நேற்றும் முந்தாநாளுமாகச் சேர்ந்து ஒரு பதினைந்து மணி நேரம் எழுதினேன். நாலைந்து அத்தியாயங்களை முடித்து விடலாம் என்று திட்டம். பார்த்தால் ஒரே ஒரு அத்தியாயம்தான் முடிந்தது. அதுவும் இரண்டாயிரம் வார்த்தைகள் கூட வரவில்லை. நாவல் அத்தனை இறுக்கமாக இருக்கிறது. தினமும் நான்கு மணி நேரம்தான் உறங்குகிறேன். ஆனால் காலை நடைப்பயிற்சியை மட்டும் விடுவதில்லை.
என்னுடைய பதினேழாவது வயதிலிருந்து முப்பது வயது வரை தினமும் பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் பழக்கம் இருந்தது. நாகூரிலும் தில்லியிலும் அதற்கேற்ற பெரிய மைதானங்கள் இருந்தன. சென்னை வந்த பிறகு அந்தப் பழக்கம் விட்டுப் போயிற்று.
இப்போது தியாகராஜாவின் ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதி முடிக்கும்போதும் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரம் ஓடி முடிப்பதைப் போல் இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கோருவதாக இருக்கிறது நாவல். இதற்கிடையில் ஏற்கனவே நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த 150 பக்கங்களும் கிடைத்தன. அதிர்ஷ்டம்தான்.
இதையெல்லாம் எதற்காக எழுதுகிறேன் என்றால், நண்பர்கள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்க, என் முகவரியைக் கேட்கிறார்கள். சிலர் நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார்கள். தியாகராஜாவை முடிக்கும் வரை என்னால் எதுவுமே செய்ய இயலாது.
ஒரு சம்பவம் சொல்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக என் நூல்கள் – இருபது இருக்கும் – மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. சுமார் பத்து வெவ்வேறு பதிப்பகங்கள். இதுவரை யாரும் ஒரு நயாபைசா ராயல்டி கொடுத்ததில்லை. ஃபோன் செய்து கேட்டால், உங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள் சேட்டன்கள். அதனால் நான் ராயல்டி பற்றிப் பேசுவதே இல்லை. ஒரே ஒரு விதிவிலக்கு, கேரளத்தின் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்க பதிப்பகம். அவர்கள் மட்டுமே 25000 ரூ. கொடுத்தார்கள். எக்ஸைல் நாவலுக்கான முன்பணம். அதன் பிறகு ராயல்டி எதுவும் வரவில்லை. ஏதோ அதுவாவது கொடுத்தார்களே என்று சந்தோஷப்பட்டேன். மற்றவர்களிடமிருந்து பேச்சு மூச்சு இருக்காது.
பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு பதிப்பகத்திலிருந்து ஒப்பந்தம் வந்தது. படித்துப் பார்க்க நேரம் இல்லை. கையெழுத்து வேண்டும் என்றார்கள். ஒரு காகிதத்தில் கையெழுத்துப் போட்டு, அதைப் புகைப்படம் எடுத்து, அதை ஒரு நண்பருக்கு அனுப்பி, அதோடு அந்த ஒப்பந்தத்தையும் அனுப்பி, அந்தக் கையெழுத்தை அந்த ஒப்பந்தத்தில் இணைக்கச் சொல்ல வேண்டும். அதையெல்லாம் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பதிப்பாளரிடமிருந்து தினமும் ஃபோன். இப்படி நான் கேரளத்தில் முப்பது ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன். பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை.
பதிப்பாளரோ தினமும் ஃபோன் செய்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். நேற்று என் நண்பரை அழைத்து அவரையே என் பெயரில் கையெழுத்தைப் போட்டு அனுப்பி விடச் சொன்னேன். நான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் போட முடியாத ஒரு கையெழுத்தைப் போட்டு அனுப்பினார் நண்பர். ஆனால் சாரு நிவேதிதா என்று தெளிவாக இருந்தது. கையெழுத்து என்ற பெயரில் ட்ராயிங் எல்லாம் வரையவில்லை. அது போதும்.
இப்படித்தான் தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு மாதம்தான். அதற்குப் பிறகு நீங்கள் என்ன பண்ணினாலும் ஒரு சொல் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஸ்பெஷல் எடிஷனுக்காகப் பத்தாயிரம் ரூபாய் அனுப்பியவர்களுக்கு நான் பதில் கடிதம் எழுதவில்லை. அவர்கள் அது பற்றிப் பொருட்படுத்த வேண்டாம். அவர்களின் பெயரையெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன். பதில் எழுதத்தான் நேரம் இல்லை. க்ஷமிக்கவும்.