இனிமேல் கல்லூரிகளில் பேச அழைத்தால் கூச்சம் பார்க்காமல் கட்டணம் ஒரு லட்சம் என்று வெளிப்படையாகச் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி கூச்சம் பார்க்காமல் சொல்லவில்லை என்றால், கல்லூரியில் நமக்கு ஒரு பைசா தர மாட்டேன் என்கிறார்கள்.
சென்ற ஆண்டு ஒரு தனியார் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு. தமிழ்நாட்டின் முதல் இடத்தில் நிற்கும் கல்வி நிறுவனம். அங்கே ஒரு மாணவர் படிப்பதற்கு ஒரு கோடி ஆகிறது. என்னைப் பேச அழைத்தார்கள். எனக்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்டேன். எதிரே பேசியவருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும் போல. இது சேவை நிறுவனம் சார், கட்டணமெல்லாம் இல்லை என்றார். என் கட்டணம் ஒரு லட்சம். ஆனால் அதைச் சொல்லாமல் அவர்களை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு ஐந்தாயிரம் தர முடியுமா என்றேன். முடியும் என்றால் வேண்டாம், எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று சொல்லி விடலாம் என்று நினைத்துத்தான் கேட்டேன். நிர்வாகத்திடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார் அழைத்தவர். இரண்டு தினங்கள் கழித்து நான் எதிர்பார்த்த பதிலே வந்தது. ஐந்தாயிரம் கூடத் தர முடியாது, ஏனென்றால் எங்களுடையது கல்விச் சேவை நிறுவனம்.
சென்ற மாதம் வால்மார்ட்டிலிருந்து ஒரு அழைப்பு. சென்னையில் ஒரு இலக்கிய விழா நடத்த இருக்கிறோம். நீங்கள்தான் பிரதான பேச்சாளர். உங்கள் கட்டணம் எவ்வளவு?
ஒரு லட்சம்.
அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
என் சந்தேகம் என்னவென்றால், ஒரு லட்சம் டாலர் என்று நினைத்து விட்டார்களா, அல்லது, வால்மார்ட்டும் என்னைப் போல் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டதா என்பதுதான்.
ஆனால் சில கல்லூரிகளில் அழைப்பவர்கள் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட அன்பினால் அவர்களே தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து அழைக்கிறார்கள். அப்படி அழைப்பதற்கே அவர்கள் நிர்வாகத்திடம் கொஞ்சம் பணிந்துதான் கேட்க வேண்டியிருக்கிறது. சினிமா நடிகர் என்றால் நிர்வாகம் இளித்துக்கொண்டு சம்மதிக்கும். இவர் யார் எழுத்தாளர்? இவர்களையெல்லாம் எதற்கு அழைக்க வேண்டும்?
இப்படி நம் மீது அன்பு கொண்டு தனிப்பட்ட முறையில் சிரமம் எடுத்து அழைக்கப்பட்டால் அங்கே போய் பணம் கேட்க முடியுமா? என்னை அழைத்த நண்பர் நிர்வாகத்திடம் சென்று எழுத்தாளருக்கு ஒரு லட்சம் தர வேண்டும் என்று கேட்டால் நிர்வாகம் என் நண்பரை வேலையை விட்டு நீக்கி விடும்.
இதையெல்லாம் தாண்டி, நான் இலவசமாகச் சென்று பேசினால், விஜய் ரசிகர் மன்றத்திடம் போய்ப் பேசுவது போல் இருக்கிறது. பத்து பேரைத் தவிர மற்ற மாணவர்கள் அனைவருமே விஜய் ரசிகரின் தரத்திலும், அந்த அளவு புரிதலிலும்தான் இருக்கிறார். நீங்களே சொல்லுங்கள், என் வீட்டு வாட்ச்மேனிடமும், என் ஆட்டோக்காரரிடமும் நேற்று நான் பேசியதைப் பேசினால் அவர்கள் என்னை என்ன செய்வார்கள்? அதையேதான் கல்லூரி மாணவர்களும் செய்கிறார்கள்.
நான் பேசுவதன் அட்சரம் கூட அவர்களுக்குப் புரியவில்லை. காது கேளாதவர்களின் சபையில் போய் சங்கீதம் பாடுவதைப் போலவே இருந்தது எனக்கு.
இருந்தாலும் ஏன் செல்கிறேன் என்றால், யூட்யூப் மூலம் இதைப் பத்தாயிரம் பேர் கேட்கிறார்கள்.
ஆனால் இதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது, சன்மானம் இல்லாமல். குறிப்புகள் எடுப்பதற்கு ஒரு முழுநாள். இன்னொரு நாள் முழுவதும் நிகழ்ச்சியில் போய் விடுகிறது. இதை விடியோவில் பதிவு செய்வதற்கு கபிலனுக்கு நான் தான் 2000 ரூ. பணம் கொடுத்தேன். அதைக் கூட கல்லூரி நிர்வாகத்திடம் கேட்க முடியாது.
இத்தகைய சூழலில் ஒரே ஒரு விதிவிலக்கு பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கல்லூரி. காரணம், அதன் நிறுவனர் தனசேகரன் மிகத் திவிரமான இலக்கிய வாசகர். அதனால்தான் எனக்கு அங்கே அப்படி ஒரு மறக்க முடியாத வரவேற்பை அளித்தார். ஜெயமோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.
ஆனால் தமிழ்ச் சமூகம் அப்படி இல்லை. சமூகம் எழுத்தாளை பிச்சைக்காரன் என்றே நினைக்கிறது. அப்படி நினைப்பதும் ஒருவிதத்தில் சரிதான். மூவாயிரம் ஆண்டுகளாகப் பிச்சை எடுத்துப் பிழைத்துக்கொண்டிருந்த எழுத்தாளர் கூட்டத்தில் இந்த சாரு நிவேதிதா என்ற ஒரே ஒரு பயல் மட்டும் ஏன் விராட் விராட் என்று கத்துகிறான்?
நியாயமான கேள்வி.
இப்படித்தான் சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஓசியில் உழைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் ”ஜோடிப்புறாவை எங்கே காணோம்?” என்ற என் நாவலை பிடிஎஃப் இல் விற்றுக்கொண்டிருக்கிறேன். வாங்க நினைப்பவர்கள் எப்படி வாங்கலாம் என்பதற்கான விளக்கம்:
நாவலின் பிடிஎஃப் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விலை எதுவும் இல்லை. நீங்கள் தரும் நன்கொடைதான்.
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai