எக்கோலம் கொண்டாலும் ஏற்கும் திருமேனி

(இந்தக் கவிதையை நான் எழுதவில்லை. எனக்குள் ஒரு பேய் புகுந்து எழுதியது. அப்படித்தான் பேய் வேகத்தில் இதைத் தட்டச்சு செய்தேன். )

Cast Away திரைப்படத்தின் நாயகன் விமான விபத்தில் நடுக்கடலில் விழுந்து ரப்பர் மிதவையின் உதவியினால் ஆளில்லாத் தீவில் கரை சேர்கிறான்.  மரத்துண்டை மரத்துண்டோடு உரசி தீயைப் பெறுகிறான்.  மீன்களை சுட்டுத் தின்றே ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்துக் கடைசியில் பாய்மரப் படகு ஒன்றைக் கட்டி அங்கிருந்து தப்பித் தன் இடம் வருகிறான். ஐந்து ஆண்டுகளும் அவன் நினைவெல்லாம் மானுடக் கூட்டத்தைக் காண வேண்டுமென்பதுதான்.

அவன் நிலையில் அக்கா மஹாதேவியையும் ஆண்டாளையும் வைத்துப் பார்த்தேன்.  மானிடரை மறுக்கின்றார் தேவியும் நாச்சியாரும்.  என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் என்கின்றார் நாச்சியார்.  இருவருமே அந்த ஆளில்லாத் தீவில் நிம்மதியாய் இருந்திருப்பர், 

சந்தேகமில்லை. 

கொஞ்சநாளில் அவன் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்து போய் வெறும் கோவணத்துடன் அலைகின்றான்.  அக்கா மஹாதேவி ஆளிருந்த உலகிலேயே ஆடையற்றிருந்தவர். உலகமே கண்ணான சென்னமல்லிகார்ச்சுனனிடம் மூடி மறைக்க என்ன இருக்கிறது என்கின்றார் அக்கா.

அக்காளைப் பற்றியொரு கன்னடப் பெண்ணெழுத்தாளர் பெருங்கதை எழுதினார்.  அதிலே அவர் எழுதப் போவதாக என்னிடம் கூறியது, மாதாந்திரக் குருதியொழுக்கின்போது அக்காள் என்ன செய்திருப்பாள்,  

ஒரு பெண்ணாக என்னை அது சுழற்றியடிக்கிறது என்றார்.

நாயகனின் கோவணம் எனக்கொரு போதம் தந்தது.  நானும் கிட்டத்தட்ட அரை நிர்வாணிதான். பிராயம் பதினெட்டு வரை ஜட்டி அணிந்ததில்லை.  ஜட்டி அணிய வேண்டுமென்றே தெரிந்ததில்லை. யாரும் சொன்னதுமில்லை.  சொல்லியிருந்தாலும் வாங்கக் காசில்லை.  எங்கள் ஊரிலிருந்த சிங்கப்பூர்க்

கடைகளில் நாங்கள் பார்த்த பெண்கள் ஜட்டி – அப்போது எங்களுக்கு அதன் பேர் பேண்டீஸென்று தெரியாது –  எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி. எங்கள் ஊரில் பெண்கள் ஜட்டி அணிந்து நாங்கள் 

கேட்டதில்லை.  என் நண்பன் சொன்னான், நகரத்தில் தேவடியாள்கள் அணிவார்களென்று. மன்னிக்கவும், அப்போதெல்லாம் செக்ஸ் ஒர்க்கரென்ற politically correct வெளிப்பாடு அத்தனை புழக்கத்திலில்லை.

நான் சொல்வது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை.  அப்போதெல்லாம் கைதி என்றுதான்

சொல்வோம். இப்போதுதான் சிறைவாசி. நாகரீக வளர்ச்சிக்கு ஒரு ஜே!

பதினெட்டு வயதுக்குப் பிறகு ஜட்டி கிடைத்தது. ஆனாலும் பலனில்லை. கால் சராய் அணிந்து வெளியே

போனால் மட்டுமே ஜட்டி உள்ளுக்குள். அந்த சனியனை எப்போதடா கழற்றியெறிவோம் என்பதே எப்போதும் சிந்தனை.  வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை, அந்தக் கருமத்தைக் கழற்றித் தூர எறிவதுதான்.

கொஞ்ச காலத்தில் முழுநேர எழுத்தாளனானேனா, வீட்டிலேயேதான் வேலை.  அன்றே ஜட்டிக்கும் 

எனக்குமான உறவு முறிந்தது. எப்போதுமொரு நாலுமுழ வேட்டி. மேலே துணியில்லை. அரை நிர்வாணமென்று இதைத்தான் சொல்வது.   

காஸ்ட் அவே படத்தில் எனக்கொரு போதம் கிடைத்தது.  ஆண்களுக்கு நிர்வாணம் சாத்தியமில்லை.    உட்கார்ந்தால், ஓடியாடி வேலை செய்தால் விதை நசுங்கிச் சாவோம். கோவணமே உயிர் காக்கும்.

