பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்…

ॐ हा३उ हा३उ हा३उ, अहमन्नमहमन्नमहमन्नम्, अहमन्नादोऽहमन्नादोऽहमन्नादः।

ஓம் ஹாஉ ஹாஉ ஹாஉ, அஹமன்னமஹமன்னமஹமன்னம், அஹமன்னாதோ ஹமன்னாதோ ஹமன்னாத ஹ்।

வெள்ளை நாய் சரமாவின் தலைமையில் மற்ற நாய்கள் “ஓம்” மந்திரத்தை உச்சரித்து, உணவைக் கேட்கின்றன.

                                     சாந்தோக்ய உபநிஷத் 1.12.1-5)

வேதங்களில் அனைத்து நாய்களின் தாயாகவும், இந்திரனின் தூது நாயாகவும் கருதப்படும் சரமா என்ற நாய் வானத்தின் நாய் (Hound of Heaven) என்றும் வர்ணிக்கப்படுகிறது.  ஒருமுறை பாணிகள் என்ற அரக்கர்கள் இந்திரனின் ஒளிமயமான பசுக்களைத் திருடி இருண்ட குகையில் மறைத்து வைத்தனர். சரமாவை இந்திரன் அனுப்ப, அது தனியாகச் சென்று பாணிகளை எதிர்த்து, பசுக்களைக் கண்டுபிடித்து, இந்திரனுக்கு வழிகாட்டியது.

                                                                                                  ரிக்வேதம் 10.108

நான் கடவுள் படத்தின் கடைசிக் காட்சியில் ருத்ரன் (ஆர்யா) ஹம்சவல்லியிடம் (பூஜா) சொல்லும் வசனம் இது:

”உனக்கு கண்ணு இல்ல. அதனால உன்னால இந்த சமூகத்துக்கு ஒரு பயனும் இல்ல. நீ சாகணும்.”

இதுதான் ஃபாஸிஸம்.  இதைத்தான் ஹிட்லர் தன் கொள்கையாகக் கொண்டார்.  யூதர்கள் மனித விரோதிகள், அதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.  இப்படியாக ஹிட்லர் 90 லட்சம் யூதர்களைக் கொன்றான்.    

ஹோமோசெக்‌ஷுவல்கள் சமூக விரோதிகள்; அதனால் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.   அதேபோல் ஹிட்லரின் நாஜி படையால் ஒரு லட்சம் ஆண் ஹோமோசெக்‌ஷுவல்கள் கைது செய்யப்பட்டு அதில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை குஷ்டரோகிகள் சமூக வெளியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஊரை விட்டுத் தாண்டிய பகுதிகளில் ஷெல்டர்களில் அடைக்கப்பட்டார்கள்.  அங்கே அந்தக் குஷ்டரோகிகள் பட்டினி கிடந்து செத்தார்கள்.

இதையேதான் நாய் எதிர்ப்பாளர்களின் வாதங்களும் பிரதிபலிக்கின்றன.  இந்த வாதத்தைக் கொஞ்சமாக நீட்டித்துப் பார்ப்போம்.  இந்திய சமூகத்தில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது என்று அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொன்று விடலாமா?  நான் கடவுள் படத்தில் சொல்வது போல் மாற்றுத் திறனாளிகளையும் ஏழை பாழைகளையும் கடலில் தூக்கிப் போட்டு விடலாமா?  கிட்டத்தட்ட இம்மாதிரியான ஒரு காரியத்தைத்தானே தலித்துகள் மீது மூவாயிரம் ஆண்டுகளாகப் பிரயோகித்தார்கள்?

ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுதுகிறார்.  ”நாய்களை ஷெல்டர்களுக்கு அனுப்பினால் அது வீண் செலவு.  மக்களின் வரிப்பணம் வீணாகும்.  அதனால் தெரு நாய்களைப் பிடித்து நாய்க்கறி உண்ணும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம்.” 

ஏன் சாமி, உங்கள் குழந்தை இரவில் அழும் சத்தத்தினால் தூங்க முடியவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் குழந்தையைப் பிடித்து கிணற்றில் தூக்கிப் போடுவானா?

