சாரு நிவேதிதாவின் ‘குறியியல்’ பங்களிப்பு: ரோஜாவின் பெயர் (2)

ரஜினியிடம் எனக்குப் பிடித்த விஷயம், சினிமாத் துறையில் அவர் ஒருத்தராவது எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையில்லாதவராக இருக்கிறார்.  இந்தக் கமலைப் பாருங்கள்.  எழுத்தாளன் என்ற பிச்சைக்காரப் பிழைப்பின் மீது எத்தனை பேராசை இருந்தால் ஒரு கமர்ஷியல் இயக்குனரான ஷங்கரை எழுத்தாளர் எழுத்தாளர் என்று ரெண்டு முறை சொல்லி அறிமுகப்படுத்துவார்?  அதுகூடப் பரவாயில்லை.  ஞானக்கூத்தன் இறந்த பிறகு வெளிவந்த அவர் பற்றிய ஒரு அஞ்சலி ஆவணப் படத்தில் கமல் தன் கவிதை ஒன்றைப் படிக்கிறார்.  வாராந்தரி ராணியில் கூட அந்தக் கவிதையைப் போட மாட்டார்கள்.  அப்படி ஒரு கவிதை.  அதை பாரதியின் குரலில் படித்த கமல் அதைத் தொடர்ந்து ஒரு அதிர்ச்சி செய்தியைச் சொன்னார்.  அந்தக் கவிதையை இவர் ஞானக்கூத்தனுக்கும் படித்துக் காண்பித்திருக்கிறார்.  ஞானக்கூத்தன் ஒரு அப்புராணி கன்னட பிராமணர்.  கவிதை பிரமாதமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

நன்றாக இருந்த ஞானக்கூத்தன் ஏன் திடுதிப்பென்று இறந்தார் என்ற கேள்வி என்னை ரொம்ப நாளாகக் குடைந்து கொண்டிருந்தது.  அந்த ஆவணப் படத்தைப் பார்த்த பிறகுதான் குடைச்சல் தீர்ந்தது.  ஒரு மகத்தான கவிஞனான ஞானக்கூத்தனை இந்தத் துன்பவியல் சம்பவம் எவ்வளவு மன உளைச்சல் கொடுத்திருக்க வேண்டும்.  அதனால்தான் போய் விட்டார். 

ஆனாலும் கமல் மீது எனக்கு வருத்தம் இல்லை.  ஒருவர் எழுத்தாளனாகவும், கவிஞனாகவும் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?  எனக்குக் கூடத்தான் புக்கர் பரிசு வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது, என்ன தவறு?  நம்முடைய ஜக்கி காம்ரேட்தான் எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று சொல்கிறாரே, அப்புறம் என்ன?

அதனாலே ஒரு பேராசிரியர் – அதுவும் ஆங்கிலப் பேராசிரியர் –  எழுத்தாளனாக வேண்டும் என்று ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை.  வயது அறுபத்திரண்டு ஆனால் என்ன?  எழுபத்திரண்டில்கூட அந்த ஆசை பலிக்கலாம்.  ஆனாலும் பேராசிரியர் அவசரப்பட்டு விட்டார்.  அறுபத்திரண்டு வயதில் வந்த முதல் புத்தகம் சொந்தப் புத்தகமாக இருந்திருக்கக் கூடாதா?  மொழிபெயர்ப்புப் புத்தகமாகப் போய் விட்டது.  அதிலும் கூட எந்தத் தவறும் இல்லை.  ஆனால் ஆசிரியர் குறிப்பில் ஒருத்தர் இத்தனை தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தக் கூடாது.  இல்லையா?

ஒரு பேராசிரியர் வெளிநாட்டுக்குப் போய் விரிவுரை ஆற்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?  எல்லா விஞ்ஞானிகளும் எல்லா பேராசிரியர்களும்தான் வெளிநாடுகளுக்குப் போய் விரிவுரை ஆற்றுகிறார்கள்.  இதையெல்லாமா ஒருத்தர் ஆசிரியர் குறிப்பில் போட்டுக் கொள்வது?  எத்தனையோ தமிழ்ப் பேராசிரியர்கள் போலந்தில் போய் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள்.  அது ஒரு செய்தியா?  நீங்கள் ஒரு புத்தகம் போடுகிறீர்கள்.  அதுவும் மொழிபெயர்ப்புப் புத்தகம்.  அதில் உங்கள் இலக்கியப் பங்களிப்பு என்ன என்பதுதான் வர வேண்டும்.  அது உங்கள் debut புத்தகமாக இருந்தால் என்ன, குடியா மூழ்கிவிடப் போகிறது?

எனக்கு அந்த ஆசிரியர் குறிப்பைப் படித்ததும் எனக்கும் அப்படி ஒரு ஆசிரியர் குறிப்பு போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றியது.  அது கீழே:

சாரு நிவேதிதா

பள்ளியிறுதி வகுப்பு என்று சொல்லக் கூடிய பி.யூ.சி.யில் எல்லா பாடங்களிலும் ஃபெயில்.  தமிழ் உட்பட.

அரசுத் துறையில் ஸ்டெனோ வேலை. 

பிறகு முழுநேரக் குடியாளராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.

ஆனாலும் இதுவரை வந்த நூல்கள் 102.  அச்சில் இருப்பவை 20.

பப்களில் இளம் பெண்களுடன் ஆட்டம் போடுவதில் நாட்டம் உண்டு.

பத்துப் பன்னிரண்டு (சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்கிறார்) இளம் பெண்களைத் தோழியாகக் கொண்டவர்.

இப்போது மனம் திருந்தி ஒருத்திக்கு ஒருவனாக வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறார்.  ஆனால் இறைத் தீர்ப்பின் விளைவாக இப்போது போய் எரக்டைல் டிஸ்ஃபங்ஷன் வந்து விட்டதால் தினமும் நிலப்பனைக் கிழங்கு சாப்பிடுகிறார்.  தெ க்ரேட் ஃபக்கர் என்ற வார்த்தைகளை தினமும் கேட்டுப் பழகிய தனக்கு குட் ஃபர் நத்திங் என்று கேட்பது வேதனையாக இருப்பதாகப் பதிவு செய்கிறார்.  ஆனாலும் சித்த மருத்துவர் பாஸ்கர், யோகா குரு சௌந்தர் ஆகியோரின் வழிநடத்தலுடன் இந்தக் கடின காலத்தைத் தாண்டி விடலாம் என நம்புவதாகக் கூறுகிறார். 

வாழ்நாள் முழுவதும் குறியியலையே எழுதி வந்த சாரு நிவேதிதா இப்போது குறியின் ஒத்துழைப்பு இல்லாததால் ஒரு ஆன்மீக நாவலை எழுதி வருகிறார்.