கோபி கிருஷ்ணன், ரிஷி மற்றும் நாற்பது வயதுத் தோழி

ரிஷி அழைத்தவுடன்
போய்ப் பார்த்தேன்
யாராவது வற்புறுத்தி அழைத்தால்
உடனே போய்ப் பார்த்துவிடுவேன்
அப்படி ஒருமுறை பார்க்காமல்
போய்தான் ஒரு சம்பவம்
நடந்துவிட்டது

கோபி கிருஷ்ணன் அழைத்தார்
பத்து நாட்கள் தொடர்ந்து
ஃபோனில் அழைத்தார்
இதோ இதோ என்று
நாட்களைக் கடத்தினேன்
அவர் வீட்டுக் கழிப்பறையில்
வெளிச்சம் கிடையாது
கும்மிருட்டாக இருக்கும்
அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்
கிடையாது
அதனால்தான் நாட்களைக்
கடத்தினேன்
பிறகு ஒரு போஸ்ட்கார்ட்
போட்டார்
போகலாம் என்று முடிவு செய்தபோது
கோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது

ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்
தொழிலே அதுதான் நல்ல பணம்
வருகிறது

கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்
போய்ப் பேசுவான்
நானேகூட ஏழு ஆண்டுகளுக்கு
முன் ஒரு ப்ரேக் அப் ஆனபோது
அவனிடம்தான் போய்
அவன் பேச்சைக் கேட்டுக் கேட்டு
தற்கொலை எண்ணத்திலிருந்து
விடுபட்டேன்
அவன் பேச்சைக் கேட்கும்
யாவருமே தற்கொலை எண்ணத்திலிருந்து
விடுபடுவர்

நான் ஒரு கவிதையெழுதினேன்
அதை உன் பெயரிலேயே போட்டுவிடு
என்று சொல்லி ஒரு காகிதத்தை
நீட்டினான்

அழகான கையெழுத்திலொரு
கவிதை

ஏனிந்த ஏற்பாடு
உன் பெயரில் போட
என்ன தடை என்றேன்

சற்று முன்னால் எனக்குத்
தற்கொலை செய்து கொள்ளும்
எண்ணம் ஏற்பட்டது
அதிலிருந்து விடுபடவே
இந்தக் கவிதையை எழுதினேன்
தற்கொலை பற்றிய கவிதையை
எப்படியென் பெயரில்
வெளியிடுவது பிழைப்பு
போய் விடுமே என்றான்

***

எனக்கு ஒரு தோழி இருந்தாள்
நாற்பது வயது
மணவாழ்வை முறித்துக்கொண்ட
தனிமனுஷி

ஐந்து வருடம் தோழியாக இருந்தவள்
ஒருநாள் என்னிடம்
எனக்கொரு காதலன் வேண்டும்
அது நீயாக இருந்தால் நலமென்றாள்
எனக்கு அப்படித் தோன்றவில்லை,
உனக்கு ஒரு காதலன்தான்
வேண்டுமென்றால் என்னைப் போலவே
ஒரு நல்லவன் உண்டு என்றேன்
அறிமுகமும் செய்து வைத்தேன்
காதல் மலர்ந்தது

இரண்டு ஆண்டுகள் சென்று
என் நண்பன் அவளைக் கைவிட்டான்
என்னை அடிமைபோல் நடத்துகிறாள்
என்று காரணம் சொன்னான்

இவள் தூக்க மாத்திரை போட்டுத்
தற்கொலைக்கு முயன்றாள்

’நீ ஒரு சிறந்த இசை ரசிகை
இலக்கிய வாசகி
கைநிறைய காசு வரும் வேலையும்
உண்டு
இன்னும் என்ன வேண்டுமுனக்கு?’
என்றேன்

’அவன் என் இசையையும் இலக்கியத்தையும்
திருடிக் கொண்டு விட்டான்
என் மனம் கொதிப்பதையும் வலியையும்
தாங்கும் சக்தியில்லை’
என்றாள்
அது எனக்கு இன்றுதான் புரிந்தது
எனக்குமே அப்படித்தான்
இருந்தது மனதில் ஏதோவொரு
வலி கொப்புளித்துக் கொப்புளித்து
வந்துகொண்டேயிருக்கிறது
நானொரு தீராத இசை ரசிகன்
தீவிர வாசகன்
இத்தனைக்கும் எனக்கொன்றும்
காதல் தோல்வியெல்லாம் இல்லை
அலுவலக வேலையாக வெளியூர்
செல்கிறேன் ஒரு வாரம் கழித்துப்
பேசுகிறேன் என்றாள் காதலி
அவ்வளவுதான்
மனம் எரிமலையாய்ப் பொங்குகிறது
அந்த உணர்வை
அந்த வலியை
அந்தக் கொந்தளிப்பை
வார்த்தையில் சொல்ல
இயலவில்லை
இதே பெண் எனக்குத்
தோழியாக இருந்தபோது
இவளோடு நான் நாட்கணக்கில்
பேசாமலிருந்திருக்கிறேன்
ஆனால் அப்போது எனக்குப்
பன்னிரண்டு தோழிகள்
எல்லோருடனும் பேசுவேன்
எல்லோருடனும் உறவு கொள்வேன்
இவளிடம் என்றைக்குக் காதல்
சொன்னேனோ அன்றிலிருந்து
ஏகபத்தினி விரதனானேன்
இப்போது தற்கொலை எண்ணத்தில்
வந்து நிற்கிறேன்