நாய் எதிர்ப்பாளர்களின் வாதங்கள் எல்லாமே இந்த தர்க்கமாகத்தான் இருக்கிறது.  தெருநாய் கடிக்கிறது.  அதனால் அதைப் பிடித்து ஷெல்டரில் அடையுங்கள். 

ஷெல்டரில் அடைத்தால் பட்டினி கிடந்து சாகும்.  வேறு என்ன நடக்கும்?  வேறு மாதிரி நடக்க சாத்தியமே இல்லை. 

சரி, தில்லியில் நூற்றுக்கணக்கில் பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் நடக்கிறது.  தில்லியை எல்லோரும் ரேப் கேபிடல் ஆஃப் இண்டியா என்கிறார்கள்.  அதற்காக தில்லி வாழ் ஆண்களின் சாமானை அறுத்துத் தள்ளி விடலாமா?

நூற்றுக்கு நூறு ஃபாஸிஸக் கருத்தை இந்திய மக்கள் அனைவருமே ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதில் எழுத்தாளர்களும் அடக்கம் என்பதுதான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.  ஆனால் அதுவும் சரிதான்.  மதிப்பீடுகள் வீழ்ச்சி அடையும்போது அதில் எழுத்தாளன் மட்டும் என்ன விதிவிலக்கு?  சினிமா நடிகர்களுக்கு முன்னே சலாம் போடும் கும்பல் வேறு எப்படி சிந்திக்கும்?

என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஃபாஸிஸ்ட் கருத்தை நான் சந்தித்ததே இல்லை.  தெருநாய்கள் முன்பு எண்ணிக்கையில் கம்மியாக இருந்ததால் அத்தனை ஆரவாரம் எழவில்லை.  தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை.  அதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகி விட்டது.  இது யாருடைய தவறு?  மனிதர்களின் தவறுக்கு நாய்கள் என்ன செய்யும்?

மேற்கத்திய நாடுகளில் ஒரு தெருநாய் கூட கிடையாது.  ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் நாயோ பூனையோ இருக்கும்.  நாய்களே அதிகம்.  தெருக்களில் திரிந்த நாய்களுக்கு அவர்கள் இனப்பெருக்கத்தடை ஊசிகளைப் போட்டார்கள்.  இந்தப் பணியை செய்து முடிக்க ஒரு பத்து ஆண்டுகள் ஆகும்.  ஆனால் நம் மக்கள் சுயநலமிகள்.  அவர்களுக்கு இன்றே வேலை ஆக வேண்டும்.  நாய்களை அப்புறப்படுத்*

துங்கள் என்கிறார்கள்.  ஆனால் இந்த மக்கள் அதிகாரமில்லாதவர்களிடம்தான் வீரம் காட்டுவார்கள்.  ஊர்களில் ஒழுங்கான சாலை இல்லை.  முறையான கல்விக்கூடங்கள் இல்லை.  கல்விக்கூடங்கள் மக்கள் பணத்தை வெளிப்படையாகக் கொள்ளையடிக்கும் வியாபார ஸ்தலங்களாக மாறி விட்டன.  ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை.  சுத்தமான தண்ணீர் இல்லை.  தேசமே குப்பைத்தொட்டி போல் இருக்கிறது.  மழை பெய்தால் ஊர்கள் மிதக்கின்றன.  மக்களுக்கு எது பற்றியுமே கவலையில்லை.  ஏனென்றால், அவர்கள் அதிகாரத்தை எதிர்த்து சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாத கோழைகள்.  ஆனால் நாய்களிடம் எந்த அதிகாரமும் இல்லை.  அடித்தே கொல்லலாம்.  அடிக்கிறார்கள்.  இப்போது நாய்களுக்கு எதிராக தொலைக்காட்சி மூலம் மூளைச்சலவை நடக்கிறது.   இப்படியெல்லாம் உத்வேகம் பெற்றோ என்னவோ கர்னாடகாவில் ஒருத்தர் நான் மூவாயிரம் நாய்களை விஷம் கொடுத்துக் கொன்றேன் என்கிறார்.  இது தேச சேவை என்று வேறு மார் தட்டுகிறார். 

வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன்.  நெடுஞ்சாலைகளில் அன்னமோ, வேறு பட்சியினங்களோ, மான் கூட்டமோ, ஆமைகளோ சாலையைக் கடந்தால் எல்லா கார்களும் நின்று விடும்.  ஆமை போன்ற பிராணிகள் தன் குட்டிகளை அழைத்துக்கொண்டு சாலையைக் கடக்க சமயங்களில் ஐந்து நிமிடத்துக்கும் மேல் ஆகும்.  அப்போது நூற்றுக்கணக்கான கார்கள் நெடுஞ்சாலையில் வரிசை கட்டி அமைதியாக நிற்கும்.  பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி அது.  ஆனால் இந்தியாவில் ஐந்தாறு மாடுகள் சாலையைக் கடக்க நேர்ந்தாலே காரை ஓட்டுபவன் ஒலிப்பானை அலற விட்டு காரை வேகமாக ஓட்டி, மாடுகளை மிரள விட்டு, மாடும் ஓடி, காரும் ஓடி ஒரு பெரிய அபத்த, குரூர நாடகமே ரணகளமாய் நடந்தேறும்.  மாடுகள் சாலையைக் கடக்க எடுத்துக்கொள்ளும் ஐந்து நிமிடம் கூடப் பொறுமை காப்பதற்கு காரோட்டிகளுக்கு மனசு வராது. 

பிராணிகளின் சார்பாகப் பேசுபவர்களிடம் அதிகாரம் இல்லை.  அவர்கள் சிறுபான்மை என்பதனால் அவர்களின் குரல் நலிந்து ஒலிக்கிறது. நாய்களுக்கு எதிராகப் பேசுபவர் அத்தனை பேருமே மதக்கலவரங்களின் போது நெற்றியில் சிவப்பு அல்லது மஞ்சள் துணியுடன் வீச்சரிவாளை எடுத்துக்கொண்டு கொல்லு கொல்லு கொல்லு என்று வெறித்தனமாகக் கத்தியபடி ஓடும் இளைஞர்களின் ஆவேசத்துடனேயே பேசுகிறார்கள்.  ’நாய்களுக்கு உணவிடாதீர்கள், அவைகள் மனிதர்களைக் கொல்லும் ராட்சச விலங்குகள், அவை பட்டினி கிடந்து சாக வேண்டும்’ என்று மனிதக் கும்பல் கூச்சலிடுகிறது.  எல்லோருமே நாய்களுக்கு எதிரான பயங்கரவாதிகளாக மாறி விட்டார்கள்.

இதற்கிடையில் நாய்களை எதிர்க்கும் ஃபாஸிஸ்ட் கும்பல் இன்னொரு மொக்கை வாதத்தை வைக்கிறது.  நாய்களுக்கு உணவிடுபவர்களும், நாய், பூனை, முயல் போன்ற பிராணிகளை வளர்ப்பவர்களும் தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்திக் கொள்ளவே வளர்க்கிறார்களாம்.  அடடா, எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு.  இந்தக் கண்டுபிடிப்புச் சிகரத்தின் குஞ்சாமணியில் ஒரு வெள்ளிக்கொலுசு மாட்டுங்கடா!

வெளியிலிருந்து பார்த்தே தீர்ப்பை வழங்கி விடுவது, ம்?  உள்ளே என்ன நடக்கிறது என்று கொஞ்சமாவது உங்களுக்குத் தெரியுமா?  பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்கள் ஈகோ திருப்திக்காக வளர்க்கவில்லை.  அவர்களிடம் பிராணிகள் மீதான அன்பு கூட இல்லை.  அவர்களிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான்.  பிராணிகளின் பசியையும், வலியையும் அவர்கள் உணர்கிறார்கள்.  அவ்வளவுதான்.  பிராணிகள் வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.  அவ்வளவுதான்.  வள்ளலார் மனிதர்களுக்குச் செய்ததை அவர்கள் பிராணிகளுக்குச் செய்கிறார்கள்.  என் தோழி ஒருவர் எழுபத்தைந்து பூனைகளும் இருபத்தைந்து நாய்களும் வளர்க்கிறார் என்றால், அதை அவர் அன்பினாலா செய்கிறார்?  ஈகோ திருப்திக்காகவா செய்கிறார்?  அந்தப் பிராணிகளின் தேவைக்காகச் செய்கிறார்.  அதன் பொருட்டு அவர் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  நான் என்ன பூனைகளின் ஆர்வலனா?  இருபது பூனைகளுக்கு உணவிடுவதற்காக நான் தெருவில் நின்று பிச்சை எடுக்கிறேன்.  இதை நான் விரும்பியா செய்கிறேன்?  அந்தப் பூனைகளை நான் பசியோடு சாக விட விரும்பவில்லை.  அதை என் அற உணர்வு தடுக்கிறது.  உங்களால் உங்கள் பிள்ளையை வளர்க்க முடியவில்லை என்று கடற்கரையில் கொண்டு போய் விட்டு விடுவீர்களா? 

