இன்று ஒரு தோழி ஃபோனில் அழைத்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். மாதாமாதம் எனக்குத் தேவையான அலோபதி மருந்துகளை பல ஆண்டுகளாக அனுப்பிக்கொண்டிருப்பவர்.
அவர் சொன்ன விஷயங்களுக்கு நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் போடலாம். ஆனால் அவர் சொன்னது எல்லாமே ”நான் கொடுத்த பணத்தை நீ திருப்பவில்லை” என்பது போன்ற தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. எல்லாமே என் இயக்கம் சம்பந்தப்பட்டவை. எல்லாமே என் எழுத்து சம்பந்தப்பட்டவை. மேலும், இதையேதான் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக என்னிடம் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருக்கிறார். முன்பு இருந்த நெருக்கத்தின் காரணமாக மூர்க்கமான தொனியில் சொல்லுவார். இப்போது தயவான குரலில் சொன்னார். ஆனால் உள்ளே இருந்தது எல்லாமே என்னைக் கொல்லும் விஷம். அவருக்கு அது விஷம் என்று தெரியாது. அது அவருக்கு அமிர்தம். எனக்கு விஷம்.
அவர் சொன்னதன் சாரம்: முன்பு இப்படியெல்லாம் ரகளை செய்தீர்கள், அது அந்த வயது. இப்போது உங்களுக்கு ஒரு முதிர்ச்சி வந்து விட்டதுதானே? இன்னமும் இப்படிப் போட்டு மற்றவர்களை அடிக்கலாமா? நீங்கள் என்ன செய்கிறீர்கள், தெரியுமா? ஒருத்தர் உங்கள் மனதை ரவ்வோண்டு, ஒரு அணுவளவு புண்படுத்தி விட்டால் அவரது இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்று விடுகிறீர்கள். ஆமாம், அடித்துக் கொன்று விடுகிறீர்கள். இப்படிச் செத்தவர் பலர். உங்கள் மனம் ஒரு அணுவளவு புண்பட்டு விடக் கூடாது. பட்டால் அவன் செத்தான். ஏன் சாரு, தியாகராஜர் பற்றி எழுதுகிறீர்கள், அவர் குணாம்சத்தில் ஒரு கடுகளாவது உங்களிடம் இருக்க வேண்டாமா? இப்படியா சாட்டையை எடுத்து வீசுவது? நீங்கள் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் இடத்தில் அல்லவா இருக்கிறீர்கள்? ஆனால் ஏன் கையில் அரிவாளோடும் சவுக்கோடும் அலைகிறீர்கள்?
இப்படியே போனால் நீங்கள் தனித்துத்தான் போவீர்கள். உங்களோடு யாருமே இருக்க மாட்டார்கள். ஆம், யாருமே இருக்க மாட்டார்கள். உங்களை யாருமே நெருங்க மாட்டார்கள்.
அவர் உங்களைப் பற்றி அப்படி என்ன தவறாகச் சொல்லி விட்டார்? ”தியாகராஜர் பற்றி எழுத ஐந்து பக்கத்துக்கு மேல் மேட்டர் இல்லையே, ஜாக்ஸன் வேறு எல்லாவற்றையும் எழுதி விட்டாரே? இனி எழுத என்ன இருக்கிறது?” இப்படிச் சொல்வதில் என்ன தவறு? ஏன் இப்படிச் சொன்னால் என்ன? அவர் என்ன இதைப் பொதுவெளியிலா எழுதினார்? நீங்கள் பதிலுக்கு என்ன செய்திருக்க வேண்டும்? தியாகராஜா பற்றி ஒரு அற்புதமான நாவலை எழுதிக் கொடுத்தால் அவரே அதைப் படித்து விட்டுப் பாராட்டியிருக்க மாட்டாரா? கொண்டாடியிருப்பாரே?
இப்படியே ஒரு மணி நேரம்.
