என்னோடு உரையாடுபவர்கள், என்னோடு நட்பு பாராட்டுபவர்கள் யாவரும் நான் ஒரு மேதை என்பதை நம்ப வேண்டும். அப்படி நம்பாதவர்கள் என்னோடு உரையாட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நம்பாதவர்கள் ன்னோடு நட்பு பாராட்டுவதும் சாத்தியம் இல்லை. இல்லை, சாரு ஒரு பேதை என்று நினைப்பவர்கள் பற்றி எனக்கு அக்கறையே இல்லை. அது அவர்கள் சுதந்திரம். அடுத்தவரின் கருத்துச் சுதந்திரத்தில் நான் குறுக்கிட மாட்டேன்.
ஒரு எங்கே வரும், ஓர் எங்கே வரும் என்பது கூடத் தெரியாத கேணக்கூதியா நான்? யாரிடம் பேசுகிறோம் என்ற அறிவு வேண்டாமா? ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்ற மகா பிரபலமான நாவலை எழுதிய ஜெயகாந்தன் என்ன இலக்கணம் தெரியாதவரா? லயம் கருதி பாரதியே இலக்கணத்தை மீறியிருக்கிறார்? எனக்கு இலக்கணம் முக்கியம் இல்லை. லயம்தான் முக்கியம். கடவுளைக் கண்ட ஒரு ஞானியின் கதை என்பதை விட கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை என்பதில்தான் லயம் வடிவாக அமைகிறது. காமரூப கதைகள் என்று ஒரு நாவல் எழுதினேன். இடையில் க் வர வேண்டும். வந்தால் வார்த்தையின் லயம் கெடும். ஒற்றெழுத்தை நீக்கி விட்டேன்.
ஆசான்களிடம் பேசும்போது ஜனநாயகம் செல்லாது. ஆசான்களிடம் விநயத்தோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உடனே இலக்கணம் தெரியாத மண்டுகள் ”சாருவே சொல்லி விட்டார், இனிமேல் என்ன?” என்று ஃபேஸ்புக்கில் கன்னாபின்னா என்று கழிய ஆரம்பித்து விடுவார்கள். இலக்கணம் தெரிந்து மீற வேண்டும். இலக்கணம் தெரியாமல் ஆட வரக் கூடாது.
இலக்கணம்:
மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் → “ஒரு”
- ஒரு புத்தகம்
- ஒரு மனிதன்
- ஒரு வீடு
- ஒரு கல்
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் → “ஓர்”
- ஓர் உலகம்
- ஓர் உண்மை
- ஓர் அழகிய நாள்
- ஓர் இரவு
- ஓர் இலை