கருணை நிறைந்து அகமும் புறமும் தளும்பி வழியும்…

மாரத்தஹள்ளியில்
மோகினிக்குட்டியின்
அடுக்குமாடிக் குடியிருப்பு
கீழ்த்தளத்தில் ஒரு கர்ப்பிணிப் பூனை
பேர் சொன்னாள்
மறந்து போனேன்

கடந்த இரண்டு வருடமாக
அதன் வேலை
கர்ப்பந்தரித்திருப்பது
அல்லது
குட்டிகளுக்குப் பால் தருவது
ஒன்றில்லாவிட்டால்
இன்னொன்று
இதைத் தவிர மற்றபடி
அதை இவள் பார்த்ததில்லை

அவ்வப்போது
அந்தக் குட்டி
பற்றி இவள்
பேசுவாள்
கேட்பதைத் தவிர வேறெனக்கு
வழியில்லை

பூனைகளையெனக்குப்
பிடிக்கும்
பூனை பற்றிப் பேசுவது
பிடிக்காது
இருந்தாலும்
கேட்பதைத் தவிர வேறெனக்கு
வழியில்லை

பேசிப் பேசி
அந்தக் குட்டிக்கும்
எனக்குமொரு
பந்தமுண்டாயிற்று போல

அந்தக் குட்டி பற்றிய
கதைகளில் முக்கியமானது
அது சிநேகபாவமற்றது
நெருங்கினால் சீறும்
உணவு கொடுப்பதற்கே
கொஞ்சம் தந்திரம்
பண்ண வேண்டும்

ஒருநாள் நான்
மோகினிக்குட்டியின்
இல்லம் சென்றேன்

அந்தப் பூனைக்குட்டியின்
உணவு நேரம் வந்தது
கீழே இறங்கினோம்

அந்தக் குட்டி
என்னைக் கண்டதும்
ஓடி வந்து என்
கால்களுக்கிடையே
நுழைந்து நுழைந்து
எட்டுப் போட்டு
விளையாடியது கண்டு
மோகினிக்குட்டி சொன்னாள்

”உனக்குள்ளொரு
ஆழ்ந்த மௌனம்
கனன்று கொண்டிருக்கிறது
அதுவே பூனைகளையும்
நாய்களையும்
உன்பால் ஈர்க்கிறது.”

அந்தக் கணம் –
கருணை நிறைந்து
அகமும் புறமும்
தளும்பி வழியும்
மானுடம் வேண்டி
நின்றேன்.