திரும்பத் திரும்பத் திரும்ப சொல்கிறேன். இப்படியெல்லாம் பேசுவது என் தார்மீகத்தைக் குலைப்பதாக இருக்கிறது. தார்மீகத்தைக் குலைப்பது என்றால் என்ன? ஸொல்த்தான் ஃபாப்ரியின் (Zoltan Fabri) ஃபிஃப்த் ஸீல் படம் பற்றிச் சொல்லியிருக்கிறேன். மூன்று நண்பர்கள். அதில் ஒருத்தன் புரட்சிக்காரன். ஹங்கெரியை ஜெர்மானிய நாஜி ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. புடாபெஸ்ட் நகரில் மூன்று நண்பர்களையும் ராணுவம் கைது செய்து புரட்சிக்காரனை மட்டும் தனிமைப்படுத்தி சித்ரவதை செய்கிறது. மீதி இருவரையும் சுட்டுக் கொல்லலாமா என்று தளபதியிடம் கேட்கிறான் சிப்பாய். அப்போது தளபதி அந்த இருவரிடமும் சொல்கிறான்: ”நீங்கள் தவறு செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் புரட்சிக்காரனின் நண்பர்கள். அதனால் உங்கள் தேசப்பற்றை (அதாவது, நாஜிகளை ஆதரிப்பதே தேசப்பற்று!) நீங்கள் எனக்குக் காண்பிக்க வேண்டும். எப்படிக் காண்பிப்பீர்கள்? நான் ஒரு வழி சொல்கிறேன். இந்தக் கலகக்காரன் இன்னும் ஒரு அறை கொடுத்தால் செத்து விடுவான். நீங்கள் மூன்று அறை கொடுத்து விட்டு வீட்டுக்குப் போகலாம்.”
இருவரில் ஒருத்தனால் தன் நண்பனை அறைய முடியாது. சுட்டுக் கொல்லப்படுகிறான்.
இன்னொருவன் மூன்று அறை கொடுத்து விட்டு வீட்டுக்குச் செல்கிறான்.
தளபதி சிப்பாயிடம் சொல்கிறான்: இனிமேல் இவன் ஒரு நடைப்பிணம். நான் இவனுடைய உடலைக் கொல்லவில்லை. இவன் ஆன்மாவைக் கொன்று விட்டேன். இனி இவனால் ஒரு ராத்திரி கூட நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாது.
கதையில் மூன்றாமவன் தன் நண்பனை ஏன் அறைந்தான் என்றால், நாஜிகளால் கொல்லப்பட்ட யூதக் குடும்பங்களில் மிஞ்சியிருந்த முப்பது குழந்தைகளுக்கு அவன் பராமரிப்பு இல்லம் வைத்திருக்கிறான். அவன் செத்தால் அந்த முப்பது யூதக் குழந்தைகளும் செத்துப் போகும். அதன் காரணமாக அவன் தன் ஆன்மாவை பலி கொடுக்கிறான்.
இப்படியாக என் தோழி – என் உடலைக் காப்பாற்றுவதற்காக மாதாமாதம் மருந்து அனுப்பும் தோழி என் ஆன்மாவாக விளங்கும் என் கொள்கைகளை, என் நம்பிக்கைகளை, என் எழுத்தின் ஆணி வேரை, என் அடையாளத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைக்கிறாள். எதிர்க் கலாச்சாரத்தின் ஒரே பிரதிநிதியான என்னை ஒரு ரௌடி போல் சித்தரிக்கிறாள். ஏழு ஆண்டுகளாக இந்த ஆன்மக் கொலை நடந்து கொண்டிருக்கிறது.
தோழி, நான் செய்வது எதிர்க் கலாச்சாரம். ரௌடித்தனம் அல்ல. சில உதாரணங்கள் தருகிறேன்.
சச்சிதானந்தம் என்று ஒரு இலக்கிய ரசிகர். அதிகம் எழுதியதில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. இப்போது உயிருடன் இல்லை. அவர் சிறுகதை எழுதுவார் என்பதே அவர் நண்பர்களுக்குக் கூடத் தெரியாது. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை இந்த உலகிலேயே காண முடியாது. நடமாடும் யேசு. மட்டுமல்லாமல் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் இருந்தால் அந்த இடமே அமர்க்களமாக இருக்கும். எனக்கு அவரை பதினைந்து ஆண்டுகளாகத் தெரியும்.
