மேற்கண்ட முதுமொழியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். ஏனேன்றால், இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை எனக் கருதப்படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது. பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், தர்க்கத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை.
அகோரா என்ற மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விமலானந்தா என்று ஒரு அகோரி வருகிறார். அவருக்கு காளி எதிர்காலத்தையும் அறியும் சக்தியை அளிக்கிறாள். அதன் காரணமாக, உயிருக்கு உயிராக நேசித்த அவர் மகன் ஒன்பது வயதிலேயே இறந்து விடுவான் என்று அவருக்குத் தெரிகிறது. அதேபோல் நிகழ்கிறது சிறுவனின் மரணம். கிடைத்தது வரம் அல்ல, சாபம் எனப் புரிகிறது அவருக்கு.
நான் அகோரியும் அல்ல, ஒரு மயிரும் அல்ல. ஒரு சாதாரண ஆள். ஆனால் சாதாரண ஆட்களிடம் இருக்கும் பல குண விசேஷங்கள் என்னிடம் இல்லை. பணம், புகழ், அதிகாரம், பெண், மண் போன்ற எதன் மீதும் ஆசை இல்லை. மரணம், எதிர்காலம், பணம் போன்ற எது குறித்தும் அச்சம் இல்லை. இழப்பு குறித்தும் துக்கம் இல்லை. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இக்கணத்திலே இன்புற்று வாழ்பவன் நான்.
அதனாலோ என்ன வெங்காயமோ, எனக்கு சில சமயங்களில் எதிர்காலம் தெரிந்து விடுகிறது. தேர்தலுக்கு முன்பே விஜய்தான் முதல்வர் ஆவார் என்று இந்தியாவிலேயே கணித்த ஒரே ஆள் அடியேன்தான். மற்ற இரண்டு இடம், தேர்தல் முடிந்த பிறகே விஜயின் வெற்றியைக் கூறின. ஒன்று, தேர்தல் கணிப்பு நிறுவனம். பல கோடி செலவு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு விஜயின் வெற்றியை அறிவித்தது. இன்னொருவரும் அதே ரீதியில் சொன்னார். இரண்டுமே தேர்தல் முடிவுக்குப் பிறகு வந்த கணிப்புகள்.
அதாவது, இப்படி ஒன்று நடக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாத போது சொல்வதே கணிப்பின் உச்சம். அப்படிப்பட்ட நிலையில் எனக்குத் தெரிந்து விடுகிறது. எப்படித் தெரிகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
அதேபோல் எனக்கு யாரேனும் மன உளைச்சல் கொடுத்தால் அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் துல்லியமாகத் தெரிந்து போகிறது. யார் எனக்கு மன உளைச்சல் கொடுக்க முடியும்? நெருக்கமானவர்கள்தான். நெருக்கமானவர்களுக்குப் பாதகம் நடந்தால் அது என்னைத்தானே அதிகம் பாதிக்கும்? சொல்லிப் பார்த்தாலும் யாரும் கேட்பதில்லை.
சமீபத்தில் அப்படி இரண்டு சம்பவங்கள் நடந்தன. இரண்டுமே எனக்கு மிகத் துல்லியமாக முன்கூட்டியே தெரிந்து விட்டது. என்ன செய்ய முடியும்? சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல முடியாது. இறைசக்தியிடம் பிரார்த்தனை மட்டுமே செய்து கொள்ள முடியும். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் எதுவும் பாதகம் நடக்கக் கூடாது. அதையும் மீறி நடந்து விடுகிறது. விஷத்தை விலைக்கு வாங்கி ஜிகிர்தண்டா குடிப்பது போல் குடித்தால் என்ன நடக்கும்?
நண்பர் சொன்னார், எனக்கு சாபம் கொடுக்காதீர்கள்; ஏற்கனவே நான் பல சாபங்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
”இல்லை, சபிக்கக் கூடிய அளவுக்கு நான் கொடியவன் அல்ல. எல்லோர் மீதும் பிரியம் கொண்டவன். எல்லோரும் இன்புற்றிருப்பதற்காகவே நான் எழுதுகிறேன். என் வாழ்க்கையின் செய்தியும் அதுதான். இது தவிர, எல்லோருக்காகவும் இறைசக்தியிடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவன்; நீங்கள் சுய அபிமானம் கொள்ளுங்கள், ஏனென்றால், தன்னை நேசிப்பன் பிறரை இம்மியளவும் இம்சிக்க மாட்டான்” என்றேன் நான்.
