தகப்பனின் வளர்ப்பு மகன் அவன். ஆனாலும் அவனை தகப்பன் ஒருநாளும் வளர்ப்பு மகனென நினைத்ததில்லை. மகன் மரீன் எஞ்ஜினியரிங் படிக்கிறான். இரண்டாம் ஆண்டு கட்டணம் கட்ட காசு இல்லை. அம்மா மகனிடம் சொன்னாள். படிப்பைப் பாதியில் நிறுத்தி விடலாம். இங்கேயே சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பி.காம் மாதிரி ஒரு படிப்பில் சேர்ந்து கொள். அப்போது தகப்பன் விருப்பு ஓய்வு பெற்றதால் இரண்டரை லட்சம் கிடைத்தது. தகப்பனைப் பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் ஹார்ட் அட்டாக் நிச்சயம், இப்போதே ஆஞ்ஜியோ செய்து, ஸ்டெண்ட் வைத்து விடுங்கள் என்கிறார். இரண்டரை லட்சம் ஆகும். மகனுக்குக் கட்டணம் இரண்டரை லட்சம்.
நாம் செத்தாலும் பரவாயில்லை, மகன் படிக்கட்டும், மகனாவது நம்மைப் போல் பிச்சையெடுக்காமல் வாழட்டும் என்று இரண்டரை லட்சத்தைக் கட்டி மகனின் படிப்புக்கு இடையூறு ஏற்படாமல் செய்தான் தகப்பன்.
மருத்துவர் சொன்னபடி ஆறே மாதத்தில் தகப்பனுக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி ஒன்றே வழி. கட்டணம் இரண்டரை லட்சம். தகப்பனிடம் இருந்தது ஆயிரம் ரூபாய். தகப்பன் எழுத்தாளன். அவன் வாசகர் ஒருவர் இரண்டு லட்சம் கொடுத்தார். மற்ற சில வாசகர்கள் ஐம்பதாயிரம் கொடுத்தார்கள். சுபம்.
மகன் படித்தான். அடுத்த ஆண்டுக்குக் காசு இல்லை. தகப்பனின் வாசகி ஒருவர் மகன் படித்து முடிக்கும் வரை கட்டணம் கட்டினார்.
மகன் பள்ளியில் படிக்கும்போதும் வீடு வறுமையில்தான் இருந்தது. பள்ளிக் கட்டணத்துக்கும் பைசா இருக்காது. மனைவியின் நகைகளை எடுத்துக்க்கொண்டு சேட்டுக் கடைக்குப் போவான் தகப்பன். அவனைக் கண்டதுமே சேட்டு அவன் பெயர், அவன் தகப்பனார் பெயர், விலாசம் எல்லாம் எழுதிவிட்டு, நகையை வாங்கிக் கொண்டு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பார்.
மகன் மரீன் எஞ்ஜினியரிங் முடித்தான். தகப்பனின் கடனை அடைக்கவில்லை. ஒரு பைசா தரவில்லை. தகப்பனும் கேட்கவில்லை. தகப்பன் எப்போதும் போல் வாசகர்களிடம் கையேந்தி ‘இண்டர்நெட் பிச்சைக்காரன்’ என்ற பட்டப் பெயரோடு வாழ்ந்தான்.
கதை அதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. மகன் தன் அன்புப் பரிசாக ஒரு க்ரேட் டேன் நாயையும், ஒரு லேப்ரடார் நாயையும் வாங்கி அன்னையிடம் கொடுத்தான். அன்னையும் மிக மகிழ்ந்து வாங்கிக்கொண்டாள்.