பெண்டிருக்குப் பிரச்சினையில்லை. உயிர்நாடியென விதைகளில்லை. 

இன்னொரு போதம், நான் அந்த நாயகனாக இருந்தால் படகு கட்டிக் கிளம்பியிருக்க மாட்டேன்.  

எனக்கு சென்னமல்லிகார்ச்சுனனோ, திருமேனி கொண்ட கேசவனோ யாருமில்லை.  ஆனால் நான் மானிடரை வெறுக்கின்றேன். 

மானிடர் யாவருமே சாபமும் புகாரும் சுமந்தபடி திரிகின்றார். ஞானியாய் நினைக்கின்ற எனக்குமே

புகாருண்டு.  என்னிடம் பத்து பூனைகள்.  வாடகைக்கு வீடு கிடைக்காமல் நூற்றைம்பது வீடு பார்த்தோம்.

நம்புங்கள், நூற்றைம்பது வீடு. பூனை என்றாலே துரத்தியடித்தார்கள்.  நூற்றைம்பத்தொன்றாவது வீட்டுக்காரர் வீடு கொடுத்தார்.  தயக்கத்துடன் பூனை என ஆரம்பித்தேன்.  பூனையோ நாயோ கவலையில்லையென்றார்.  வாடகை மட்டும் இரு மடங்கு.  குடி பெயர்ந்து நாலே மாதத்தில் வீட்டை விற்கப் போகிறேன், காலி செய்யுங்கள் என்கிறார். என்னிடம் பத்துப் பூனைகளோடு பத்தாயிரம் இருபதாயிரம் புத்தகங்கள் வேறு. எனக்குப் புகார் இருக்குமா, இருக்காதா, நீங்களே சொல்லுங்கள். 

சஞ்ஜனா என் தோழி.  அவளொரு மஹாத்மா. அந்தத் தேவ்டியாப் பயலுக்கு ரெண்டு மாசத்துல எதாவது

ஆகுமென்றாள் ஒருநாள். என்னது, தெய்வம் கெட்ட வார்த்தை பேசுமா என்றேன். அவளொரு கதை சொன்னாள். 

அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பெண்பூனை நாலு குட்டி போட்டு, ரெண்டு மாடி ஏறி வந்து இவள் வீட்டு வாசலிலிருந்த காலணி மாடத்தில் குட்டிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறது. 

எனக்கு சஞ்ஜனாவிடம் பிடிக்காத ஒன்று ‘வைத்திருக்கிறது’ என்று சொல்லாமல் ‘வைத்திருக்கிறாள்’

என்று சொல்வது. கேட்கும்போதெல்லாம் செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கும்.  

ஆனாலும் சொன்னதில்லை.  சரி, கதைக்கு வருவோம்.

அவள் வீட்டுக்கெதிரே ஒரு வைணவன்.  தப்பாக நினைக்காதீர். வைணவனென்பவன் பிறர்

வலியைத் தன் வலியாய் உணர்பவனென்றார் உடையவர்.  இவனென்ன செய்தானெனப் பார்ப்போம்.

மனைவியில்லை.  அகவை அறுபது.  தனியாய்த்தான் வாழ்கிறான்.  டெட்டாலை வாங்கி வந்து

வாசல் முழுக்க ஊற்றினான். நாலு குட்டியும் மரித்தது.  அந்தத் தேவ்டியாப் பயலுக்கு இன்னும் ரெண்டே மாதத்தில் ஏதாவது ஆகும் என்று சாபமிட்டாள் சஞ்சனா. இப்படி தெய்வங்களும் தேவதைகளுமே

சாபங்களோடு அலையும் மானிட உலகமிது, காண்பீர்!

சரி, இன்னொரு கதை கேளும், மானிடரே! என் குடியிருப்பில் ரெண்டு பணியாட்களுண்டு. ஒரு ஆண், ஒரு பெண். இருவருக்கும் குடிநீர் தேவையென்று என் மனையாள் தண்ணீர் கேன் வாங்கி வைத்தாள்.     இப்போது அந்த ஆண் அந்தப் பெண்ணை அந்தக் கேனில் நீரெடுக்கக் கூடாதெனத் தடுத்து விட்டான்.

அந்தப் பெண் என்னிடம் வந்து கண்ணீர் விட்டு அழுகிறாள்.  

அந்தக் காவலாளிக்கொரு சாபம் என் சட்டைப் பையிலிருக்கிறது.  

எனக்கு சென்னமல்லிகார்ச்சுனனில்லை, கேசவனில்லை.  ஆனாலும் நான் அந்த ஆளில்லாத் 

தீவினிலே சுட்ட மீன் தின்றபடி சுகமாக வாழ்ந்திருப்பேன் என்னுயிர் காக்கும் கோவணத்துடன்…