ஒரு அன்பர். குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார். பலமுறை சொன்னேன். குடைச்சல் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு உபாயமும் சொன்னேன். என் எழுத்தைப் படிக்காதீர்கள். என்னோடு பேசாதீர்கள். இருவருக்கும் நல்லது. கேட்கவில்லை. அவரது தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்தால், ஃபேஸ்புக்கில் போய் என்னை அவமதிக்கிறார். என் பெயர் சொல்லியே அவமதிப்பு நடக்கிறது. குடைச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது. கடைசியில் அது நான் ஒரு பித்தலாட்டக்காரன் என்று எனக்கே மின்னஞ்சல் செய்து தெரிவிப்பதில் போய் முடிந்தது. விளைவாக பெரும் காரியம் ஒன்று நிகழ்ந்து இப்போது ஓம் ஷாந்த்தி ஓம். இதெல்லாம் தேவையா?
உங்கள் மீது உங்களுக்கே கருணையும், அன்பும், அபிமானமும் இருந்தால் என் மீது வன்முறையைப் பிரயோகிக்காதீர்கள். கல்லடியை விட சொல்லடியின் வாதை அதிகம். என் பிரியத்துக்குரிய ஒருவருக்கு ஒரு ஆள் செய்வினை செய்தான். விளைவு அந்தப் பெண்மணிக்குப் பைத்தியம் பிடித்தது. இருபத்தைந்து வயதிலிருந்து எண்பத்தைந்து வயது வரை பைத்தியமாகவே வாழ்ந்து மடிந்தார். ஆனால் செய்வினை செய்தவனோ குஷ்டநோயில் பீடிக்கப்பட்டு தொண்ணூறு வயது வரை அனுபவித்தான்.
என் வாழ்விலேயே நடந்த கொடுந்துயரம் என்னவென்றால், ஸீரோ டிகிரியை நான்தான் எழுதிக்கொடுத்தேன் என ஒருவன் ஒரு பிரபலமான பத்திரிகையில் எழுதியது. நான் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்தேன். அந்த நபருக்கு என்ன நடந்தது? ஊரே அறிந்த விஷயம். நான் மகிழ்ச்சி அடையவில்லை. துக்கம்தான் மேலிட்டது. ஏன் இவர் விலை கொடுத்து விஷத்தை வாங்கி அருந்தினார்? அந்த விஷத்துக்கு விஷ முறிவும் அவரிடமே இருந்தது. ”என்னை மன்னியுங்கள், ஏதோ அறியாமையில் சொல்லி விட்டேன்.” இதுதான் விஷ முறிவு. விஷத்தை ஆர்வமாக விழுங்கியவர் விஷ முறிவை எடுக்கவில்லை. ஆணவம் ஆளைப் படுக்கையில் வீழ்த்தியது.
இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைப் படித்த போது இது எல்லாம் ஞாபகம் வந்தது. அந்த அன்பருக்காக இப்போது மிக ஆழ்ந்து பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Dear சாரு,
நான் தங்களின் தேர்ந்த வாசகன். நீங்கள் எழுதிய அத்தனை புத்தகங்களையும் வாசித்தவன். வலைத்தளத்தில் நீங்கள் எழுதுவது வரை. கடைசியாக ‘பேச்சு’ தானே? தற்சயமம் தஸ்தாவெஸ்கி போல் சூதாடி சூதாடித் தோற்றுப் போய்க்கொண்டே இருக்கிறேன். லாட்டரி சூதாட்டம். நானே பிச்சையெடுத்து அதில் பாதியை தங்களுக்கு அனுப்பியதுண்டு. இது ஈகோவைத் தூண்டும் விஷயம். கடைசி இரு வரிகளை கழித்து விடுவோம். ‘நானே’ என்ற வார்த்தைதான் இதில் ஈகோ. அதை விடுவோம். அன்பும் கருணையும்தான் ஒரு மனிதன் கைக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள். தயவுகூர்ந்து எனக்கு வெறும் ஒரு பத்தாயிரம் ரூயாய் தந்து உதவவும். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட பின் உங்கள் கதவைத் தட்டும் ஓர் எளிய வாசகன்.
-ப்ரதீப்.