ஐயோ, ஏற்கனவே நான் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறேன், இந்த இரண்டு நாய்களும் என்னைக் கொன்று விடும். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன் தான் க்ரேட் டேன் வளர்க்கிறார் என்று கதறினான். அம்மையும் கேட்கவில்லை. புத்திரனும் கேட்கவில்லை. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனிடம் “மாதம் ஒரு ஐயாயிரம் ரூபாய் அனுப்ப முடியுமா? நாய்களின் உணவுக்காக” என்று மகனிடம் கெஞ்சினான் தகப்பன். மகன் பதிலே சொல்லவில்லை. வேறொரு நாள், “இரண்டு செல்லத்துக்கும் வஞ்சிரம் மீன் வாங்கிப் போடுங்கள், மத்தி மீன் வேண்டாம்” என்று புத்திமதி சொன்னான். மத்தி கிலோ நூறு ரூபாய். வஞ்சிரம் கிலோ ஆயிரத்து ஐநூறு.
இந்த நிலையில்தான் மடிக்கணினி சம்பவம் நடந்தது. சீனியிடம் கேட்டால் அரை நிமிடத்தில் என் பிரச்சினை தீர்ந்து விடும் என்றான் எழுத்தாளன் தன் மனைவியிடம். மனைவி மகனை அழைத்தாள். மகனும் அரை நிமிடத்தில் சரி செய்து, தகப்பனிடம் “இதை நீங்களே கற்றுக் கொள்வதற்கென்ன?” என்று வெறிநாய் போல் குலைத்தான்.
மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்தான் எழுத்தாளன். நாலு வருட உழைப்பு போயிற்று. கோபத்தில் நெஞ்சு வலி வந்தது. பதிலுக்கு மகன் தகப்பனைப் பார்த்து ங்கோத்தா எனத் திட்டினான்.
இருபத்தைந்து வயது வரை நான் என் பெற்றோரால் ஒரு பேரரசனாய் வளர்க்கப்பட்டேன். இப்போது என் மகன் என்னை ங்கோத்தா எனத் திட்டுகிறான். அது பிரச்சினையே இல்லை. ஆனால் இத்தனைக்கும் காரணமான என் மனைவி தன் மகனைக் கண்டிக்கவில்லை. ஆஹா, நான் திட்ட வேண்டியதை என் மகன் செய்தான் என்ற திருப்தியுணர்வையே அவள் முகத்தில் கண்டேன்.
அதுதான் என்னைப் பதற்றப்படுத்தியது. நேராகக் காவல் நிலையம் சென்றேன். டொமெஸ்டிக் வயலின்ஸில் புகார் கொடுக்க எண்ணினேன். இருந்தாலும் அப்போது எனக்கு நெருங்கிய நண்பர் தினமலர் ரமேஷ். ஃபோன் போட்டேன். வேண்டாம் என்றார். அவர் சொன்னால் கேட்பேன். திரும்பி வந்தேன்.
இன்று வரை என் மகன் எனக்கு ஒரு பைசா கொடுத்ததில்லை. கடன் வாங்கிய நான்கு லட்சத்தில் இரண்டு லட்சத்தை கல்லில் நார் உரிப்பது போல் கேட்டு வாங்கினேன். இன்னும் இரண்டு லட்சம் காந்திக் கணக்கு. படிக்க வைத்த செலவும் காந்திக் கணக்கு. இப்போது மகனின் மாத ஊதியம் பத்து லட்சத்துக்கும் மேல். மாதம் ஐநூறு கூட அனுப்புவதில்லை. (எனக்கு பல ஆட்டோ டிரைவர்களும் மாணவர்களும் மாதம் முந்நூறு ரூபாய் அனுப்புகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.)
அதை விடக் கொடுமை, ஒரு முறை என் வளர்ப்பு மகன் வளன் தன் முதல் மாத ஊதியத்தில் எழுபத்தைந்து ஆயிரம் ரூபாய் அனுப்பினான். அடுத்த நாளே என் மகன் என் மனைவியிடம் “நான் ஒரு புதிய கார் வாங்கியிருக்கிறேன், முதல் பணம் நீ கொடு” என்றான். என் மனைவி என்னிடம் கேட்டு ஐம்பதாயிரம் வாங்கி அனுப்பினாள். வளன் கொடுத்த எழுபத்தைந்தாயிரத்தில் ஐம்பதாயிரம் கொடுத்தேன்.
