நவீன தீண்டாமை என்ற கட்டுரையை நீக்கி விட்டேன். அது அதில் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமல்லாமல் மற்ற பலரையும் புண்படுத்தி, அவர்களுக்கு வேறு பல சங்கடங்களையும் விளைவித்திருக்கிறது என்று அறிகிறேன்.
முட்டாள்களே ஒரு சாதாரண ஆளை அறிஞர் என்றும், படுமுட்டாள்களே அவரை பேரறிஞர் என்றும் சொல்வார்கள் என்று அண்ணாதுரை இறந்த போது சொன்னவர் ஜெயகாந்தன். அதேபோல் சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில் சென்று கலந்து கொண்டு, சிவாஜியின் நடிப்பு பற்றி மிக மோசமாகப் பேசி உயிராபத்துடன் தப்பி வந்தவர் ஜெயகாந்தன். அதேபோல் பெரியாரை வைத்துக்கொண்டே ஒரு தி.க. விழாவில் பெரியாரைக் கடுமையாக விமர்சனம் செய்து, அடிபட இருந்து, “பையன் நன்றாகப் பேசுகிறான்” என்று பெரியாரால் காப்பாற்றப்பட்டு வந்தவர் ஜெயகாந்தன். நான் அப்படி ஒன்றும் வீரதீரன் அல்ல. நான் சபிக்கப்படும்போது, நான் விமர்சிக்கப்படும்போது எதிர்வினை ஆற்றுகிறேன். அதை என்னுடைய இயக்கம், என்னுடைய போராட்டம் என்று கருதுகிறேன். நான் யாரையும் – கவனியுங்கள், யாரையுமே – நானாகப் போய் வலிந்து விமர்சனம் பண்ணினதில்லை. என்னை விமர்சிக்கும்போது மட்டுமே, அதிலும் மிகத் தேர்ந்தெடுத்து எதிர்வினை ஆற்றுகிறேன். என்னைத் திட்டிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் நான் பதில் சொல்வதில்லை.
தியாகராஜர் பற்றி இவர் (சாரு) என்ன எழுத முடியும் என்று சொல்வது என் சோற்றில் வைக்கும் நஞ்சு. அந்த நஞ்சைத் துப்பினால்தானே நான் மேற்கொண்டு தியாகராஜா பற்றி எழுத முடியும்? அந்த நஞ்சைத் துப்பிய கட்டுரைதான் நவீன தீண்டாமை. பிராமணன் என்று சாதியைச் சொல்லி விட்டேன் என்று ஒரு குற்றச்சாட்டு. சரி, ஒரு அ-பிராமணன் தியாகராஜர் பற்றி எழுத முனையும்போது – வேறு யாருமே இது பற்றி எழுதாத நிலையில் – அவர் என்ன எழுத முடியும் என்று கேட்டால் – கேட்பவர் பிராமணராக இருந்தால் – நான் சாதியை இழுக்காமல் என்ன செய்வேன்?
திரும்பத் திரும்பத் திரும்ப சொல்கிறேன். யாரொருருவர் தியாகராஜர் ராமனை மூன்று முறை நேரில் பார்த்தார் என்று நம்புகிறாரோ அவரே தியாகராஜர் பற்றி எழுத முடியும். எழுதுபவருக்கு சங்கீதம் தெரிகிறதா, ராக ஞானம் இருக்கிறதா, சைவ உணவு உண்பவரா, பிராமணரா – இதெல்லாம் முக்கியமே இல்லை. தியாகராஜரின் ஆன்மா சொல்வதை, தியாகராஜர் தன் கீர்த்தனைகளில் சொல்வதை நம்ப வேண்டும். நம்பும் ஒருவர் தியாகராஜரின் வாழ்வை எழுதலாம். எழுதுவதற்கு அவருக்கு மட்டுமே உரிமையும் தகுதியும் இருக்கிறது.
