இலக்கிய நிகழ்ச்சிக்கான
ஓர் அழைப்பிதழைக் கண்டேன்
பதினெட்டு பெயர்களுக்கு முன்னால்
எழுத்தாளர் எனவும்
நான்கு பெயர்களுக்கு முன்னால்
கவிஞர் எனவும்
போட்டிருந்தது
எழுத்தாளரை எழுத்தாளர் என்று போடாமல்
நடிகர் என்றோ டாக்டர் என்றோவா
போட முடியும்?
எழுத்தாளர் எழுத்தாளர்
கவிஞர் கவிஞர்
இதில் என்ன அக்கப்போர்?
எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது
இப்படி எழுதியது தெரிந்தாலே
அது தற்கொலை பண்ணிக் கொள்ளும்
எங்கள் வீட்டில் ஸோரோ இருந்தது
என்றுதான் சொல்ல வேண்டும்
எழுத வேண்டும்
ஸோரோவின் தர்க்கம் என்னவென்று
யூகிக்க முடிகிறது
நான் நாய்தான்
ஆனால்
எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதே?
சரி, பெயரைப் போட்டுத்தானே
எழுத்தாளர் என்று போடுகிறோம்?
இல்லை,
ஸோரோ ஒப்புக்கொள்ளாது
நாய் ஸோரோ என்று சொன்னாலே
பாய்ந்து குதறி விடும்
நாய் என்ற சொல்லே
அதற்கு ஆகாது
இது ஒரு எளிமையான விஷயம் இல்லையா?
மனிதனை மனிதன் என்று
யார் அழைக்கிறார்கள்?
ரேமண்ட் கார்வர் தன் கல்லறையில்
கவிஞன் என்று பொறிக்கச் சொன்னான்
தேவையென்றால் கவிஞனுக்குப் பின்னால்
சிறுகதை எழுத்தாளன்
என்றும் போட்டுக் கொள்ளலாம் என்றான்
நமக்கு அந்த வசதியில்லை
தாவர பட்சிணிகளின் உடல்
தாவரத்தாலே உண்ணப்படும்
மாமிசப் பட்சிணிகளின் உடல்
மாமிசப் பட்சிணிகளாலே உண்ணப்படும்
அது பிரபஞ்ச விதி
அதனாலேதான் எல்லோரும் இங்கே
உயிருடனிருக்கும்போதே
எழுத்தாளனென்றும்
கவிஞனென்றும்
போட்டுக் கொள்கிறார்களா?