கவலையில்லை.

சரி, பதிப்பகம்?

எனக்கு ஊர் பொள்ளாச்சி. என் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு பதிப்பகம் இருக்கிறது. கவலையில்லை.