இன்னொரு நண்பர், பிரகாஷ். மைலாப்பூர்.  ரயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  நூறு தெருப் பூனைகளுக்கு உணவிடுகிறார்.  இதில் கபாலீஸ்வரர் கோவிலில் வசிக்கும் பூனைகளும் சேர்த்தி.  அவருடைய ஓய்வூதியம் அவ்வளவையும் அதற்காகத்தான் செலவு செய்கிறார்.  ஒரு சமயம் கோவிலில் பூனைகளுக்கு உணவிடக் கூடாது என்று சங்கடம் செய்த போது நீதிமன்றத்தையும் நாடி வெற்றி பெற்றார்.  இது எல்லாம் அவருடைய ஈகோவுக்காகவா செய்தார்?  பூனைகளின் பசியை உணர்ந்தார்.  அவைகளின் அனாதைத்தனத்தை, வலியை அவர் அனுபவித்தார்.  அதனால் பூனைகளின் பசி தீர்க்கும் பணியில் ஈடுபடுகிறார். 

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய தேசம் ஐயா இது!  ஆனால் இப்போது நீங்கள் நாய் கடிக்கிறது என்பதற்காக நாயைக் கொல்ல கத்தியோடு பாய்கிறீர்களே, நீங்களெல்லாம் மனிதர்கள்தானா? 

மஹாபாரதத்தை விழுந்து விழுந்து தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள்.  யுதிஷ்ட்ரன் கடைசியில் சொர்க்கத்துக்குப் போகும்போது அவன் பின்னால், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், அவன் மனைவி த்ரௌபதி எல்லோருமே வழியில் வீழ்ந்து விட்ட பிறகு, அவனோடு சொர்க்கம் செல்வது ஒரே ஒரு நாய்தானே?  அப்படிப்பட்ட நாயைப் போய் கொல்லத் துணிகிறீர்களே, உங்கள் மனதில் ஒரு துளி ஈரம் இருக்கிறதா? 

காரணம் என்னவென்றால், நாய் எதிர்ப்பாளர் அனைவருமே சுயநலமிகள்.  நீங்கள் மட்டுமே இந்த உலகில் வாழ வேண்டும்.  நான் பிராணிகளை மனித இனத்தை விட மேம்பட்டதாகவே கருதுகிறேன்.  மனிதன் சுயநலமியாக இருக்கிறான்.  தன் வீடு, தன் குடும்பம், தன் பிள்ளைகள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு என்பதே மனித வாழ்வாகச் சுருங்கி விட்டது.  விலங்குகள் இப்படி இல்லையே?  தேசம் என்றும் மதம் என்றும் சொல்லிக்கொண்டு ஆயிரக்கணக்கான சஜ ஜீவிகளை அவைகள் கொன்று குவிக்கவில்லையே?  புனிதப் போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது?  250 ஆண்டுகள்.  மனிதக் கும்பல் உன் கடவுள் பெரிதா என் கடவுள் பெரிதா என்று கேட்டு போரிட்டு மடிந்தது.  இது தவிர பொய், ஏமாற்று வேலை, வஞ்சகம், துரோகம், வன்முறை என்று நூற்றுக்கணக்கான தீமைகள்.  இது எதுவுமே விலங்குகளிடமும் பிராணிகளிடமும் இல்லை. 

