ஒருவர் எழுபத்து மூன்று வயதில் பப்பில் நடனம் ஆடுகிறார்.
மற்றொருவர் அதை யூட்யூபில் பார்த்து நடனம் ஆடியவரைப் பரிகசிக்கிறார். இது ஒன்றும் புதிய காட்சி அல்ல. ஆனால் அதற்குப் பிறகு நிகழும் விஷயம்தான் சுவாரசியம்.
முதலில் ஒருவர் அந்த மனிதனைப் பரிகசிக்கிறார். பின்னர் அந்த மனிதன் எதிர்வினை ஆற்றினால் “என் கண்ணியத்தைக் குலைக்கும் வன்மமான செயல்” என்ற பதில் தாக்குதல் வருகிறது.
ஜான் பொத்ரியார் ஒருமுறை “Desert of the Real” என்ற ஒரு வினோதமான சொற்றொடரைப் பயன்படுத்தினார். அது ஒரு இலக்கிய அலங்காரம் மட்டும் அல்ல. மனிதர்கள் ஒரு கட்டத்தில் நிஜத்தை நேரடியாக அனுபவிப்பதை நிறுத்தி, தாங்களே உருவாக்கிய பிம்பங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான ஒரு உருவகம்.
ஒரு மனிதனைப் பார்த்து ஒரு பிம்பத்தை உருவாக்குவது மிகவும் எளிது.
“இவர் இப்படிப்பட்டவர்.”
“இவர் இப்படித்தான்.”
“இவர் இப்படித்தான் நடக்கிறார்.”
அந்தப் பிம்பம் உருவானவுடன் நிஜம் தேவையில்லை.
அந்தப் பிம்பமே நிஜமாக மாறிவிடுகிறது. இந்த நிகழ்வைத்தான் பொத்ரியார் “simulation” என்று சொன்னார். ஒரு மனிதன் நிஜத்தில் என்ன செய்கிறான் என்பது முக்கியமில்லை. நாம் அவனைப் பற்றி உருவாக்கிய கதைதான் முக்கியமாகிறது. இந்தப் பிம்பங்களுக்குள் வாழ ஆரம்பிக்கும் தருணத்தில்தான் மனிதர்கள் மெதுவாக நிஜத்திலிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். அந்த விலகலைத்தான் பொத்ரியார் “நிஜத்தின் பாலைவனம்” என்று அழைத்தார்.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். தத்துவம் என்பது மற்றவர்களைப் பற்றிய தீர்ப்புகளால் தொடங்குவதில்லை. அது நம்மைப் பற்றிய சந்தேகத்தால் தொடங்குகிறது. நாம் உருவாக்கிய அந்தப் பிம்பத்தைப் பார்த்து
“இது உண்மையிலேயே நிஜமா? அல்லது என் மனதின் கற்பனையா?” என்று நம்மையே கேட்கும் அந்தச் சிறிய தருணமே தத்துவம் அந்த சுயப் பரிசோதனை (self-interrogation) இல்லாத இடத்தில் தத்துவம் இல்லை.
இதையே வேறு ஒரு மொழியில் விளக்கியவர் மிஷல் ஃபூக்கோ.
ஃபூக்கோவின் கருத்துப்படி, மனிதர்கள் பல நேரங்களில் “நெறிமுறை” என்ற மொழியைப் பயன்படுத்தும் போது அவர்கள் உண்மையில் ஒரு நெறிமுறையை காப்பாற்றுவதில்லை. அவர்கள் காப்பாற்றுவது ஒரு power position. அதாவது: நான் மற்றவரை நையாண்டி செய்யலாம். ஆனால் அவர் பதில் சொன்னால் அது ’வன்மம்.’
இந்த தர்க்கத்தில் ஒரு சிறிய காமெடி இருக்கிறது. முதலில் கல்லை எறிந்து விட்டு, நதியிடம் கேட்பது போல: “ஏன் இவ்வளவு அலை?”
