ஞானம்

வித்யா ஒரு காணொலி
அனுப்பியிருந்தாள்

‘அப்பா, இதைப் பார்த்ததும்
உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்று
தோன்றியது’

காணொலியிலொருவர்
தன் வீட்டு
மொட்டைமாடியில்
பட்சிகளுக்கு உணவளிக்கிறார்

அங்கே வருகிறதொரு குரங்கு
அந்த உணவிலொரு கையள்ளி
வாயில் போட்டு மென்று
அதைத் தன் மடியிலிருக்கும்
குட்டியின் வாயில் கொடுக்கிறது
குட்டியல்ல
அது
தாயைப் பிரிந்து விட்டவொரு
மைனாக்குஞ்சு

2

கு.ப.ரா.வின் கதை ஒன்று
சித்தார்த்தன் ஞானம் தேடி
அலைகிறான்
எத்தனையெத்தனையோ
ஞானிகளைப் பார்க்கிறான்
என்னென்னவோ தவங்களைப்
புரிகிறான்
தேடிய ஞானம்
கிட்டுவதாயில்லை
சலித்துப் போய்
ஞானம் கிட்டும் வரை
சோறு தண்ணியில்லையென்ற
முடிவோடு ஒரு
மரத்தடியில் அமர்கிறான்
நாற்பத்தேழு தினங்கள்
கடந்தன

இப்படி ஒருவன்
மரத்தடியில் இருப்பதைப்
பார்த்துக்கொண்டே
தினமும் அந்தப் பக்கம்
போகிறாள் ஒரு பெண்

நாளுக்கு நாள் அவனுடல்
சதை வற்றி எலும்பும்
தோலுமாய் உருகுவதைக்
கண்டு நாற்பத்தெட்டாம் நாள்
பாலன்னம் செய்து வந்து
அவன் வாயில்
ஊட்டுகிறாள்

ஞானம் கிட்டியதென
தவம் கலைகிறான்
ததாகதன்

3.

நாங்கள் ஏற்கனவே
வசித்த அடுக்குமாடிக்
குடியிருப்பில்
பத்து பூனைகளுக்கு
உணவிட்டுக்கொண்
டிருந்தோம்

வீடு மாற்றிய பின்னும்
அக்குடியிருப்பின்
காவலாளிகள் மூலம்
அந்தப் பூனைகளுக்கு
உணவு கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்

அங்கே ஒரு பெண்மணி
அவளுக்குப் பூனைகளைப்
பிடிக்காது போல
காவலாளிகளுக்குப் போட்டாளொரு
உத்தரவு
நான் வெளியே போய்விட்டுத்
திரும்பும் வரை
பூனைக்குப் போடாதே உணவு

அம்மணி
காலை ஏழு மணிக்கு வெளியே
போனால் திரும்புவது
பன்னிரண்டு மணி
அதுவரை பூனைகள்
பசியில் கதறும்

எத்தனை பூனை உணவு
அனுப்பினாலும்
குடியிருப்பில் அது
மூன்று நாளில் தீர்கிறது
கடைசியில்தான் தெரிந்தது
காவலாளி ஒருத்தன்
அந்தப் பூனை உணவை
விற்றுக் காசாக்கிக்
கொள்கிறான்

4

’இப்பிறவி என்னுமோர்
இருட்கடலில் மூழ்கிநான்’
என்றான் தாயு
மானவன்