டியர் சாரு,
சற்று முன்பு நீங்கள் எழுதியிருந்த முற்பகல் செய்யின் படித்தேன். ஒரு சந்தேகம். உங்களிடம் உரையாடல் சாத்தியம் என்பதால் மட்டுமே இதைக் கேட்டு எழுதுகிறேன். இதற்கும் நீங்கள் மன உளைச்சலாகி விட்டால் அப்புறம் எனக்கு அந்தப் பழி வந்து சேர்ந்து விடும். உங்கள் நண்பர் (நண்பி?) சொன்னது போல், நானும் ஏற்கனவே எக்கச்சக்கமான சாபங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விமோசனத்துக்குத்தான் வழியில்லை. இதை என்னுடைய சந்தேகம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். மன உளைச்சல் வேண்டாம்.
விஷயத்துக்கு வருகிறேன். நீங்கள் என்ன மடத் தலைவரா? உங்களோடு உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் விவாதிக்கக் கூடாதா? விவாதத்தில் சூடு பறக்கக் கூடாதா? நீங்கள் தவறே செய்ய மாட்டீர்களா? தவறு செய்தால் நட்பு கருதி அதைச் சுட்டிக் காட்டினால் மன உளைச்சல் ஆகி விடுவீர்களா? அப்படிப்பட்ட தொட்டாற்சுருங்கியா நீங்கள்? நீங்கள் யாரையும் புண்படுத்த மாட்டீர்களா? இம்சை தர மாட்டீர்களா?
மீண்டும், உங்களுக்குப் பிடித்த வார்த்தையான விநயத்துடன் கேட்டுக் கொள்கிறேன். மன உளைச்சல் அடையாதீர்கள். இவை என்னுடைய சந்தேகங்கள் மட்டுமே.
திவ்யா, மதுரை.
டியர் திவ்யா,
வெளிப்படையாகக் கேட்டதற்கு நன்றி. என் வாசகர் வட்டச் சந்திப்புகளில் அதிகம் மொத்துப் படுவது நான்தான். அதை நீங்கள் நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவீர்கள்.
நானும் புண்படுத்துவேன். இம்சிப்பேன். ஆனால் அதற்குப் பதிலாக டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி ஆளைக் காலி பண்ணாதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். பல நூறு முறை எழுதியதையே மீண்டும் எழுதுகிறேன். எழுத்துக்கென்று ஒரு ரௌத்ரம் உண்டு. எழுத்து நெருப்பு அக்னி. ஒரு காதலன் தன் மீது கோபத்தில் இருக்கும் காதலிக்கு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி அந்தக் கோபத்தைத் தீர்க்க நினைத்தால் அது ப்ரேக் அப்புக்கு மட்டுமே வழி வகுக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தொலைதூரத்து நண்பர். பேசினால் சாரூஊஊஊஊஊ என்று தன் பிரியத்தையெல்லாம் ஒரே ஊ மயமாய் வெளிப்படுத்துவார். நேரிலும் அப்படியே. மெஸேஜ் பண்ணினால் k இல்லாவிட்டால் ok. எழுத்துக்கு இருக்கும் வன்மையைப் பாருங்கள்.
வருத்தமோ கோபமோ இருந்தால் ஃபோனில் அழையுங்கள். பேசுங்கள். பிரச்சினை இல்லை. மெஸேஜாக அனுப்பினால் கதை கந்தல். எழுத்து நெருப்பு. எதிராளியை சுட்டுப் பொசுக்கி விடும். மேலும், நான் ஹைப்பர் சென்ஸிடிவ் பேர்வழி அல்ல. எடுத்ததற்கெல்லாம் மன உளைச்சல் அடைய மாட்டேன்.
நானே எழுபத்து மூன்று வயதிலும் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். எதற்கு? என் நாவல்கள் ஆங்கிலத்தில் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக. லட்சக்கணக்கில் செலவாகிக்கொண்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு ராயல்டி ஒன்றரை லட்சம் வருகிறது. ஆனால் நான் மொழிபெயர்ப்புக்கு மூன்று லட்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் எழுபத்து மூன்று வயதிலும் பிச்சை எடுக்கிறேன். தியாகராஜர் தன்னுடைய எழுபத்தைந்து வயதுக்கு மேல் என்று நினைக்கிறேன், இந்த வயதிலுமா நான் உப்பு புளி மிளகாய்க்காகப் பிச்சை எடுத்து வாழ வேண்டும், என்னை உன் அருகில் எடுத்துக் கொள்ள மாட்டாயா என ராமனிடம் இறைஞ்சி ஒரு கீர்த்தனை பாடுகிறார். நான் ராமனிடம் செல்ல விரும்பவில்லை. எனக்கு நிறைய வேலை பாக்கியிருக்கிறது. இன்னும் ஐந்தாறு நாவல்களை முடிக்க வேண்டும். ஆனால் தியாகராஜர் மாதிரியேதான் நானும் இறைசக்தியிடம் கேட்கிறேன், ஏய்யா, இப்படி எழுபத்து மூன்று வயதிலும் நான் பிச்சைதான் எடுத்துப் பிழைக்க வேண்டுமா? இந்தப் பிச்சையிலிருந்து விடுதலையே கிடையாதா? இருபத்தைந்தாயிரம் புத்தகங்களையும் தூக்கிக்கொண்டு வருடா வருடம் வாடகை வீடு தேடித்தான் அலைய வேண்டுமா? ஜோடிப் புறா எண்பது பிரதி விற்றிருக்கிறது. 4800 ரூபாய் ராயல்டி. என்னடா தலையெழுத்து இது? இந்த நிலை மாறவே மாறாதா என்று நான் கதறிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் வந்து ஒருத்தன் பத்தாயிரம் கடன் கேட்கிறான் என்றால் அவனை என்ன செய்யலாம்? அவனை சாபம் வந்து சூழுமா சூழாதா?
சாரு