(சென்ற கட்டுரைகளின் தொடர்ச்சி. இது இறுதிப் பகுதியாக இருக்குமா இல்லை, தொடருமா என்பது மற்றவர் கரங்களில்தான் இருக்கிறது.)
நெக்ரொஃபீலியா பற்றித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற சிறுகதையை எழுதினேன். அதற்குப் பிறகும் நெக்ரொஃபீலியா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன். இப்போதும் சௌம்யா செய்த காரியம் நெக்ரொஃபீலியா பிரிவில்தான் வரும்.
”விட மாட்டீர்கள் போலிருக்கிறது” என்று தன் கடிதத்தைத் தொடங்குகிறார் சௌம்யா.
இதற்கு ஒரு கதை இருக்கிறது. சென்ற ஆண்டு ஒரு தம்பதியைச் சந்தித்தேன். இருவருமே என் தீவிர வாசகர்கள். வாசகியின் வயது 22. ஆனால் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் சொன்ன விஷயம்தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் கணவனை நான் தொட்டதே இல்லை. தொட அனுமதித்ததும் இல்லை. இளம் பிராயத்தில் நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் காரணம்.
நான் ஆணாக இருந்தாலும் சிறு வயதில் பெண்ணைப் போல் இருந்ததால் அநேகம் பேர் சூத்தாட்டி என்றுதான் அழைப்பார்கள். சிலர் சரோஜாதேவி என்றும் அழைப்பார்கள். சரோஜாதேவியைப் போல் நடக்கிறேனாம். பள்ளி நாடகங்களிலும் பெண் வேடம்தான் தருவார்கள். இது தவிர பலவிதமான பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள் எல்லாம் உண்டு.
உடல் கேலி செய்பவர்களைக் கொன்று போட வேண்டும் என்று தோன்றும். ஆனால் நான்தான் பெண்ணைப் போல் இருக்கிறேனே? என்னை உடல் கேலி செய்யும் தடிமாடுகளை என்னால் என்ன செய்ய முடியும்?
இதேதான் இருபத்தைந்து வயதிலிருந்து இதோ எழுபத்து மூன்று வயது வரை வேறு விதமாகத் தொடர்கிறது. நான் எது செய்தாலும் கேலி, கிண்டல், பரிகாசம். சௌம்யாவின் அத்யந்த நண்பர் ஹௌளேபெக் புத்தக விழாவில் வைத்து என்னை உடல் கேலி செய்தது பற்றி விலாவாரியாக எழுதி விட்டேன். மன்னிப்புக் கேட்டால் ஆயிற்றா? நடந்ததை எப்படி மறக்க முடியும்? பேசி விட்டு மேடையை விட்டு இறங்கியவுடனேயே “ஐ டோண்ட் லைக் யுர் ஸ்பீச்” என்ற காமெண்ட். சொன்னவருக்கு ஒரே ஒரு முறை என்றுதான் தோன்றும். கிட்டத்தட்ட பதினைந்து முறை. ஒரு முறை என் பேச்சையே அப்படித்தான் ஆரம்பித்தேன். ”என் தோழி ஒருவர் நான் பேசி முடித்ததுமே ஐ டோண்ட் லைக் யுர் ஸ்பீச் என்று சொல்கிறார். இன்றும் அப்படித்தான் சொல்வார். நான் என்ன பட்டிமன்றப் பேச்சாளனா? நான் சொல்வதெல்லாம் அறம் மற்றும் மானுட நீதி சார்ந்தவை…”
நடன கேலி குறித்து மன்னிப்புக் கேட்டார். நானும் மறந்து விட்டேன். ஆனால் ஒன்றிரண்டு முறை நடக்கவில்லையே? தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நிற்காமல் நடந்தது. இது ஒன்றும் தனிப்பட்ட கேலி, கிண்டல், பரிகாசம், பிறகு மன்னிப்பு என்பது அல்ல.
இதை எத்தனை முறை நான் எழுதிப் புரிய வைக்க முயல்வேன்? புரியாவிட்டால் நீங்கள்தான் என்னை விட வேண்டும். நான் அல்ல.
சௌம்யா என்னை விமர்சித்தது எதுவுமே தனிப்பட்ட விமர்சனம் அல்ல.
