தியாகராஜா நாவலை எழுதத் தொடங்கியது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு. சுமார் இருநூற்று ஐம்பது பக்கங்கள் எழுதியிருந்தேன். பிறகு அதை என்னால் தொடர முடியவில்லை. ஏன் தொடர முடியவில்லை என்பதற்கான காரணம் இப்போதுகூட எனக்கு சரியாகத் தெரியவில்லை. இன்னும் என்னிடம் ஏதோ குறைகிறது, இன்னும் ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டியிருக்கிறது என்ற உணர்வு மட்டும் இருந்துகொண்டே இருந்தது.
இதற்கிடையில் நான் எங்கே சென்றாலும் என் நண்பர்களும் வாசகர்களும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எப்போது தியாகராஜா வரும்?
சீக்கிரம் வரும் என்றே நாலைந்து ஆண்டுகளாக தர்மசங்கடத்துடன் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் அந்த நாவலை என்னால் தொடர முடியுமா என்ற சந்தேகமே இருந்தது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலை திடீரென்று எழுத ஆரம்பித்தேன். எந்தத் திட்டமும் இல்லை. எந்த முன்னேற்பாடும் இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இருநூற்று ஐம்பது பக்கங்களையும் நிராகரித்து விட்டேன். அதிலிருந்து ஒரு வாக்கியத்தைக்கூட இப்போது எடுத்துக்கொள்ளவில்லை.
புதிதாக ஆரம்பித்தேன்.
அப்போது எனக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. தியாகராஜாவின் கதையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். நடந்தது நடந்தபடி சொல்ல வேண்டும். அதற்கான ஒரே ஆதாரம் அவரது கீர்த்தனைகள். தியாகராஜர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை. அதை அவர் பாடியிருக்கிறார். அவரது கீர்த்தனைகளே அவரது வாழ்க்கையின் சாட்சியங்கள். அந்த சாட்சியங்களின் வழியாக அவரது வாழ்க்கையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது.
ஆனால் எழுதிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.
தியாகராஜரின் வாழ்க்கையை எழுதிக்கொண்டிருப்பதாக நினைத்த நான், மெல்ல மெல்ல சங்கீதத்தின் வழியாக மனிதன் பிரபஞ்சத்துடனும் கடவுளுடனும் கொள்ளும் உறவை எழுதிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். சங்கீதம் என்பது வெறும் கலை அல்ல. அது மனிதன் தன்னையும் தன்னைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரு வழி. தியாகராஜரின் கீர்த்தனைகள் எனக்கு இதைத்தான் உணர்த்தின.
நாவலுக்குள் பீத்தோவன் வந்தார். ஐரோப்பிய சங்கீதமும் கர்னாடக சங்கீதமும் சந்தித்துக்கொண்டன. பக்தியும் சந்தேகமும் ஒன்றையொன்று எதிர்கொண்டன. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் சமூக வாழ்க்கை, தஞ்சாவூரின் பண்பாடு, தேவதாசிகளின் உலகம், மனித உறவுகளின் சிக்கல், அதிகாரம், வறுமை, மரணம், கடவுள், சங்கீதம் என்று நாவல் நான் எதிர்பார்த்திராத திசைகளில் விரிந்துகொண்டே சென்றது.
நான் அவற்றையெல்லாம் திட்டமிட்டு நாவலுக்குள் கொண்டுவரவில்லை. தியாகராஜரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து சென்றபோது அவை ஒவ்வொன்றாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டன.
ஒரு கட்டத்தில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் எழுதிக்கொண்டிருப்பது வெறும் வாழ்க்கை வரலாற்று நாவல் அல்ல. உலக இலக்கியத்தின் மகத்தான படைப்புகளுக்கு இணையாக நிற்கக்கூடிய ஒரு நாவல் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று உணர்ந்தேன்.
இதைச் சொல்வது சிலருக்குத் தற்பெருமையாகத் தோன்றலாம். தோன்றட்டும். இலக்கியத்துக்கு உரிய மதிப்பை அளிக்காத ஒரு சமூகத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சில சமயங்களில் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
உலக இலக்கியத்தில் என்னை எப்போதும் மலைக்க வைத்த சில நாவல்கள் உண்டு. தஸ்தயேவ்ஸ்கியின் The Brothers Karamazov, மார்செல் ப்ரூஸ்டின் In Search of Lost Time, ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses, ராபர்ட் ம்யூஸிலின் The Man Without Qualities, தாமஸ் மன்னின் The Magic Mountain, காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் One Hundred Years of Solitude போன்ற நாவல்களை உலக இலக்கியத்தின் சிகரங்களாகவே கருதுகிறேன்.
