சூன்யத்தின் மொழி


கவலைப்படாதே
நீ தனியாக இருப்பது
உண்மைதான்
ஏனெனில் உன்னோடு இருப்பது
சூன்யம்

இது ஒரு சுயமுரண்
நீ இன்மை
நீ பூஜ்யம்
நீ வெற்றிடம்
உன்னை ஸ்பர்ஸிக்க முடியாது
உன்னோடு பாடவோ ஆடவோ முடியாது
உன்னோடு சேர்ந்து சிரிக்கவோ அழவோ
இயலாது
உன்னோடு குடிக்க முடியாது
உன்னோடு சண்டையிட முடியாது
ஒரு எந்திரத்தோடுகூட என் கவிதை
பற்றி விவாதிக்க முடியும்
உன்னோடு அதுவும் சாத்தியமில்லை
உனக்கு உருவம் இல்லை
அருவமும் இல்லை
உனக்கு ஜனனமில்லை
மரணமுமில்லை
எதுவுமே இல்லையென்பதன்
குறியீடே சூன்யமென்னும்
நீ

அதுவே ஒரு இருத்தல்
நிலைதானே
என் பெயர் சூன்யம்
என்னை ஸ்பர்ஸித்துக்
காண முடியாததெனினும்
தத்துவார்த்தமாக
உணர முடியும்தானே
ததாகதனைப் போல?
மட்டுமல்லாமல்
இப்போது நீ
என்னோடுதானே உரையாடிக்
கொண்டிருக்கிறாய்?

அதுவொரு மாயை
நான் என்னோடுதான் உரையாடிக்
கொண்டிருக்கிறேன்
நீ என்று
எதுவுமாகவேயில்லாத
சூன்யத்தைத்தான் குறிப்பிட்டுக்
கொண்டிருக்கிறேன்

அப்படிப் பார்த்தால்
எல்லாமே சூன்யம்தான்
நீ ஒரு வாகனத்தைத் தேர்
என்கிறாய்
ஆனால் தேர் என்றவொன்று
இருக்கிறதா?
தேரில் சக்கரங்கள் உண்டு
மேலே கூண்டு உண்டு
இன்னும் பல மரப்பலகைகள்
உண்டு
தேர் எங்கே இருக்கிறது?
ஆகாயத்தை மேகங்களினால்
தொட முடியாதென்பதால்
ஆகாயம் இல்லை என்பாயா?

அப்படியானால் நான்
கொஞ்சம் மாறிக்கொள்கிறேன்
நீரில் தெரியும் நிலவின் பிம்பம்
நிஜமல்ல
ஆகவே
சூன்யம் ஒரு நிழல்
சூன்யம் ஒரு பிம்பம்
சூன்யம் ஒரு எதிரொலி
அதற்கென்று ஒரு ஆன்மா இல்லை

எதற்குமே ஆன்மா இல்லை
பிரபஞ்ச வெளியில் உன் இருப்பு
கண்ணுக்குத் தெரியாத ஒரு
துகள்

அந்தக் கணத்தில்
விதிர்விதிர்த்து எழுந்து விட்டேன்

சூன்யம் உருவற்ற
பேயாக என்னருகே இருந்ததை
என்னால் உணர முடிந்தது
தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது
தொப்பலாக வேர்த்திருந்தது

கானகத்தின் மத்தியில்
ஒரு மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த
அந்தக் குடிலில்
தனித்து அமர்ந்திருந்த நான்
Shostakovichஇன் பதினைந்தாவது
சிம்ஃபனியைக் கேட்க
ஆரம்பித்தேன்