அநேகமாக வசந்தகுமாரின் தமிழினி அலுவலகத்தில்தான் அவரையும் என்னையும் பார்க்க முடியும். இல்லாவிட்டால் சி. மோகனோடு. இல்லாவிட்டால் நான் பெயர் சொல்ல விரும்பாத என் நண்பரின் அலுவலகம். அந்தப் பதினைந்து ஆண்டுகளும் சச்சி (அவரை அப்படித்தான் எல்லோரும் பிரியமாக அழைப்பார்கள்) என்னைப் பார்த்தால் அப்படி ஒரு ஆளே இல்லாதது போல் நடந்து கொள்வார். எந்நேரமும் சிரித்தபடி இருக்கும் அவர் முகம் என்னைப் பார்த்ததும் சுருங்கி விடும். அப்படிச் சொல்வதை விட, நான் ஒரு ஆள் அங்கே இருப்பது போலவே அவர் கருத மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், ஒருமுறை என் நண்பனின் அலுவலகம். நான், நண்பன், சச்சி. நண்பன் அவனுடைய உயரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவன்தான் அந்த அலுவலகத்தின் தலைமை. நான் அவன் எதிரே. என் அருகில் சச்சி. இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருக்கிறோம். சச்சி என் பக்கமே திரும்பவில்லை. நான் பேசுவதை அவர் கேட்கவேயில்லை. உரையாடல் எனக்கும் நண்பனுக்கும், சச்சிக்கும் நண்பனுக்குமாகவே இரண்டு மணி நேரமும் போனது. சச்சி சென்ற பிறகு இதை நான் நண்பனிடம் குறிப்பிட்டேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அவன் கவனிக்கவில்லை. இப்போது கேட்டால் அப்படி ஒரு சந்திப்பே நடக்கவில்லை என்று புளுகுவான். அது போகட்டும்.
தோழி, உன் மனதைத் தொட்டுச் சொல். ஏன் பதினைந்து ஆண்டுகள் சச்சி என் மீது வெறுப்பைக் கக்கினார். அவர் ஒரு மஹாத்மா. இனிமையின் மொத்த உருவம். எல்லோராலும் விரும்பப்பட்டவர். அவரிடம் தீமை என்ற அம்சம் கடுகத்தனை கூட கிடையாது. ஏன் அவர் என்னை அப்படி வெறுத்தார்? அவரைப் பற்றித் திட்டவோ விமர்சிக்கவோ எது ஒன்றுமே கிடையாது. அவர் பெயரைக் கூட நான் உச்சரித்தது இல்லை.
வெறுப்புக்குக் காரணம், நான் ஒருத்தன் மட்டுமே ஐம்பது ஆண்டு காலமாக எதிர்க்கலாச்சாரத்தின் ஒற்றைப் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் புண்டை என்று எழுதிய ஒரே ஆளாக இருந்தேன். இப்போது பலர். நான் சரித்திரத்தைச் சொல்கிறேன்.
தமிழ்ச் சூழல் என்னை வெறுத்தது, வெறுப்பது என் ரௌடித்தனத்தால் அல்ல என்பதை நீ இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளப் போவதில்லை. அது என் அக்கறையும் இல்லை. ஆனால் என்னிடம் வந்து நீ செய்வது ரௌடித்தனம் என்று சொல்லாதே. என்ன அது, என் மனம் கடுகத்தனை புண்பட்டு விட்டாலும் புண்படுத்தியவரை இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்று விடுகிறேன்!!!!!!!!!!
ஏன் அம்மணி, ஒரு ஆள் “இவர் தியாகராஜர் பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது? இவர் எதை எழுதப் போகிறார்?” என்று சொல்கிறான். அதுவும் நான் எழுதுவதற்கு முன்னாலேயே? ஆனால் நான் அதற்கு எதிர்வினையாற்றினால் இடுப்புக்குக் கீழே அடிப்பதாகுமா? அவன் செய்தது ஒரு கொலை.
நீ சொன்னாய், என் நண்பர்கள் நூறு பேர். அதில் தொண்ணூறு பேர் “சாரு செய்வது அநியாயம், கண்டிக்கப்பட வேண்டியது” என்கிறார்கள். ஊரே சொல்கிறது என்றாய்.
