சுயசரிதம்


சிறுவயதிலிருந்தே நானொரு
மூடனாக இருந்தேன்
பேச்சும் வரவில்லை
ஐந்து வயதில் பேச்சு
வந்ததாக அம்மாச்சி
சொல்லிக் கேள்வி
பேச்சு வந்ததும் பேசிய
முதல் வாக்கியம்
அத்தை, நான் உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கவா?
படிப்பும் வரவில்லை
எப்படியோ முக்கியடித்து
பள்ளியிறுதி முடித்தேன்
நினைவு தெரிந்த நாளிலிருந்தே
தினமும் மூன்று நான்கு முறை
முஷ்டி மைதுனம்
பின்னாளில்தான் தெரிந்தது
நானொரு செக்ஸ் அடிக்ட்டென்று
ஏனோ தெரியவில்லை உண்மையே
பேச வருவதில்லை
மனதில் தூய்மையிருந்தால்தானே
உண்மை ஒளி வீசும்
திருடும் பழக்கமும் இருந்தது
பிறன்மனை நோக்குதல்
தவறென்றே தெரிந்ததில்லை
ஒருநாள் ஒரு பெண்ணின்
பிருஷ்டத்தில் கைவைத்து
அவள் கணவனிடம் வாங்கிய
அறை இன்னமும் வலிக்கிறது
அவ்வப்போது ஆண்களோடும்
கூடியதுண்டு
சூதையும் முயற்சித்தேன்
அது மட்டும் வரவில்லை
அதற்கு வேண்டிய மூளைத்திறனில்லை
எப்படியெப்படியோ உருண்டுபுரண்டு
வாழ்வைக் கடத்தியாயிற்று
இப்போது ஞானியாகிவிட்டேன்
என்றால் நம்புவார் யாருமில்லை
ஏன், என்னாலேயே நம்ப
முடியவில்லை
இருந்தும் என் காதலி
சொன்னாள் நீ யுதிர்ஷ்ட்ரனென்று
அந்த வகையில் அதிர்ஷ்டம்தான்
எனக்கும் என் பூனைகளுக்கும்
சொர்க்கம் நிச்சயம்