என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீனி, ராஜா (காஞ்சீபுரம்), ராஜா வெங்கடேஷ், வெங்கடேஷ், டாக்டர் பாஸ்கரன், ஆனந்தி, வளன் அரசு, சதீஷ் – 1, சதீஷ் – 2, புவனேஸ்வரி, குமரேசன் – 1, குமரேசன் – 2, செக்கந்தர், நிர்குண், வர்ஷா, ஸ்ரீராம், செல்வா, பாக்யராஜ், சங்கரி, சித்தார்த், சுரேஷ் – 1, சுரேஷ் – 2, ஸ்ரீதர், ப்ரவீன் மற்றும் சிலர். சிலரது பெயரை காரணம் கருதி இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் யாரிடமும் நான் ஒருபோதும் பணம் கேட்டதில்லை. என்றாலும் நான் இப்போது எது குறித்தும் எந்தக் கவலையும் இல்லாமல், என் எழுத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு வாழ்வதற்கு இவர்கள்தான் காரணம். என் தேவை அனைத்தையும் கவனித்துக் கொள்பவர்கள் இவர்கள்தான். இதில் என்னுடைய அமெரிக்க நண்பர்களை சேர்க்கவில்லை. அவர்கள் ஒரு பத்து பேர் இருப்பார்கள்.
இந்த நட்பு வட்டத்துக்கு சற்று வெளியேயும் சில நண்பர்கள் உண்டு. சமீபத்தில் நான் ஜோடிப்புறா நாவலை பிடிஎஃப் மூலம் விற்றேன். அதில் ஒரு நண்பர் இரண்டாயிரம் ரூபாய் அனுப்பி நாவலைப் பெற்றுக்கொண்டார். அவர் ஒரு செல்வந்தர். எக்ஸ் என்று நாமகரணம் சூட்டுவோம். பவானியில் வசிக்கிறார்.
ஒரு வாசகி. தோழியும் கூட. பெண்கள் விடுதியில் தங்கி அரசுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார். மத்தியதர வர்க்கம். அவர் தந்தை அவர் செலவுக்கு மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறார். அந்த ஐநூறில் அந்த மாணவி எனக்கு நூறு ரூபாய் அனுப்புகிறார். வேண்டாம் தாயே என்றேன். கேட்கவில்லை. ஏற்றுக்கொண்டு வருகிறேன்.
பவானியில் வசிக்கும் ஒரு மாணவன் நூறு ரூபாய் அனுப்பி ஜோடிப்புறா நாவலின் பிடிஎஃப் கேட்டான். அனுப்பி வைத்தேன். நேற்று பவானியில் இருக்கும் ராஸ லீலா பதிப்பகத்துக்குச் சென்று நான் எழுதிய இரண்டு நூல்களை வாங்கியிருக்கிறான். அவனுக்கு வர்ஷா ஐம்பது சதம் தள்ளுபடியில் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்.
இப்போது நான் ஒரு வார காலம் பவானி செல்கிறேன். அப்போது பவானியில் வசிக்கும் அந்த எக்ஸ் என்ற நண்பர் அவர் இல்லத்துக்கு என்னை அழைத்திருக்கிறார். என் மீதுள்ள அன்பின் காரணமாகத்தான் அழைக்கிறார். எந்த சந்தேகமும் இல்லை.