உன் ஊர் வேறு, என் ஊர் வேறு என்பதை நீ எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்? என் ஊரிலும் நூறு பேர் உண்டு. அதில் ஐம்பது பேர் பெண்கள். அதில் ஒருத்தி நவீன தீண்டாமையைத் தூக்கியதும் ஃபோன் பண்ணினாள். அவள் சொன்னதை கொஞ்சம் தணிக்கை செய்து தருகிறேன்:
”டார்லிங், உங்களை நான் ஒரே ஒருமுறை தான் புத்தக விழாவில் பார்க்கிறேன். ஐந்தே ஐந்து நிமிடம் உங்கள் கரம் பற்றி உங்களோடு நடக்கிறேன். அது என் வாழ்வின் பாக்கியம். அந்த அற்புதத் தருணத்துக்காக நான் ஒரு வருடம் காத்திருக்கிறேன். உங்களுக்காக நான் எதையும் செய்வேன். எதையும் செய்யக் காத்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் எதையுமே கேட்டதில்லை. ஆனால் எப்போதும் சொல்வதுதான். உங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள், தருகிறேன். நீங்கள் இதுவரை என் பெயர் போட்டு எதுவும் எழுதியதில்லை. எழுதினால் அதோடு என் வாழ்வின் பலனை அடைந்து விடுவேன். என்னைத் திட்டுங்கள். பாராட்டுங்கள். என்ன செய்தாலும் அது என் பாக்கியம். தயவு செய்து அந்தக் கட்டுரையைத் திரும்பவும் போடுங்கள்.”
அவளுக்கு இதுவரை நான் ஒரு ஃபோன் கூட செய்தது இல்லை. இப்போது அவளே ஃபோன் செய்த போது எடுத்துப் பேசினேன்.
இந்தப் பிரச்சினை பற்றி அராத்துவிடம் பேசினேன். அவரோடு பேசியும் மூன்று மாதம் இருக்கும். அவர் சொன்னதை அப்படியே தணிக்கை செய்யாமல்- ஆனால் டேஷ் டேஷ் போட்டுத் தருகிறேன்.
”ஒரு பெண்ணை ஒருவன் புணர்வதற்காகப் போகிறான். எடுத்த எடுப்பில் அவள் “டேய், நான் உன்னை மேலே ஏறி —–க்கப் போகிறேன். பத்து நிமிஷம். ஆனால் அதை உன் —ன்னி தாங்குமா? பத்து நிமிஷத்துக்கு துவளாமல் நிய்க்குமா? மவனே, துவண்டுச்சுன்னு வச்சுக்கோ, வெளக்கமாறு பிஞ்சுடும், எங்கே இப்பவே காமி, பாப்போம்?” என்று மிரட்டினால் அவன் சாமான் விறைக்குமா?”
இப்படித்தான் இருக்கிறது இசை விமர்சகரின் கூற்றும். ஏண்டா, இன்னும் நாவலை எழுதியே முடிக்கவில்லை. அது முடியும் வரை பொறுத்துப் பாரேன். ஏன் ஜோலியை ஆரம்பிப்பதற்குள்ளேயே சாமான் வேலை செய்யுமா என மிரட்டுகிறாய்? அப்புறம் அது எப்படி விளங்கும்?”
அராத்து சொன்னதை அப்படியே இங்கே என்னால் எழுத முடியவில்லை.
உன் ஊரைப் போலவே என் ஊரிலும் நூறு பேர் என்றேன். அந்த நூறு பேரில் தொண்ணூறு பேர் இல்லை, நூறு பேருமே நான் செய்வதுதான் சரி என்கிறார்கள். ஆனால் நீ ஒரு சர்வாதிகாரியைப் போல் நடந்து கொள்கிறாய். தாலிபான்களைப் போல் சிந்திக்கிறாய். உன் உலகில் உன் ஊர் மட்டுமே இருக்கிறது. சாருவின் ஊரிலும் நூறு பேர் இருப்பார்கள், அவர்கள் பீயைத் தின்னவில்லை, அவர்களும் உன்னைப் போல் சோறுதான் தின்கிறார்கள் என்பது உனக்குப் புரிவதே இல்லை. இதைத்தான் ஃபூக்கோ அடி அடியென்று அடிக்கிறான். இதுதான் அதிகாரத் திமிர் என்பது. நீ தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறாய். இதைத்தான் அன்பு நாவலில் எழுதினேன். நீ படிக்கவில்லை. இதைக் கூட நீ படிக்க மாட்டாய். ஆனால் கல்லெடுத்து அடித்து விட்டாய். குரைக்கிறேன்.
அல் குர்ஆனில் ஒரு வசனம் உண்டு. ஔரங்ஸேப் நாவலில் அதை எழுதியிருக்கிறேன். உன் கடவுள் வேறு, என் கடவுள் வேறு. உன் கடவுளை நானும் என் கடவுளை நீயும் ஏற்கவே போவதில்லை. இருவரும் அவரவர் வழியில் செல்வோம்.” ஆனால் நீயோ என் கடவுள்தான் கடவுள். உனக்குக் கடவுளே இல்லை என்கிறாய். அல்லது, என் கடவுள் வெறும் கல் என்கிறாய்.