தற்சமயத்துக்கு தியாகராஜா நாவல் எழுதுவதை ஒத்தி வைத்து விட்டேன். இப்படிப்பட்ட விஷம் தோய்ந்த சூழலில் அதை எழுதினால் ஒருவர் கூட படிக்க மாட்டார்கள். ஏனென்றால், ஏற்கனவே அந்த நாவலுக்கு இரண்டு தடங்கல் இருக்கின்றன. ஒன்று, இலக்கிய வாசகர்கள் தியாகராஜர் ராமனை நேரில் கண்டார் என்று நான் எழுதுவதை நம்ப மாட்டார்கள். நாவலை ஒதுக்கி விடுவார்கள். இந்த நாவலின் உள்ளடக்கத்தை ரசிக்கக் கூடியவர்களான சங்கீதத் துறையினருக்கு இலக்கியம் அந்நியம். அவர்களும் படிக்க மாட்டார்கள். மட்டுமல்லாமல், நான் என் வழக்கம் போல் நல்ல காரியம் பண்ணும் போது எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி விட்டேன். ஒருத்தர் சபித்தது போதாது என்று இப்போது பலரது சாபம் சூழ்ந்து விட்டது.
நான் ஒரு நெகடிவான ஆள் என்று எனக்கு சொல்லப்பட்டது. இதனால் எல்லோரும் என்னை விட்டு விலகி விட்டார்கள் மற்றும் விலகி விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. அந்த்தோனின் ஆர்த்தோ, ஹெமிங்வே, ஸில்வியா ப்ளாத், ஆர்த்தர் ரேம்போ, ஆஸ்கர் வைல்ட், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற பலரும் என்னை விடவும் நெகடிவாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
இத்தனை நெகடிவான ஆளைச் சுற்றி இப்போதும் உயிர் கொடுக்கும் நண்பர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு புத்தகம் வாங்க வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் தேவை. ஃபேஸ்புக்கில் எழுதினேன். பணம் கேட்டு அல்ல. புத்தகத்தைக் கேட்டு. ஐந்து பேர் இரண்டாயிரமும், ஒருவர் பத்தாயிரமும் அனுப்பினார். இது ஐந்தே நிமிடத்தில் நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு நண்பர் தன் இறுதி நாள் வரை மாதம் பத்தாயிரம் ரூபாய் அனுப்புவதாகச் சொன்னார். சொன்னபடி செய்தார். நெருங்கிய நண்பரானார். வாரம் இரு முறை ப்ரூ ரூம் போவோம். திடீரென்று அவரிடமிருந்து தொடர்பே இல்லை. ஃபோன் செயலிழந்து கிடந்தது. அவரைத் தவிர அவர் நண்பர்களையோ குடும்பத்தையோ எனக்குத் தெரியாது.
ஆறு மாதங்கள் ஆகியும் தொடர்பு இல்லாமல் போகவே அவர் இறந்து விட்டார் என்றே நினைத்தேன். அவர் என்னைத் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஃபோன் செய்தார். என் வீட்டுக்கு வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, நடமாட்டம் இல்லாமல், நினைவு சுத்தமாகப் பிசகி, வாய் பேச முடியாமல் இருந்திருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு ஆள் முன்னை விட நன்றாக இருந்தார். குடி, சிகரெட் இரண்டையும் விட்டு விட்டேன் என்றார்.
அவர் கடைசியில் சொன்னதுதான் இந்த உலகில் நான் தனியாக இல்லை என்பதற்கு சான்று. ஒன்றரை ஆண்டாக பணம் வந்ததுதானே என்று கேட்டார். இல்லை, அது ஒன்றும் இப்போது முக்கியம் இல்லை என்றேன். “இல்லை, பேச்சை இழப்பதற்குக் கொஞ்சம் முன்பு ஒரு நண்பரிடம் சொல்லி, மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தேன். அவரும் அனுப்பியிருப்பார், பரமசிவம் என்ற பெயரில், வங்கிக் கணக்கில் பாருங்கள்” என்றார். ஆம், மாதாமாதம் பத்தாயிரம் வந்திருந்தது.
