ஆலயம்

பவா செல்லதுரை
பாஸ்டன் வந்திருப்பதாக
அங்கே வசிக்கும் வளன்
சொன்னான் மறுநாள்
பவா பேசினார்
வளன் பாதிரியாக
ஊழியம் செய்யும்
ஆலயத்துக்கு அழைத்துச்
சென்றானாம்
ஒவ்வொரு இடமாகக் காண்பித்தவன்
ஒரு அறையில் நின்றான்
Sacristy என்றார் பவா
பிற்பாடு அகராதியில்
பார்த்து பாதிரிகளின்
ஒப்பனை அறையென அறிந்து
கொண்டேன்
பாதிரிகள் அணியும்
பத்துப் பதினைந்து அங்கிகளில்
ஒன்றை எடுத்துக் காண்பித்தான்
அதில் வளனின் தாய் பெயரும்
தந்தை பெயரும் அடுத்து
உங்கள் பெயரும் இருந்தது
பவா சொன்னபோது
அவர் குரலிலிருந்த உணர்ச்சியை
என்னால் இங்கே கொண்டுவர
முடியவில்லை
வேறெந்தப் பெயரும் இல்லையா
என்றேன்
இன்னொரு பெயரும் இருந்தது
அது ரகசியமென்றார் பவா