Status Quo (நிலவும் சமூக அமைப்பு, அதிகார அமைப்பு) Vs Counter culture
Brahminical order (பிராமணிய மேலாதிக்கம் / பிராமணிய ஒழுங்கு (இந்து சமூகத்தின் பாரம்பரிய அதிகார அமைப்பு). Vs விளிம்புநிலைக் கலாச்சாரம் (Marginal culture)
இதே பிரச்சினைதான் என்னுடைய ஏழு ஆண்டுக் கால புதினங்களிலும் கட்டுரைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு குறுநாவலும் இது பற்றியதுதான்.
இதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே எதுவும் கிடையாது.
விட மாட்டீர்கள் போலிருக்கிறது!
எனக்கும் என்ன ஆசையா இதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதற்கு? நானும் அதை அறவே மறந்து விட்டேன். ஆனால் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் சௌம்யா பக்கத்தில் நான் கண்ட இரண்டு குறிப்புகளே இத்தனை பெரிய கட்டுரைத் தொடரை எழுத வைத்து விட்டது.
விடலாம் என்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. சௌம்யாவை ஃபேஸ்புக்கில் நான் ‘ப்ளாக்’ பண்ண வேண்டும். அது சாத்தியமே இல்லை. ஏனென்றால், எனக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதால் அவர்களின் உலகம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கிறது. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் மானுட இனத்தின் மறு பாதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? அதனால் நான் நீண்ட காலமாக மங்கையர் மலர் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தேன். பிறகு எனக்கு அந்தப் பத்திரிகை கிடைக்கவில்லை. அந்தக் குறையை சௌம்யாவின் ஃபேஸ்புக் பக்கம்தான் நிறைவு செய்தது. இப்போது நான் பெண்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறேன். சமீபத்தில்கூட ஒரு பெரிய தர்சனம் கிடைத்தது. உலக நாயகன் பற்றி ரொம்ப காலமாக ரொம்பத் தப்பாக நினைத்திருந்தேன். சௌம்யாவின் தோழியின் பதிவு மூலமாகத்தான் உலக நாயகனின் அருமையே தாமதமாகத் தெரிய வந்தது. சௌம்யா ஒரு ஆள் அல்ல; அவர் மூலமாக பெண்களின் உலகமே தெரிய வருகிறது; போர்ஹேஸின் அலெஃப் என்ற கதையில் ஒரு துளையின் மூலமாக ஒருத்தன் உலகையே காண்பது போல. அல்லது, கிருஷ்ணனின் கதையையும் இங்கே நினைத்துக் கொள்ளலாம். இப்படி பெண்ணுலகின் சாளரமாக விளங்கும் சௌம்யாவை நான் எப்படி ஃபேஸ்புக்கில் ப்ளாக் பண்ணுவது?
இரண்டு குறிப்புகள் என்று சொன்னேன். ஒன்று, சௌம்யாவின் மகள் ஆடிய குத்தாட்டத்தை ரீல்ஸில் கண்டு சௌம்பா அடைந்த புளகாங்கிதம், ரோமாஞ்சனம். எழெட்டு ஆண்டுகள் உயர்தரமான நடனப் பள்ளியில் படித்து ஒருவர் குத்தாட்டம் போட்டால் ரசிக்கிறீர்கள். காரணம், அது உங்கள் மகள். ஆனால் ஒரு எழுபத்து மூன்று வயது ஆள் தன்னுடைய உல்லாசத்தையும், கொண்டாட்டத்தையும், உயிரின் துடிப்பையும் ஆடி வெளிப்படுத்தினால் நையாண்டியும் பரிகாசமுமா? இதுதான் என் எளிய கேள்வி.
அடுத்து, அகால மரணம் அடைந்த எழுத்தாளர் தன் கழுதைக் குரலில் பாடியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்து சௌம்யா எழுதிய குறிப்பு. கழுதைக் குரல் என்று சொல்வது இறந்து போனவரை நான் அவமதிக்கும் செயலாம்! எப்படி? அகால மரணம் அடைந்து விட்டார் என்பதற்காக அவரது கழுதைக் குரலை நான் பாலமுரளி கிருஷ்ணா என்று பொய் சொல்ல முடியுமா? இந்த காணொலியை அந்த எழுத்தாளர் உயிரோடு இருந்தால் வெளியிட விரும்புவாரா? அவர் இல்லாத போது அவரது கழுதைக் குரல் பாடலை வெளியிட்டது அவரை அவமதிக்கும் செயல்தானே?
