நேற்று காலை ஏழரை மணிக்கு எனக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைப் பார்த்ததிலிருந்து ஒரே மன உளைச்சல். மரண பயத்தினால் அல்ல. அந்த மொட்டைக் கடுதாசியில் என் பெயரை சாரு நாயுடு என்று குறிப்பிட்டிருந்ததால். என் நைனா நாயுடு சமூகம் அல்ல. காட்டு நாய்க்கன் சமூகம். அம்மா நாட்டுக்கோட்டை செட்டி. காட்டு நாய்க்கன் எப்படி நாயுடுவாக ஆக முடியும்? மேலும், நான் இன அடையாளத்தையும், தேச அடையாளத்தையுமே மறுத்து வருபவன். நான் எப்படி சாதி அடையாளத்தை, அதிலும் என் பிறப்புக்கு இரண்டு பேர் காரணமாக இருந்திருக்க, ஒருவரின் சாதி அடையாளத்தை எனக்குச் சூட்டலாம்? எனக்கு மொட்டைக் கடுதாசி அனுப்பியர் (மரியாதை ர் அல்ல; அனுப்பியது ஆணா பெண்ணா என்று தெரியாததால் வந்த ர்) நிச்சயம் மனநோயினால் பீடிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகமே இல்லை.