சொல்லித் தீரவில்லை (எதிர்க் கலாச்சாரம் -3)

ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. வள்ளலாரும் நானும் சமகாலத்தில் வாழ்கிறோம். வள்ளலாரை போலீஸ் கைது செய்கிறது.

என்ன விஷயம்?

வள்ளலார் சாருவைக் கத்தியால் குத்தி விட்டார்.

ஐயோ, என்ன இது, சாரு வள்ளலாரைப் புகழ்ந்து அல்லவா எழுதிக்கொண்டிருந்தார்?

அது என்னவோ போங்க, சாருவின் TOV…

TOVன்னா?

தலையில் ஓத்த விதி!

அந்த இசை விமர்சகர் விஷயத்திலும் இதேதான் நடந்தது. மிகவும் நல்லவர். பண்பானவர். அதிர்ந்தும் பேச மாட்டார். நானும் அவரைப் புகழ்ந்து புகழ்ந்தே எழுதியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

”ஓ, சாரு தியாகராஜா பற்றி எழுதுகிறாரா? நல்ல விஷயம். எழுதுவதற்கு அதிக விஷயம் இல்லை. ஆனாலும் சாரு நன்றாக எழுதி விடுவார். நல்லதே நடக்கும்.” ஒரு நல்லவன் இப்படித்தானே பேசுவான்? பேச வேண்டும்? ஏன் பேசவில்லை? ஏனென்றால், சாரு ஒரு பொறுக்கி. ஒரு செக்ஸ் ரைட்டர். இவன் என்ன தியாகராஜா பற்றி எழுதிக் கிழித்து விட முடியும்? அதனால்தான் அந்த நல்லவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“அதுதான் எல்லாவற்றையும் ஜாக்ஸன் எழுதி விட்டாரே? இனிமேல் சாரு எழுத என்ன இருக்கிறது?”

இது எப்படியிருக்கிறது என்றால், ஒருத்தி கர்ப்பமாகி இருக்கிறாள். உடனே பிள்ளையில்லாதவள் “ம்க்கும், இவளுக்குப் பிறப்பது செவிடோ ஊமையோ குருடோ, பார்ப்போம்” என்று சொன்ன கதையாகத்தான் இருக்கிறது.

அது போக, ஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டும், எதை எழுத வேண்டும் என்று சொல்ல நீர் யார்? தியாகராஜா என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?

இதெல்லாம்தான் எனக்கு ஆற்று ஆற்றுப் போகிறது. ஒன்றுமே புரியவில்லை. ஏன் இந்த மக்கள் நல்லவர் கெட்டவர் உட்பட எல்லோருமே வன்மம் கொண்டு அலைகிறார்கள்?

விஷயத்தை என்னால் ஒருவாறு யூகிக்க முடிகிறது. இந்த இசை விமர்சகருக்கு இசை தெரியும். ஆனால் இலக்கியம் தெரியாது. அதிலும் சாருவை அவர் படித்ததே இல்லை.

சாருவைப் பற்றி விமர்சகருக்குத் தெரிந்தது இதுதான்: ”சாருவா, அவர் அவ்வப்போது தத்துப் பித்தென்று இசை பற்றி ஏதோ உளறுகிறார். நம்மையும் வேறு பாராட்டித் தொலைக்கிறார். என்ன புரிந்ததோ அந்த மண்டு எழுத்தாளருக்கு?”

ஆங்கில இலக்கிய உலகில் இந்தியாவின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று கொண்டாடப்படும் ஒரு தமிழ் எழுத்தாளனைப் பற்றி விமர்சகரின் அறிவு அவ்வளவுதான். அதனால்தான் தியாகராஜா பற்றி இவர் என்ன எழுத முடியும் என்கிறார்.

அதாவது, இந்த சீர்கேட்டிற்கு இவர் மட்டுமே காரணம் அல்ல. தமிழ்ச் சூழலில் எவன் வேண்டுமானாலும் வந்து எழுத்தாளனை சூத்தடிக்கலாம். அதுதான் காரணம்.