ஆத்மாவிலிருந்து பேசுதல்

எழுத்தே என் பிராணன்
அந்த எழுத்துடன் பயணிப்பவளென்
மோகினிக்குட்டி
அவளோடுகூட
ஆத்மாவிலிருந்து பேசுவதில்லை
காரணமொன்றுமில்லை
சிறைக்கூடத்திலிருந்து எவரேனும்
ஆத்மாவிலிருந்து பேச முடியுமா?

இந்தப் பேச்சு எதற்கென்றால்
ஒருநாள் என் மனையாள் சொன்னாள்
யாருடனோ நீ ஆத்மாவிலிருந்து
பேசிக்கொண்டிருந்தாய்.
சொல்லும்போது
ஏக்கத்தின் கேவல்
தெறித்து விழுந்தது

யோசித்து யோசித்துக் களைத்தேன்

ஒருநாள் எதேச்சையாகத்
தெரிந்தது
பிராணனைவிட முக்கியமான
தேதேனுமுண்டா?
உண்டென்றாலது
கவிதை

கவிதை பற்றியே
அந்தக் கவிஞனுடன்
பேசுவதுண்டு
ஆத்மார்த்தமாகத்தான்

ஆத்மார்த்தியுடன் ஆத்மார்த்தமாக
அல்லாமல் வேறெப்படிப் பேச
முடியும்?