எனக்கும் கமல்ஹாசனுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. அது, பணம். அவருக்கு எத்தனை கோடி கிடைத்தாலும் அதை அவர் சினிமாவில்தான் போடுவார். நானும் அப்படியே. எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை என் எழுத்துப் பணிக்குத்தான் செலவிடுவேன். எழுத்துப் பணி என்றால் அதில் பயணமும் சேர்த்தி. பல சமயங்களில் என் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்று பல நாடுகளின் வீசா மறுக்கப்படுகிறது என்பதால் ஒருமுறை செலவே செய்யாமல் சேர்க்க ஆரம்பித்தேன். இருபத்தைந்து லட்சம் சேர்ந்தது. ஆஹா, இனிமேல் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகலாம் என்று சந்தோஷப்பட்டேன். அப்போதுதான் விஷ்ணுபுரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. என் வாழ்க்கையை வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்தோம். செலவு இருபத்தைந்து லட்சம். எல்லாம் என் வாசகர்கள் எனக்காகக் கொடுத்தது. அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ”இதற்கா இருபத்தைந்து லட்சம், சாரு பொய் சொல்கிறார்” என்பார்கள். நீங்கள் பார்ப்பது ஐம்பத்தைந்து நிமிடம். ஆனால் அது மூன்று மணி நேரப் படம். இன்னும் எடிட்டிங், இசை என்று பாக்கியிருப்பதால் மூன்று மணி நேரப் படத்தையும் வெளியிட முடியவில்லை. ஆனால் ஐம்பது நிமிடப் படம் தயாராக இருக்கிறது. விரைவில் தெ அவ்ட்ஸைடர் யூட்யூப் சேனல் மூலம் அது உங்களுக்குக் கிடைக்கும். ஐநூறு ரூபாய் செலுத்தி நீங்கள் அதைக் காணலாம். எத்தனை பேர் பார்ப்பீர்கள்? ஒரு நூறு பேர். ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும். இருபத்தைந்து லட்சம் செலவு செய்து ஐம்பதாயிரம்.
ஆனால் அது பிரச்சினையே இல்லை. ஏனென்றால், மிகவும் colourful ஆக வாழ்ந்த சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி பற்றிய ஆவணப்படம் கூட சீனி என்னைப் பற்றி எடுத்த ஆவணப்படத்தின் அருகில் நெருங்க முடியாது. சர்வதேச அளவில் ஒரு எழுத்தாளன் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படங்களில் சீனி என்னைப் பற்றி எடுத்த தெ அவ்ட்ஸைடர் படம்தான் முதலில் நிற்கும். எழுத்தாளர்கள் பற்றி எடுக்கப்பட்ட அத்தனை ஆவணப்படத்தையும் நான் பார்த்து விட்டேன். அதனால் இதை என்னால் மிக உறுதியாகச் சொல்ல முடியும். ஒரே ஒரு விதிவிலக்கு என்றால், Mishima: A Life in Four Chapters (1985), directed by Paul Schrader என்ற படத்தை மட்டுமே சொல்லலாம். இரண்டு மணி நேரப் படம். அதை எடுக்க ஐம்பது கோடி ரூபாய் செலவானது. அதைத் தவிர வேறு எந்தப் படத்தையும் தெ அவ்ட்ஸைடருக்கு நிகராகச் சொல்ல முடியாது.
துருக்கி சென்றேன். இரண்டு லட்சம் ரூபாய் செலவு. என்னுடைய துருக்கி பயணக் கட்டுரை நூலைப் போல் (நிலவு தேயாத தேசம்) ஒரு பயண நூல் எந்த மொழியிலாவது எழுதப்பட்டிருக்கிறதா, சொல்லுங்கள்?
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், எனக்குக் கிடைக்கும் பணம் இப்படித்தான் செலவாகிறது.
ஆக, என் புத்தகத்துக்கு நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பது உங்கள் உரிமை. உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் இல்லத்துக்கு என்னை அழைத்தால் நான் எப்போது வர முடியும் என்றால், நீங்கள் குறைந்த பட்சம் பத்தாயிரமாவது அனுப்பி ஜோடிப்புறாவை என்னிடமிருந்து வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நீங்கள் அழைத்த மறுவிநாடியே வந்திருப்பேன். ஆனால் பணத்துக்குக் கணக்குப் பார்ப்பவர்களின் இல்லத்துக்கு நான் எப்படி வர முடியும்? ஐநூறு ரூபாயில் நூறு ரூபாயை அனுப்புகிறாளே ஒரு மாணவி, அப்படிப்பட்ட நிலையில் வாழவில்லையே நீங்கள்?