இந்த முரண்பாட்டை உடைக்க முயன்றவர் ஜாக் தெரிதா. தெரிதா deconstruction என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது, அது வெறும் இலக்கியப் பயிற்சி அல்ல. அது ஒரு நெறிமுறைப் பயிற்சி. நாம் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் கருத்துக்களையே முதலில் உடைத்துப் பார்க்க வேண்டும் என்ற பயிற்சி. அந்த உடைப்பு மற்றவர்களிடம் தொடங்கக் கூடாது. அது நம்மிடம்தான் தொடங்க வேண்டும். ஏனெனில் தத்துவம் என்பது நம் வன்மத்தைக் கூர்மைப்படுத்தும் ஆயுதம் அல்ல. அது நம் உறுதிப்பாடுகளை சந்தேகிக்கச் சொல்லும் ஒரு பழக்கம்.
இந்தக் காரணத்தினால்தான் கலை ஒரு முக்கியமான அனுபவமாக மாறுகிறது.
கலை என்பது மற்றவரின் கண்ணியத்தைச் சிதைப்பதற்கான கருவி அல்ல. அது நம்முள்ளே இருக்கும் சிறுமைகளைச் சிதைக்கும் ஒரு அனுபவம். நாம் உருவாக்கிய பிம்பங்களை உடைக்கும் ஒரு அனுபவம்.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஒரு மனிதன் எழுபத்து மூன்று வயதில் பப்பில் நடனம் ஆடுவது ஒரு காமெடிக் காட்சியாகத் தோன்றவில்லை. அது ஒரு சிறிய சுதந்திரம். வாழ்க்கை இன்னும் உயிர்த்திருக்கிறது என்று உடல் சொல்வது போல. இன்னும் ஒரு இரவு இசைக்குள் தன்னை ஒப்படைக்கும் ஒரு மனிதன்.
அதைப் பரிகசிப்பது நெறிமுறையின் அதிகாரம். பின்னர் அதற்கான எதிர்வினையை “வன்மம்” என்று அறிவிக்கும் அந்தத் தருணத்தில் — ஒரு சிறிய விஷயம் நடக்கிறது.
நாம் மெதுவாக நிஜத்திலிருந்து விலக ஆரம்பிக்கிறோம். அந்த விலகலைத்தான் பொத்ரியார் ஒரு வினோதமான உருவகத்தால் விளக்கினார்:
நிஜத்தின் பாலைவனம்.
அந்தப் பாலைவனத்தில் ஒரு விசித்திரமான காட்சி நடக்கிறது. மனிதர்கள் நிஜத்தைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் தாங்களே உருவாக்கிய பிம்பங்களோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் நெறிமுறைகளின் பக்கம் நிற்பவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால், நடனம் வாழ்க்கையின் அறிகுறி.
நெறிமுறை தீர்ப்பு — பாலைவனத்தின் அறிகுறி.
பின்குறிப்பு: ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற நாவலில் முதலில் சிதைவுக்கு உட்பட்டிருப்பது அதை எழுதியவர்தான். அதை நாவலில் காணலாம். முழுக்க முழுக்க self interrogation.
பின்குறிப்பு 2: ”ஏதோ ஒருமுறை சொன்னேன், மன்னிப்பும் கேட்டாயிற்று.” இங்கே விஷயம் திரிக்கப்படுகிறது. பல நூறு முறை நடந்த விஷயம் அது. ஆடை அலங்காரத்துக்கும் பல நூறு முறை. கோவாவில் கெஸ்ட் ஹவுஸில் நடனமாடி அதை ரீல்ஸில் வெளியிட்ட போதும் அக்கப்போர் ஓயவில்லை. சௌம்யாவின் மகளிடம் போய் நீதி கேட்க வேண்டியதாயிற்று. மகள் என் சார்பாக நீதி சொன்னாள். இப்படி பல கதைகள் இருப்பதால்தான் கட்டுரை ஐந்து அத்தியாயங்கள் நீண்டது.