ஏனென்றால், உங்களிடம்தான் ஆயுதமும் அதிகாரமும் இருக்கிறது.  நாய்களிடம் இல்லை.  அதனால் நாய்களைக் கொல்வீர்கள்.  அப்படியானால் இயற்கை உங்களை விட பலம் பொருந்தியது.  அது என்ன செய்யும்?  தினை விதைத்தவன் தினையையே அறுவடை செய்வான்.  உங்களை உங்களை விட பலம் பொருந்திய, உங்கள் கண்களுக்கே புலப்படாத கொரொனாவோ பொரானாவோ வந்து அழிக்கும்.  உடல் கூட கிடைக்காதபடி செய்யும்.  உங்கள் உயிருக்குயிரான மகனோ மகளோ மனைவியோ அப்பனோ ஆத்தாளோ செத்தால் அந்த உடலைப் பார்த்தாலே உங்களை அந்தக் கிருமி தொற்றிக் கொள்ளும் என்பதால் அப்படியே – உடலைப் பார்க்காமலேயே – எரிக்க வேண்டியதாக இருக்கும். 

நல்லவேளை, மரங்களால் மழை பெய்கிறது என்பது தெரிந்து போனதால் மரத்தை விட்டு வைத்திருக்கிறீர்கள்.  அதையும் கூட பல ஃபாஸிஸ்டுகள் வெட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் மரங்கள் உங்களைக் கடிப்பதில்லை என்பதால் உங்களிடம் மரங்கள் மீது அத்தனை வெறுப்பும் வன்மமும் இல்லை. 

இந்த தேசத்தில் ஒரு நாய் கூட பசியால் வாடினால், முதலில் அதற்கு உணவளிப்பதே கடவுளுக்குச் செய்யும் சேவையாகும் என்று விவேகானந்தர் கூறினார்.

இந்தியர்கள் மட்டுமே உலகில் இயற்கையைப் பெரிதும் வணங்கியவர்களாக இருந்தார்கள்.  மரங்களை வணங்கினார்கள்.  காகங்களைக் கூட கடவுளின் பிரதிநிதியென காகங்களுக்கு உணவிட்டார்கள்.  காகங்களுக்கு உணவிடாமல் அவர்கள் உணவு உட்கொண்டதே இல்லை. பூமியை வணங்கினார்கள்.  பூமி மாதா, கடல் மாதா என்றார்கள்.  சூரியனை வணங்கினார்கள்.  நாயை தெய்வத்தின் அம்சமாகக் கொண்டாடினார்கள்.

இன்று அதே இந்தியர்கள் நாய்களைக் கொல்ல ஆயுதங்களோடு அலைகிறார்கள்.  ஏற்கனவே இன்றைய தலைமுறை அறத்தையும், மதிப்பீடுகளையும் முற்றாக இழந்து போய் தறிகெட்டு அலைகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாயை நான்காவது மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டு அதை காணொலியாக எடுத்து உலவ விட்டார்களே, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – இது இன்றைய இந்தியாவின் உதாரண சம்பவம்.  அந்த இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்தானே வளர்த்திருக்க வேண்டும்?  ஒட்டு மொத்த சமூகமே ஈவு, இரக்கம், கருணை (empathy) இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அந்த மாணவர்களின் பெற்றோர் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

ரோட் ரேஜ் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  இப்போது இந்த நாய் எதிர்ப்பாளர்கள் செய்வதையெல்லாம் லைஃப் ரேஜ் என்றே சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.  தான், தன்னுடைய அலுவலகம், தன் வீடு, தன் குழந்தை – பைக்கின் குறுக்கே நாய் வருகிறதா, அடித்துப் போடு. 

எதிர்கால இந்தியாவை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. 

மேற்கத்திய நாகரீகத்தின் மேன்மைகளைப் புறம் தள்ளி விட்டு, இந்தியர்கள் மேற்கத்தியப் பொருள்முதல்வாதத்தைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு, தங்களுடைய பாரம்பரிய மதிப்பீடுகளையும் தூக்கிப் போட்டுவிட்டு ஃபாஸிஸ்டுகளாக மாறி விட்டார்கள்.  இனி இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. 

(இந்தக் கட்டுரையில் ஸ்ரீயின் பங்கு அதிகம். அவளுக்கு என் அன்பு)