”எழுத்தாளர் சாரு நிவேதிதா (இப்ப தீர்க்கதரிசி சாரு நிவேதிதா என்று சொல்லலாம்) எப்பவும் படபடன்னு வெடிக்கிற மாதிரி கட்டுரை எழுதுவாப்டி. அதுல ஏதோ ஒரு உண்மை இருக்கிற மாதிரி தோணும். அதே சமயத்தில் இவர் ரொம்ப அதீதமா சொல்றாரோன்னு ஒரு சந்தேகமும் வரும். இப்போது அந்த சந்தேகத்தின் மேல எனக்கு சந்தேகம் வந்திருச்சு. வாழ்த்துகள் சார்.”
மேற்கண்ட பதிவு ஃபேஸ்புக்கில் சந்திரா தங்கராஜ் எழுதியிருப்பது. என் மீது மதிப்பு வைத்திருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் எழுத்தாளர்களில் சந்திராவும் ஒருவர். சந்திராவுக்கு நன்றி.
காலையிலிருந்து ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எல்லாவற்றுக்கும் காரணம், தேர்தலுக்கு முன் தினம் நான் வெளியிட்ட யுட்யூப் வேண்டுகோள்தான். மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். எவ்வளவு கிடைத்தது என்று ஒருத்தர் அவதூறு பண்ணியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக விஜய்-ஐ என் அளவுக்கு விமர்சித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் திமுக ஆட்சி முடிந்தே ஆக வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களைப் போல் நானும் நினைத்தேன்.
திமுக ஆட்சி முடிந்து விடும் என்று நான் தீர்மானமாக முன்னறிவித்தற்கு ஒரு முக்கியமான அறிகுறியே காரணமாக இருந்தது. ஏன் நான் அந்த யூட்யூப் அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடவில்லை? ஏனென்றால், விஜய்தான் வெற்றி பெறுவார், அவர்தான் முதல்வர் ஆவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேர்தலுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தெளிவாகத் தெரிந்து விட்டது. எல்லா விளிம்பு நிலை மக்களும் தத்தம் ஊருக்குக் கிளம்பினார்கள். எங்கே என்று கேட்டால் ஓட்டுப் போடுவதற்கு என்றார்கள். ஏதோ பெரிய Exodus போல் தெரிந்தது. இது போல் இதுவரை நடந்ததில்லை. மக்கள் ஏதோ போனால் போகிறது என்றுதான் வாக்குச்சாவடிக்குப் போவார்கள். பெரும் தயக்கம் தெரியும். ஆனால் இப்போது அவர்களிடம் ஒரு ஆவேசம் தெரிந்தது.
திமுகவின் வீழ்ச்சிக்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஒன்று, உதயநிதி. இரண்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலின் வந்தார் என்றால், ஸ்டாலின் அந்த அளவுக்குக் கட்சிப் பணி ஆற்றினார், உழைத்தார். அதை மக்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் உதயநிதி அப்படி இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் உதயநிதி முன்னிலைப்படுத்தப் படாமல் இருந்திருந்தால், இன்னும் பத்து ஆண்டுகளில் அவர் முதல்வராக ஆக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏதோ வாழ்நாள் பூராவும் நாமேதான் ஆளப் போகிறோம் என்ற மமதை திமுகவினருக்கு இருந்ததால்தான் இந்த வீழ்ச்சி நிகழ்ந்தது.
இந்த வீழ்ச்சிக்கு அடுத்த காரணம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஒரு ஆட்சி விழ முடியும் என்பதற்கு இந்தத் தேர்தலும், இந்த ஆட்சி மாற்றமும் ஒரு உதாரணம். அதிலும் சென்னை ரவுடிகளின் கையில்தான் இருந்தது. ரவுடிகள் என்பதற்கு இப்போது புதிய அர்த்தம் வேறு வந்து விட்டது. பதினைந்து பதினாறு வயதிலிருந்து இருபத்தோரு வயது வரையிலான பொடியன்கள் கஞ்ஜாவைப் போட்டு விட்டு சாலையில் போவோர் வருவோரையெல்லாம் வெட்டுவது. என்னய்யா ஆட்சி இது? ஆட்சியாளர்களெல்லாம் என்ன புடுங்கிக்கொண்டா இருந்தீர்கள்? மக்கள் கேட்டார்கள். ஆவேசமாக வாக்களித்தார்கள் விஜய்க்கு.
இதை கவனித்துச் சொல்ல பெரிய தீர்க்கதரிசனமெல்லாம் தேவையில்லை. எதார்த்தம் என்ன என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் பார்க்க வேண்டும்.
ஞாபகப்படுத்துகிறேன். 2011 தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின. சோவே அப்படித்தான் நினைத்தார். நான் அப்போது துக்ளக்கில் அரசியல் தவிர்த்து மற்ற விஷயங்களை எழுதிக்கொண்டிருந்தேன். பத்திரிகை முழுக்கவும் அரசியல் என்பதால் நான் அரசியல் எழுதக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். ஆனாலும் அந்த வாரம் அரசியல் எழுதினேன். திமுக 25 இடங்கள் பெறும் என்று எழுதினேன். சோ என்னை நேரில் அழைத்து “என்ன சார் இது, அதிமுககாரங்களை விட பயங்கரமா எழுதியிருக்கீங்க, நூறு சீட்டாவது வரும்கிறது என் யூகம், கட்டுரையை மாற்றி எழுதுறீங்களா?” என்று கேட்டார். இல்லை, அப்படியே போடுங்கள் என்றேன். திமுக வென்ற இடங்கள் 23.
தேர்தல் முடிவுகளாக இருந்தாலும் சரி, மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் சரி, என் விருப்பம் என்ன என்று நான் கவனிப்பது இல்லை. எதார்த்தம் என்ன என்று மட்டுமே பார்க்கிறேன். மற்றவர்கள் அதில் தம் விருப்பங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.