ஹைதராபாதில் நவம்பர் 14, 15 தேதிகளில் நடக்கும் சாயா இலக்கிய விழாவில் கலந்துகொள்ள இருக்கிறேன். நிகழ்ச்சி அட்டவணை கீழே உள்ளது. ஹைதராபாத் நண்பர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் கலந்து கொள்ளும் உரையாடல் 14ஆம் தேதி காலை பதினோரு மணிக்குத் தொடங்குகிறது. தலைப்பு: The Aesthetics of Transgressive Prose. நான் கலந்து கொள்ளும் மற்றொரு உரையாடல் 15ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. அந்த உரையாடலில் நானும் ஜெயமோகனும் கலந்து கொள்கிறேன். தலைப்பு: Search for Aesthetics in Contemporary Tamil Literature. இங்கே எனக்குத் தற்காலத் தமிழ் இலக்கியம் என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. அசோகமித்திரன், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, நகுலன், கோபி கிருஷ்ணன் போன்றவர்கள் ”தற்காலம்” என்ற பிரிவில் அடங்குவார்களா என்று விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு இந்த “காலம்” என்பதில் பெரும் குழப்பம் உண்டு. நான் நிகழ்கால நாவலையே சரித்திர நாவல் என்று சொல்லும் ஆள். எனக்கு நேற்றுக்கும், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு தினத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. என்னைப் பொறுத்தவரை மோடிக்கு முன்னோடி அசோகர். இங்கே எனக்குக் காலக்கணக்கு இல்லை. மோடி தற்காலம். அசோகர் தற்காலத்துக்குக் கொஞ்சம் முன்னால். சரி, காலம் எப்படியிருந்தாலும் விசாரித்து வைத்துக்கொண்டு பேசி விட வேண்டியதுதான். ஜெயமோகன் நீச்சல் தெரிந்தவர். நான் விழுந்தாலும் கை கொடுப்பார்.
Venue: Dr Ambedkar Open University, Hyderabad
பொதுவாக என்னை இலக்கிய விழாக்களுக்கு அழைப்பதில்லை. காரணம், உங்களுக்குத் தெரியும். நான் வெளிப்படையானவன். தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் விமர்சிப்பவன். என் அதிர்ஷ்டம், என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் யசோதா (பூர்வாசிரமப் பெயர் நந்தினி) எனக்கும் ஒரு படி மேல். அவர் மொழிபெயர்த்த ஔரங்ஸேப் நாவலுக்கு வாகசகர்கள் வாக்களித்து க்ராஸ்வேர்ட் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் தோன்றிய யசோதா பேசினார். (எதிரே முன்வரிசையில் நடுவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் இந்தியாவில் நடக்கும் இலக்கிய விருதுகளை நிர்ணயிப்பவர்கள்.) ”எனக்கோ சாருவுக்கோ நடுவர்கள் யாரும் விருது தர மாட்டார்கள். ஏனென்றால், நாங்கள் இருவரும் அவர்களைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருப்பவர்கள். ஆனாலும் இந்த விருது கிடைத்ததற்குக் காரணம், வாசகர்கள். அவர்கள்தான் பெருவாரியாக வாக்களித்து எங்களுக்கு விருது அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.”
முன்வரிசையில் அமர்ந்திருந்த நடுவர்களின் முகத்தில் ஈயாடவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் சாயா இலக்கிய அமைப்பினர் என்னைத் தங்கள் விழாவுக்கு அழைத்திருப்பது என் வாழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றாகவே கருதுகிறேன். என் தந்தையின் மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கில் என் எழுத்து அறிமுகமாகவே இல்லை. நான் வசிக்கும் தமிழ்நாட்டை விட கேரளத்தில் எனக்கு வாச்கர்கள் அதிகம். தெலுங்கில் அப்படி இல்லை. ஆனால் இனி அந்த நிலை மாறும். தியாகராஜா நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
முடிந்த நண்பர்கள் சாயா இலக்கிய விழாவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

