மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் ஒரு சிறுகதை

மனுஷா ப்ரபானி திஸாநாயக்க எழுதிய ஒஃபீலியா என்ற சிங்களச் சிறுகதையை ரிஷான் ஷெரீப்பின் அற்புதமான மொழிபெயர்ப்பில் படித்தேன்.

மனுஷா ஒரு எழுத்தாளரே இல்லை. அவள் ஒரு மந்திரவாதி. என்னென்னவோ சித்துவேலைகளைச் செய்து நம் மனதையும் கண்களையும் கட்டி விடுகிறாள். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் ஒரு காதல் தோல்வி மற்றும் அதைத் தொடரும் தற்கொலைச் செய்தியை ஒரு காவியம் போல் எழுதியிருக்கிறாள் மனுஷா. கடம்ப மலருக்கு நம்மை மயக்கும் மணம் உண்டு. அப்படித்தான் நம்மை வசியம் செய்கிறது மனுஷாவின் எழுத்து. இத்தனை செறிவாக, இத்தனை ஒயிலாக சிங்களத்தில் எழுத முடியுமா என்று ஒவ்வொரு வாக்கியத்தை வாசிக்கும்போது அதிசயித்தேன். ரிஷானிடம் தமிழ் விளையாடுகிறது. ஒரு அதியற்புத ஷெனாய் கலைஞனிடம் அந்த வாத்தியம் எப்படிக் கட்டுப்பட்டு காற்றைக் கலையாக்குகிறதோ அப்படித்தான் ரிஷானிடம் இயங்குகிறது மொழி.

மனுஷா மிகவும் அடக்கமானவள். உரையாடலின் போது ”எனக்கு எதுவுமே தெரியாது” என்றே சொல்லிப் பதுங்கி விடும் மனோபாவம் கொண்டவள் மனுஷா. ஆனால் எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ஒரு மாயக்காரியைப் போல் மறைந்து மறைந்து மின்னல் தெறிப்புகளில் பித்தம் பிடிக்கச் செய்து விடுகிறாள்.

கதையின் இடையில் என்னைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது. ரசித்தேன்.

கதையில் எனக்குப் பிடித்த ஒரு பத்தி:

”காதல் என்பது எதையும் வாரி வாரிக் கொடுப்பதேயன்றி, பாடுபட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்றே நான் கொண்டிருந்தேன். ஆனால் காதலால் பூரித்திருக்கும் மென்மையான இதயமொன்றுக்கு அந்த விசுவாசம் என்பதே மரணத்துக்கு ஒப்பானதொரு தண்டனைதான். அத்தனை காலமும் அனைத்தையுமே காதல் என்று நானாகத் தீர்மானித்து, வீணாகக் கற்பனை பண்ணிக்கொண்டு கையிலில்லாத மாயக்கரண்டியால் அவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவாறே தனியாக மகிழ்ந்து கொண்டிருந்தேன் நான்.”