இப்போது பத்து லட்சத்துக்கும் மேல் மாத ஊதியம் பெற்றும் என் மகனைப் போல் துயர வாழ்க்கை வாழ்பவர் வெகு சிலரே.
நான் யாருக்கும் சாபம் கொடுத்ததில்லை. சுயநலமே காரணம். சாபம் கொடுத்தால் அது சாபம் கொடுத்தவரையும் பாதிக்கும். என் அம்மாச்சி சாட்சி. தன் மூத்த மகளுக்குத் தன் செல்வத்தையெல்லாம் செலவு செய்து பெரிய இடத்தில் மணம் முடித்தார்கள். அம்மாச்சியை வறுமை சூழ்ந்தது. கொத்தனார் வேலைக்குச் சென்றார்கள். மூத்த மகள் பெரும் பணக்காரி. ஏதோ பத்து இருபது கேட்டு கார்டு போட்டார். பணம் கேட்டு எழுதாதே என பதில் வந்தது. நேராகப் புதுக்கோட்டை சென்றார்கள் அம்மாச்சி. அம்மாச்சி நாட்டுக்கோட்டை செட்டி இனம். புதுக்கோட்டையில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தார் என் பெரியம்மா. வீட்டுக்குப் போனதும் அம்மாச்சிக்கு செருப்படி விழுந்தது. ஆம், செருப்பாலேயே அடி.
நேராக சேர்வராயன் மலைக்கு வந்து மண்ணள்ளி வைத்தார்கள் அம்மாச்சி. பெரியம்மாவின் ஒரே மகன் – சந்தானம் என்ற பெயர் கூட இன்னமும் என் ஞாபகத்தில் இருக்கிறது – செத்துப் போனான். அம்மாச்சியின் இறுதிக் காலம் மிகப் பரிதாபம். ஒரு ஆண்டு படுக்கையிலேயே மலமும் மூத்திரமும் போய் இறந்தார்கள்.
அந்த அம்மாச்சியின் செல்லப் பிள்ளை நான். இப்போதும் என் அருகில் என் காவல் தெய்வமாய் நிற்கிறார்கள்.
நண்பர்களே, நான் சாபமிட மாட்டேன். என் அம்மாச்சி உயிரோடிருக்கும்போதே பெரும் பேய். இப்போது நிஜப்பேய். எனக்கு மட்டும்தான் தேவதை. என்னை நீங்கள் அவமானப்படுத்தினால் அவள் சாபம் உங்களைத் தொடரும். கண் கொண்டு பார்க்கின்றேன். சின்ன அவமானமாக இருந்தால் சின்ன கேடு. பெரிய அவமானமாயிருந்தால் பெருங்கேடு.
நம்புங்கள், நம்பாமல் போங்கள். ஆனால் எனக்குப் பிரியமானவர்களுக்குப் பெருங்கேடு சூழ்வதை என்னால் பார்க்க முடியவில்லை. அது என்னையும் பாதிக்கிறது. என் மீது கோபம் இருந்தால் இறை சக்தியிடம் போட்டு விடுங்கள். அது எனக்குத் தண்டனை வழங்கும். நீங்களாக என்னை அவமதிக்காதீர்கள். உங்களை அது பெருமளவில் பாதிக்கும்.
நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா? விட்டு விடுங்கள். உங்கள் வினை உங்களை வந்தடையும்.
என் மகனுக்கும் அதுதான். வினை விதைத்தான், வினை விளைந்தது.
கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை இப்படி என் நண்பர்கள் பாதிப்படைவதை நான் கையறுநிலையில் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் அவர்கள் மீது கொண்ட பிரியத்தினால் இதைச் சொல்கிறேன்.
சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai