இறைவிக்கு அளிக்கப்பட்ட அப்பம்


இறைவி!
காற்றின் றெக்கைகளில் பறந்து
மலர்களின் ரகசியங்களைச் சொன்ன
என் கவிதைகள்:

இந்தப் பூமியின் களமாக
மழைத் துளிகளால் நனைந்து,
காற்றின் ஸ்பர்ஸத்தினால் நடுங்கும்
என் உடல்

அடர்ந்த இரவின்
நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக
மௌனத்தின் ஆழத்தில் மூழ்கி
ஒளியின் தேடலில் தவிக்கும்
என் ஆத்துமா

பூமியின் இருமுனையில் ஓடும்
சிவந்த நதியாக,
உன் உதடுகளில் தவழ்ந்து,
புனிதமான பனியாக உருகி,
பூமியின் இதயத்தில் தூங்குகிறது.
என் குருதி

பாறையில் செதுக்கப்பட்ட புராணம்
உன் விரல்களின் தொடுதலில்
பறவையாக மாறி
அனந்தத்தின் வானில் பறக்கிறது
என் எலும்பு

நெருப்பின் மையத்தில் மறைந்த விதை
உன் மௌனத்தில் முளைவிட்டு
ஒரு மலராக
எல்லையற்ற இரவில் பூக்கிறது
என் எலும்பின் மஜ்ஜை

என் உடல்
என் ஆத்துமா
என் குருதி
என் எலும்பு
என் எலும்பின் மஜ்ஜை
என் கவிதை
நீ புசிக்கவும் ருசிக்கவும்
பிய்த்துப் பிய்த்துத் தருகின்றேன்
பதிலுக்கு எதுவும் வேண்டாம்
கொடுப்பதில் இன்பமும்
மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கிறது
இது போதும்
ஆமென் –
இது வார்த்தையல்ல
உன் முகத்தில் ஒளிரும்
நட்சத்திரங்களின் ஒளி