”நானா வெளியிட்டேன்? எத்தனையோ பேர் பகிர்ந்தார்கள், நானும் பகிர்ந்தேன்” என்கிறார் சௌம்யா.
எல்லோரும் வெங்காயம் பூண்டு சாப்பிடுகிறார்கள். நீங்களும் சாப்பிடுவீர்களா? நாகரீகம் கருதியே வெங்காயம் பூண்டு என்று எழுதியிருக்கிறேன். சரியான வார்த்தையை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.
என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டே பேரின் பதிவுகள்தான் தெரிகின்றன. சௌம்யா, அராத்து. சௌம்யா பெண்ணுலகின் பலகணி. அராத்து உலகுக்கே பலகணி. அவரது பக்கங்கள் மூலமாகத்தான் எனக்கு ஈரான் போர் போன்ற துர்ச்செய்திகளும், ஒன்பது போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை போன்ற நற்செய்திகளும் கிடைக்கின்றன. ஆனால் என்ன, அவரது மணிப்பிரவாள நடைதான் உணவினிடையே அகப்படும் கற்களாக பற்களை உடைக்கின்றன. இருந்தாலும் ஜென்ரல் நாலேட்ஜ் என்ற மேட்டரில் நிறைய லெர்ண் பண்ணிக்கொள்கிறேன்.
“கழுதைக் குரல்’ என்று ஒரு படைப்பாளியை இழிவுபடுத்திவிட்டு, இப்போது அவருக்காக ‘வழக்காடுகிறேன்’ என்று சொல்வதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை.
நிஜமான வன்மம் என்பது வீடியோ எடுத்தவரிடமோ, அதைப் பகிர்ந்தவரிடமோ இல்லை. குரலை ‘கழுதை’ என்று முத்திரை குத்தி, அவர் பெண்களிடம் இளிப்பவர் என்று கொச்சைப்படுத்தும் உங்கள் எழுத்தில்தான் இருக்கிறது.
உண்மை தெரியாமல் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சிறுமைத்தனம். அதைத் தத்துவார்த்த நியாயங்கள் சொல்லித் தக்க வைக்க முயல்வது ‘அறிஜீவித்தனமான பித்தலாட்டம்.” “
நீங்கள் அன்னாரின் பாடலைப் போட்டதால்தான் கழுதைக் குரல் என்றே சொல்ல வேண்டி வந்தது. கழுதைக் குரலை கழுதைக் குரல் என்று சொல்வதில் எந்த இழிவும் எனக்குத் தெரியவில்லை. என்னுடைய குரல் கழுதைக் குரலை விட மோசம். பன்றிக் குரல் மாதிரி இருக்கும். இதில் என்ன இழிவு இருக்கிறது? யார் யாருக்கு என்ன குரல் வாய்க்கிறதோ, அதுதானே வரும்? இதில் எனக்கோ அந்த எழுத்தாளருக்கோ என்ன விருப்பத் தேர்வு இருக்கிறது?
என்னைப் பித்தலாட்டக்காரன் என்று சொன்னது பற்றி மிகவும் மகிழ்ந்தேன். என்னடா இது, இத்தனைக் காலம் ஆயிற்று, ஒன்றும் கிடைக்கவில்லையே என்ற சம்சயத்தில் இருந்தேன். கிடைத்து விட்டது. இனி ஒவ்வொன்றாக வரட்டும். பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னைப் பிரிந்தவர்கள் என்னை தூஷணை செய்வதில் விதிவிலக்கே இருக்கக் கூடாது. இருந்தால் எனக்கு ரொம்பவும் ஏமாற்றமாக இருக்கும். என்னை நீங்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாக்காமல் இருந்ததில் எனக்குப் பெரும் உவகையே.
(ஒட்டு மொத்த சமூகமே பெண்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறது. எனவே இந்தப் பதிவின் மூலம் எனக்குத்தான் கெட்ட பேர் ஏற்படும். அதுதான் சௌம்யாவின் நோக்கமும். இருந்தாலும் என் தரப்பைச் சொல்ல வேண்டும். சொல்லி விட்டேன்.)