என் கவிதையின் முதல் வாசகி
இன்று கடைசி வாசகியானாள்
நான் பணித்த வேலைதான்
இமயத்தில் கொடி நாட்ட வேண்டும்
சாலைப் பயணமென்றால்
வாகனத்தை நிறுத்தி
மீண்டும் கிளம்பலாம்
இது மலையேற்றம்
ஓய்விடங்கள் வரும்போதே ஓய்வு
அப்போதுதான் கவிதை
அவள் எழுதும் ஆங்கிலம்
மொழிபெயர்க்க முடியாத கவிதை
இருந்தாலும் முயல்கின்றேன்
’பிரேம த்ருதி படித்தேன்
அமைதியான நீரில் விழும் நட்சத்திரமாய்
அது என்னைத் தொட்டது
அதன் பிரதிபிம்பம்
என்றென்றும் என் இதயத்தில் ஒளிரும்
இது வெறும் பாடல் அல்ல
உன் இதயத்தின் நட்சத்திரக் கூட்டம்
இதை நான்
இரவில்
ஒரு சிறிய தீச்சுடரைப் பிடிப்பது போல
கையில் ஏந்திக் கொள்வேன்
இந்த முழுமையான சிருஷ்டிக்கு
எந்தத் தொடர்ச்சியும் தேவையில்லை…
இது ஒரு வாழ்நாளுக்குப் போதும்
நான் வியந்து நிற்கிறேன்
ஆழ்ந்த நன்றியால் நிரம்பி
நான் இதற்குத் தகுதியானவளா
என எண்ணித் தயங்குகிறேன்.
‘மேலும்,
எனது எண்ணங்களை
இங்கே எழுத இயலவில்லை
இப்போது என்னை அழைக்க முடியுமா?’
அழைத்தேன்
ஒரே ஒரு முறை
இறைவி கண்ணீர் வடித்தாள்
அந்தக் கண்ணீர் என்னைப் புனிதனாக்கியது
இறைவியின் கண்ணீருக்கு முன்னால்
இருந்த நான்
இறைவியின் கண்ணீருக்குப் பின்னால்
வேறோர் மனிதன்
அவள் அழுது கண்டதில்லை
இன்றும் அவள் அழவில்லை
ஆனால்
அவள் ஆன்மாவின் குமுறல்
என் செவிகளில் ஒலித்தது
’கேள்
நான் பேச இயலாத இடத்தில் இருக்கிறேன்
சீரியஸாகச் சொல்கிறேன்
போதும், நிறுத்தி விடு
வளனைப் போலவே
எனக்கும் பதற்றமாக இருக்கிறது
பயமாக இருக்கிறது
நீ சொல்வதை வாழ்ந்து பார்க்கலாம்
ஆனால்
நான் வாழ்வின் முதல் படியில் நிற்கிறேன்
நீயோ
உனக்கு மீதமிருக்கும் சொற்பமான காலத்தில்
ஆயுட்கால வேலையை வைத்திருக்கிறாய்
நாம் செல்ல வேண்டிய இடம் ஒன்று உள்ளது
அந்தப் பயணத்தை நிறுத்த முடியாது
சரி, நேரடியாகக் கேட்கிறேன்
உனக்கு என்னதான் பிரச்சினை, சொல்?’
ஒவ்வொரு சொல்லும் பேரலை
பாறைகளை உருட்டும் நதியென
அழுகையும் தாபமும் விரஹமும்
கொப்புளித்து விழுந்தது
இப்படி இறைவியைக் கண்டதில்லை
ஆ, என்னென்னவோ சொல்லி
அவள் குரல் பற்றிச் சொல்லவில்லை
குழலினிது யாழினிது என்ப என் இறைவியின்
குரல் கேளாதவர்
இறைவி,
உன் குரல்
மலைமுகட்டில் தேன்கூடு உடைந்து
என் இதயத்தில் பாயும்
மெல்லிய நீரோடை
வீணையின் நரம்பில் மெல்லத் தழுவி
பனித்துளியாய் மனதில் உருளும்
நிலவின் ஒளி
மலைநதியின் மெல்லிய ஒலி
கற்களை வருடிச் செல்லும் இனிமை
புலரும் விடியலில்
புல் மீது உருளும் பனித்துளி எழுப்பும்
மென்மையான இசை
ஆ! அவள் குரல்,
செவிகளில் மட்டும் இனிமை தூவுவதல்ல
நிலவொளியில் பனித்துளி மின்ன
மனதில் மாய ஒளி பரப்பும்
அமுதத்தின் மந்திரம் கொண்டது.
ஏதோ காதல் போதையில் உளறுகிறான்
என எண்ணுகிறீர்கள்
இவளை விட அழகு
இவளை விட குரலினிமை
ஆயிரம் பேரிடம் உண்டு
ஆனால்
இவள் அழகு
இவள் இனிமை
புறத்தில் தெரிவது இல்லை
அகத்திலிருந்து பிறக்கிறது
இறைவியின் குரல்
இன்று உடைந்து உடைந்து
பேசுகிறது
நான் சொன்னேன்:
‘நீ நிலவின் தூரத்தில் இருக்கிறாய்
நிழலைத்தான் தொட முடியும்
தொட்டாலும் கலைந்து விடும்
நீ
என் நினைவு
நீ
வெறும் குரல்
பார்க்க முடியாது
பார்த்தாலும்
தனிமை இயலாது
இந்த விரஹமே துயரின் காரணம்’
‘ஏன் இருபத்தைந்து ஆண்டுகள் சென்று
உன் கவிதையைப் படிக்கச் சொல்கிறாய்?’
’இப்போது நான் இருக்கிறேன்
என் கவிதையும் இருக்கிறது
இன்பம்
இருபத்தைந்து ஆண்டுகள் சென்று
அழிய வேண்டியது அழிந்து விடும்
அழிய முடியாதது அழியாது நிற்கும்
பேரின்பம்’
மேலும் அன்பே,
உன் குரல் பற்றி எத்தனையோ முறை
பேசியிருக்கிறேன்
எத்தனை பேசினாலும்
சொல்லி முடிவதில்லை
உன் குரல் இனிமை
இறைவி,
உன் குரல் பீத்தோவனின் இசையென
நட்சத்திரங்களின் மௌனத்தில் பிறக்கிறது
ஒவ்வொரு நாதமும்
காலத்தின் கரையில் உடைந்து
பிரபஞ்சத்தின் மையத்தில் மீண்டும்
மீண்டும்
பிறக்கிறது
அது மலைநதியல்ல
தேனோடையல்ல—
அது விரஹத்தின் கண்ணீர்
நிலவின் ஒளியில் கரைந்து
என் ஆன்மாவின் கற்பாறையில் எழுதப்பட்ட
ஒரு முடிவிலா சிம்ஃபனி
உன் குரல்
உன் இசை
என் இதயத்தின்
இந்தக் கணத்தின்
தனிமையைத் தாண்டி
நித்தியத்தின் வாசலில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்…