குறிப்பாக The Man Without Qualities, The Magic Mountain ஆகிய நாவல்களைப் படித்தபோது, நம்முடைய ஆயுளில் இப்படிப்பட்ட படைப்புகளைத் தாண்டிச் செல்ல முடியுமா என்று மலைத்திருக்கிறேன். மனித வாழ்க்கை, வரலாறு, தத்துவம், கலை, அறிவு ஆகிய அனைத்தையும் ஒரு நாவலுக்குள் கொண்டுவந்து, நாவல் என்ற கலைவடிவத்தின் எல்லைகளையே விரிவுபடுத்திய படைப்புகள் அவை.
அந்த நாவல்களைத் தாண்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் தியாகராஜாவை எழுதத் தொடங்கவில்லை. அப்படியொரு எண்ணமே எனக்கு இருக்கவில்லை.
ஆனால் தியாகராஜாவை எழுதி முடித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு வேறு.
அந்த மகத்தான படைப்புகளைத் தாண்ட முடியாவிட்டாலும் அவற்றுக்குச் சமமாக நிற்கக்கூடிய ஒரு நாவலை எழுதியிருக்கிறேன் என்ற பெருமிதம் ஏற்பட்டது.
இதுவரை நான் எழுதிய நாவல்கள் அனைத்தையும் தியாகராஜா தாண்டிவிட்டது என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை.
ஒரு நாவல் க்ளாசிக் ஆகுமா என்பதை இறுதியாகத் தீர்மானிப்பவர்கள் வாசகர்களும் காலமும்தான். அதை நான் அறிவேன். ஆனால் ஒரு படைப்பை உருவாக்கிய எழுத்தாளனுக்கு அந்தப் படைப்பின் பிரம்மாண்டத்தை முதலில் உணரும் ஒரு தருணம் இருக்கிறது. தன்னுடைய கைகளிலிருந்து உருவாகிக்கொண்டிருப்பது தான் நினைத்ததைவிடப் பெரிய ஒன்று என்பதை உணரும் தருணம். தியாகராஜாவை எழுதும்போது எனக்கு அப்படிப்பட்ட தருணங்கள் பலமுறை நிகழ்ந்தன.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருநூற்று ஐம்பது பக்கங்கள் எழுதியும் ஏன் தொடர முடியவில்லை என்பதற்கான காரணம் இப்போது ஓரளவு புரிகிறது. அப்போது தியாகராஜரைப் பற்றிய தகவல்கள் என்னிடம் இருந்தன. ஆனால் அவரது சங்கீதத்தின் வழியாக அவரது அக உலகத்துக்குள் நுழைவதற்கான திறப்பு அப்போதுஎனக்குக் கிடைக்கவில்லை போலும்.
இந்த மூன்று மாதங்களில் அந்தத் திறப்பு நிகழ்ந்தது.
தியாகராஜர் தன்னை ஒரு சங்கீத மேதையாக நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கீர்த்தனைகளைப் பாடவில்லை. அவருக்கு ராமனிடம் சொல்ல வேண்டியிருந்தது. ராமனிடம் பேசினார். ராமனிடம் முறையிட்டார். கோபித்துக்கொண்டார். கெஞ்சினார். சண்டையிட்டார். கேள்வி கேட்டார். ஆனந்தத்தில் திளைத்தார். அந்த உரையாடல்களின் விளைவாக உலகின் மகத்தான சங்கீதம் பிறந்தது.
நானும் ஒரு மகத்தான நாவலை எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கவில்லை. தியாகராஜரின் கதையைச் சொல்ல வேண்டும் என்று மட்டுமே தொடங்கினேன். அவரது கீர்த்தனைகளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவை என்னை அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்றேன்.
இறுதியில் நான் நினைத்துப் பார்த்திராத ஒரு படைப்பு உருவாகியிருக்கிறது.
ஆனால், இது என்னுடைய சாதனை அல்ல. முழுக்க முழுக்க இதற்குக் காரணமாக இருந்தது தியாகராஜர் மட்டுமே.