நீ என்னுடைய செயல்கள் எது எதுவெல்லாம் ரௌடித்தனம் அல்லது வன்முறை என்கிறாயோ அது எல்லாமே என்னுடைய எதிர்க் கலாச்சாரப் புரட்சிகரச் செயல்பாடு என்பது உனக்கு எப்போதுமே புரியப் போவதில்லை. அதனால் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப என்னிடம் வந்து நாஜி அதிகாரி புரட்சிக்காரனின் நண்பனின் ஆன்மாவைக் கொல்லும் வேலையைச் செய்யாதே. சாரு செய்வது இடுப்புக்குக் கீழே அடிக்கும் கொடூரச் செயல் என்று நீ சொல்வதன் மூலம் நீ என் ஆன்மாவைக் கொல்லப் பார்க்கிறாய். நான் ஒரு எதிர்க்கலாச்சாரப் புரட்சியாளன் என்பதை ஒருக்கணம் மறந்து விட்டு நான் ஒரு ரௌடி என்று எண்ணத் தலைப்பட்டு விடுகிறேன். என்னை நீ மிகவும் கீழ்மையானவன் ஆக்குகிறாய்.
நீ ஒரு போலீஸ். போலீஸ் ஒரு புரட்சியாளனை ரௌடி என்றுதான் பார்க்கும், என்னைத் தமிழ்நாட்டில் செக்ஸ் ரைட்டர் என்று சொல்வதைப் போல, நீ என் கலகச் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ரௌடி என புரிந்து கொள்வதைப் போல.
இன்னொன்றும் சொல்கிறேன். ரௌடி என்ற வார்த்தையை நீ பயன்படுத்தவில்லை. ஆனால் அதை விடக் கீழாக வர்ணிக்கிறாய். என்ன அது, என் மனம் கடுகத்தனை புண்பட்டாலும் புண்படுத்தியவரை இடுப்புக்குக் கீழே அடித்துக் கொன்று விடுகிறேன். இதை யார் செய்கிறார்கள்? நீயும் மற்றவர்களும்தான். பார், நான் பாட்டுக்கு தியாகராஜாவை எழுதிக்கொண்டிருந்தேன். அதை விட்டு விட்டு இப்போது சாக்கடையை நோண்டிக்கொண்டிருக்கிறேன்.
சரி, சச்சிதானந்தன் ஏன் என்னை அப்படி வெறுத்தார் என்று யோசி. இன்னொரு உதாரணம் சொன்னால் உனக்குப் புரியலாம் (!) உன்னத சங்கீதம் என்று ஒரு சிறுகதை. ஒரு பெண் எழுத்தாளர் பீ பேண்டு அதை எனக்குப் பார்சல் செய்திருந்தார். பாவம், அதைப் பார்த்ததுமே தூக்கிப் போட்டு விட்டேன். ஆனால் அந்தப் பெண் பீ பேண்டு, அதை எடுத்து பார்சல் செய்ய எத்தனை பாடுபட்டிருக்க வேண்டும். ஏன் செய்தார்? என் சிறுகதை. என் எதிர்க்கலாச்சார செயல்பாடு. நான் அங்கே என்ன ரௌடித்தனம் பண்ணினேன்?
என் செயல்பாடுகள்தான் எல்லோராலும் என்னை வெறுக்கச் செய்கிறது. எஸ்.ரா.வுக்கு ஏன் சாஹித்ய அகாதமி, சாருவுக்கு ஏன் செருப்படி என்று நீ யோசிக்க வேண்டும். யோசித்தாலும் என் கிழிந்த ஜீன்ஸும், என் “ரௌடித்தனமும்”தான் உனக்கு நினைவு வரும். அது இல்லை காரணம். நான் எழுதும் ட்ரான்ஸ்கிரஸிவ் விஷயங்களே இதற்கெல்லாம் காரணம்.
