தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருந்த போது ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் வேளையில் ஸ்ரீராமுக்கும் இன்னொரு நண்பருக்கும் அதுவரை எழுதிய நாவலை ஒட்டு மொத்தமாக அனுப்புவது என் வழக்கம். தினமும் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் சேரும். சேரச் சேர தினமுமே அனுப்புவேன். அவர்களுக்கு நான் ஏன் அப்படி தினமும் அனுப்புகிறேன் என்று சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கும் புரிந்திருக்காது.

எனக்கு என்னுடைய மரண காலம் தெரியும். என்றாலும் என் உயிரை விட மேலான இந்த நாவலில் எந்தப் பிரச்சினையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றே தினமும் அனுப்பிக்கொண்டிருந்தேன். அதாவது, அன்றைய தினம் என் உடலை விட்டு நான் நீங்குகிறேன் என்றால் அதுவரையிலான நாவல் வெளிவந்து விட வேண்டும் என்ற திட்டம்தான். முழுமையாகத்தான் இருந்தது. பாதியில் இல்லை. புதிய அத்தியாயச் சேர்ப்பு என்பது நாவலை எந்த விதத்திலும் பாதிக்காது. நாவலை முழுமையாக முடித்து அனுப்பிய பிறகு, இப்போது அனுப்புவதை நிறுத்தி விட்டேன். இப்போது செய்வதெல்லாம் சில நுணுக்கங்களைச் சேர்ப்பதுதான்.
இப்படி இதுவரை வேறு எந்த நாவலுக்கும் செய்ததில்லை. ராஜேஷ் நாவலைப் படித்து விட்டு ஒரு மதிப்புரை எழுதி அனுப்பியிருக்கிறார். அதை நாவல் வெளிவந்த பிறகு வெளியிடலாம் என்று இருக்கிறேன். ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடலாம். நாவலை முடித்த பிறகு ஒரே துக்கமாகி விட்டது என்றார். அப்படி இருக்காதே, பரவசமாக அல்லவா இருக்க வேண்டும், அதனால்தானே இறுதி அத்தியாயத்திற்கே அம்ருதம் என்று தலைப்பிட்டிருக்கிறேன், ஒவ்வொரு அத்தியாயமுமே அம்ருதம்தானே, இந்த நாவலுக்கே அம்ருதம் என்றல்லவா நான் பெயர் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் என் மனதில் ஓடியது. ஆனால் அவரே பதில் சொல்லி விட்டார். இந்த நாவல் அம்ருதம். இதை முடித்த பிறகு இது என்னை விட்டுப் போய் விட்டதே. அந்த அம்ருதத்திலேயே அல்லவா நான் இரண்டு மூன்று தினங்களாக இருந்தேன், இப்போது இல்லையே, அதுதான் துக்கத்தின் காரணம் என்றார்.
அதனால் இன்னும் இரண்டொரு தினங்களில் மீண்டும் அந்த அம்ருதத்தில் மூழ்கப் போகிறேன் என்றார்.
இதைப் போலவே இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள் என நம்புகிறேன். அட்டைப் படத்தில் ஒரு சின்ன பிழை இருந்தது. அதைத் திருத்தி இப்போது மீண்டும் ஒருமுறை.