ஒரு நண்பர். சமீபத்தில் இறந்து விட்டார். அவருடைய ஐநூறு கோடி ரூபாய் சொத்தை அனுபவிப்பதற்காக அவருடைய சொந்தக்காரர்கள் ஊர் சிரிக்க அடித்துக்கொண்டு மாய்கிறார்கள். அவரோடு நான் பழகிய காலம் மிகவும் இனிமையானது. அப்போது நான் மதுவை நிறுத்தியிருந்தேன். ஆனாலும் இரவு முழுவதும் பேசுவோம். ஒருநாள் ”உங்களுடைய எக்ஸைல் நாவல் பற்றிக் கேள்விப்பட்டேன், படிக்க விரும்புகிறேன்” என்றார். கொடுத்தேன். மூன்றே நாளில் படித்து விட்டு ஒருநாள் காலையில் தொலைபேசியில் அழைத்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்த நாவல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எடுத்திருந்த ஓல்ட் மேன் திரைப்படத்திலும் எக்ஸைலின் சாயல் உண்டு.
அவ்வளவுதான். ஐநூறு கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி அந்த நாவலுக்காக என்ன செய்திருக்க வேண்டும்? அந்த நாவலின் விலை ஆயிரம் ரூபாய். எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டுமா, இல்லையா?
அப்படி நடந்திருக்கிறது. ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் தனக்குப் பிடித்த கதையை எழுதிய எழுத்தாளரின் வீட்டுக்கே சென்று பண முடிப்பைக் கொடுப்பார் என்று படித்திருக்கிறேன். பாலகுமாரன் விஷயத்தில் நேரிலேயே பார்த்திருக்கிறேன். செங்கல் செங்கல்லாக பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். அவர் அதைக் கையால் கூடத் தொடாமல் அவர் குருவின் படத்தின் எதிரே வைக்கச் சொல்வார்.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். பவானி நண்பர் தன் இல்லத்துக்கு என்னை அழைக்கிறார். செல்வந்தர். ஜோடிப்புறாவுக்கு இரண்டாயிரம் ரூபாய் தந்தார். ஆனால் இன்னும் ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் வந்த என்னுடைய புத்தகங்கள் ஒன்றைக் கூட வாங்கவில்லை. நான் எப்படி அவரது அழைப்பை ஏற்பது, சொல்லுங்கள்?
ஆன்மீக குருவை லட்சக்கணக்கானவர்களோடு கும்பலோடு கும்பலாகப் பார்ப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் கட்டணம். தனியாகப் பார்ப்பதென்றால், ஐந்து லட்சமோ பத்து லட்சமோ. அவர் உங்கள் வீட்டுக்கு வருகை தருகிறார் என்றால் எத்தனை லட்சம் என்று தெரியவில்லை. இந்தப் பணமெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக என்பார். தினமும் அன்னதானம், ஏழைகளுக்குக் கல்வி, இன்ன பிற.
ஆனால் நான் – ஊதியமே இல்லாமல் வேலை செய்கிறேன். யூட்யூப் பேச்சுக்கள் எல்லாமே இலவசம். எழுத்து இலவசம். ராயல்டி ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய். மாதம் பத்தாயிரத்துக்குக் கீழே. அப்படி ஒரு பிச்சைக்காரனாக வாழும் என்னை அன்பினால் உங்கள் இல்லத்துக்கு அழைக்கிறீர்கள். உங்கள் அன்பை மதிக்கிறேன். ஆனால் என் செலவுக்கு நான் என்ன செய்யட்டும்? இரண்டாயிரம் ரூபாய்தான் என் மதிப்பு என்றால் நான் ஏன் உங்கள் வீட்டுக்கு வர வேண்டும்?
ஆனால் எனக்கு இது குறித்து வெட்கம் மானம் என்று எந்த உணர்ச்சியும் கிடையாது. இப்போது கூட 25000 ரூ. என் பணிக்காகத் தாருங்கள். உங்கள் இல்லத்துக்கு வருகிறேன். என் செயல்பாடுகளுக்குப் பணம் தேவை. இப்போது கூட யூட்யூப் காணொலிக்காக ஒரு மைக் தேவைப்படுகிறது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. நீங்கள் ஏற்கனவே ஜோடிப்புறா நாவலுக்கு 10000 ரூ. அனுப்பியிருந்தால் இப்போது நீங்கள் அழைத்த மறு விநாடி மறுப்பு சொல்லாமல் வந்திருப்பேன். இப்போது அபராதக் கட்டணமும் சேர்ந்து விட்டது. மன்னியுங்கள். என்ன செய்வது? என் நிலைமை அப்படி.