இறுதியாக ஒரு விஷயம். அப்போது எனக்கு முப்பது வயது கூட ஆகவில்லை. கிரணம் என்று ஒரு பத்திரிகை நடத்தினேன். அட்டையில் ஏழெட்டு பேர் கூட்டுக் கலவி செய்யும் ஓவியம். நாற்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அல்லது, நாற்பது ஆண்டுகள். நான்கு இதழ்கள். நான்கையும் நான் வெகுவாக மதித்த ஒரு பெண் எழுத்தாளருக்கு அவர் வசிக்கும் மும்பைக்கு தபாலில் அனுப்பினேன். அந்தப் பார்சலை பிரிக்கக் கூட இல்லாமல் அம்மணி ஒரு கடிதத்தோடு திருப்பி அனுப்பினார். கடிதத்தின் வாசகம்: நீங்கள் தமிழில் எழுதி எங்களையெல்லாம் சங்கடப் படுத்துவதை விட உங்களுக்குப் பிடித்த ஸ்பானிஷிலேயே எழுதலாம்.
என்ன காரணம் இதற்கு? நான் என்ன ரௌடித்தனம் பண்ணினேன்? அம்மணியின் தலிவரான சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை குப்பை என்று சொல்லி விட்டேன்.
ஊரே கொண்டாடிய ஒரு நாவலை குப்பை என்று சொல்வது இடுப்புக்குக் கீழே அடிப்பதா, சொல்?
தோழி, எனக்கு உன்னோடு மல்லுக்கு நின்று அலுத்து விட்டது. நீ பேசுவது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் நான் பேசுவதோ உனக்கு ஒரு அட்சரம் கூடப் புரியவில்லை. இனி நாம் பேசவே வேண்டாம். என்னால் – என் செயல்களால் – உனக்கு ஏதேனும் சங்கடங்கள் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய். என்னால் என் நண்பர்கள் சங்கடப்படுவதை நான் விரும்ப மாட்டேன். மேலும், எனக்காக நீ எங்குமே வாதிட வேண்டாம். என் செயல்பாடுகளின் ஒரு அட்சரம் கூடப் புரியாத நீ எனக்காக வாதிடுவது அபத்தம். நான் உங்கள் ஆள் இல்லை. நான் உங்கள் உலகைச் சேர்ந்தவன் இல்லை.
மேலும் சொன்னாய், உங்களோடு யாருமே இருக்க மாட்டார்கள். நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள்.
எனக்கென்று நூறு பேர் உண்டு. ஆனாலும் பல சமயங்களில் நான் தனியனாகத்தான் உணர்கிறேன்.
சரி, நீ சொல். உனக்கு யார் உற்ற நண்பர்கள்? எத்தனையோ முறை என்னிடம் சொல்லியிருக்கிறாய், உனக்கென்று யாருமே நண்பர்கள் இல்லை என்று.
ஊரே கொண்டாடும் கமல்ஹாசனுக்கு யாரேனும் நண்பர்கள் உண்டா?
நேற்று இறைவி சொன்னாள், குறை சொல்லி அழக்கூட யாருமே இல்லை என்று. ஏய் நான் எங்கே போனேன் என்றேன். அடச் சே, நீ செய்யும் அக்குறும்புகளைச் சொல்லி அழ எனக்கு யார் உண்டு என்றாள்.
இப்படி எல்லோருமே தனியாகத்தான் கிடக்கிறோம். எனவே என் தனிமை பற்றி யாரும் இரங்கற்பா பாட வேண்டாம்.
மேலும், என் எழுத்து என்பது என் சுதந்திரம். அதை எடுக்கச் சொல்லி எனக்கு வேண்டுகோளோ, ஆணையோ இடுவதற்கு யாருக்குமே அதிகாரம் இல்லை. அது கொலைக்குச் சமானம். இதோடு நீ இந்த ஏழு ஆண்டுகளில் நூறு முறையாவது சொல்லி, நானும் அதை நீக்கியிருக்கிறேன். வேண்டாம், என் வயது எழுபத்து மூன்று. சொச்ச காலத்திலாவது யாருடைய அதிகாரமும், வேண்டுகோளும் இன்றி என் விருப்பப்படி எழுதலாம், வாழலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.
என்ன இது, உங்கள் குடும்பம் பற்றி இத்தனை வெளிப்படையாக எழுதுகிறீர்கள் என்று கேட்டாள் ஒரு தோழி. வயதைத்தான் சொன்னேன். இனியாவது யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக வாழ உத்தேசித்திருக்கிறேன். குறுக்கீடுகள் கூடாது.
(உணர்ச்சி வேகத்தில் தட்டியிருக்கிறேன். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்)