இப்போதும் என் வீட்டு வாடகையை ஒரு நண்பர் தருகிறார். மயக்கம் அடித்து விழ வைக்கும் தொகை. பூனைகளுக்காக இத்தனை பெரிய வீடு. அதுவும் அடையாறு காந்தி நகரில். அதுவும் காந்தி நகர் க்ளப்புக்கு எதிர் வீடு. இன்னொரு நண்பர் பூனைகளுக்காக உணவுச் செலவை ஏற்கிறார். ஒருவர் என்னுடைய பயணச் செலவு முழுவதையும் ஏற்கிறார். இப்படி ஒரு ஐம்பது பேர் கொண்ட நண்பர் குழாமோடுதான் இருக்கிறேன். ஆனாலும் நான் தனித்திருப்பதாக ஏன் உணர்கிறேன் என்றால், நான் ஒரு தற்கொலைக் கவிதை எழுதினேன் என்பதால், சீனி மூன்று நண்பர்களிடம் ”சாரு உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?” என்று அவருக்கு ஃபோன் செய்து பாருங்கள் என்று சொல்ல, மூவருமே அதற்குத் தயாராக இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு இரண்டு பேர் ஃபோன் செய்து காஃபி குடித்து விட்டீர்களா சாரு என்று கேட்டார்கள். அது வேறு விஷயம்.
எல்லா எழுத்தாளர்களுமே தனித்துதான் இருக்கிறார்கள். நானும் தனித்தே இருக்கிறேன். நான் என்ன எஸ்.ரா.வா அல்லது ஜெயமோகனா, எப்போதும் நூறு பேர் சூழ வலம் வருவதற்கு?
மேலும், நான் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப இந்த வயதிலும் ஒரு ரௌடி போல் சித்தரிக்கப்படுவது எனக்கு அலுப்பைத் தருகிறது. ரௌடி போல் சித்தரிப்பவர்களுக்கு அது அலுப்பைத் தருகிறது. “இந்த வயதிலும் இந்த ரவுடித்தனம் தேவையா?” என்பதே அவர்களது கேள்வியுமாக இருக்கிறது.
இதை ஏன் ரௌடித்தனம் என்கிறீர்கள்? என்னை விமர்சித்தால் நான் எதிர்வினை ஆற்றுகிறேன். அவ்வளவுதான். நீ இன்னும் சாகவில்லையா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பும் அன்பர்களுக்கா நான் எதிர்வினை ஆற்றுகிறேன்?
குளத்தில் நஞ்சு பாய்ந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. நஞ்சை செலுத்தியது நீதான் என்பார்கள். என் உணவில் நஞ்சைக் கலந்தது யார்?
இந்த மனநிலையில் தியாகராஜாவைத் தொடர முடியாது.
கவிதை எழுதினால் அதற்குத் தடை.
தியாகராஜா எழுதினால் அதற்கு நெருக்கடி.
நண்ப, தியாகராஜா பற்றி இவர் என்ன எழுத முடியும் என்று கேட்டாய். ஒன்றுமில்லை. விலகிக் கொள்கிறேன்.
எவனொருவன் கிறிஸ்து அதிசயங்கள் பண்ணினார் என்று நம்புகிறானோ,
எவனொருவன் கிறிஸ்து மரியாளின் கர்ப்பத்தில் ஒரு ஆடவனின் கூடலின்றி தேவனின் கிருபையினால் சிருஷ்டி கொண்டார் என நம்புகிறானோ,
எவனொருவன் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று தினங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்தார் என நம்புகிறானோ
அவனே கிறிஸ்து பற்றி எழுதத் தகுதியானவன்.
அதேபோல் எவனொருவன் தியாகராஜர் ராமனைப் பார்த்தார் என நம்புகிறானோ அவனே அவர் பற்றி எழுதத் தகுதியானவன். எனக்கு அந்தத் தகுதியிருந்தும் இந்த முதிய வயதிலும் ஒரு ரௌடியாக வாழ்வதால் அதை எழுதும் தகுதியை இழக்கிறேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க என் ஆசீர்வாதம்.,,