‘உயில் நிர்குண்’ பிரதிகளை எப்படிப் புரிந்துகொள்வது?
சமகால நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பிலும் சரி, அல்லது மரபார்ந்த அழகியல் விழுமியங்களைக் கட்டிக்காக்கும் மைய நீரோட்ட இலக்கியத் தளத்திலும் சரி, எந்தவொரு பழக்கப்பட்ட சட்டகங்களுக்குள்ளும் எளிதில் குறுக்கிவிட முடியாதபடிக்கு மிகத் தீவிரமானதொரு தத்துவார்த்தக் கலகத்தை ரஸ்புடின் நிர்குண் எழுதியுள்ள ‘உயில் நிர்குண்’ என்ற தொகுப்பானது முன்வைக்கிறது என்பதை நாம் முதலாவதாக மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
வழமையாக நமது இலக்கியப் பொதுப்புத்தி கட்டமைத்து வைத்துள்ள உணர்ச்சிவசப்பட்ட கவித்துவ வெளிப்பாடுகளாகவோ, அல்லது நுண்மையான அழகியல் தளத்தில் சஞ்சரிக்கும் படிமக் குவியல்களாகவோ அமையாமல், மனித இருப்பின் அடியாழத்தில் உறைந்து கிடக்கும் இருத்தலியல் நெருக்கடிகளை உலுக்கியெடுக்கும் கறாரான தத்துவக் குறிப்புகளாகவும், ஈவிரக்கமற்ற அக விசாரணைகளாகவுமே இந்த ஒட்டுமொத்தப் பிரதியும் தன்னை விரித்துக்கொள்கிறது.
இங்கே நாம் மிக முக்கியமான ஒரு நிலைப்பாட்டை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள பிரதிகளை நிர்குண் எங்குமே ‘கவிதை’ என்ற குறுகிய இலக்கியச் சட்டகத்திற்குள் அடைத்துவிட முனையவில்லை. மாறாக, இவற்றை அவர் ‘செய்தி’ என்றே மிகக் தெளிவாக அடையாளப்படுத்துகிறார். படிமங்களும் உவமைகளும் கலக்காத பிரதிகளை கவிதையே இல்லை என்றும், அவை கவிதையாகவே நிகழாதவை என்றும் மிக இறுக்கமாக வரையறுத்துப் புறக்கணிக்கும் அழகியல் தூய்மைவாதக் குழுக்கள் தமிழ் இலக்கியச் சூழலிலும் கணிசமாக உண்டு என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், அத்தகைய தூய்மைவாதக் குழுக்களால் கூட நிர்குண் ‘செய்தி’ என்று அழைக்கும் இந்தப் புத்தகத்திலுள்ள பிரதிகளை அவ்வளவு எளிதாகக் கண்டுகொள்ளாமல், அல்லது நிராகரித்துவிட்டுக் கடந்து சென்றுவிட முடியாது என்பதுதான் இதிலுள்ள மிக முக்கியமான நுட்பமாகும். ஏனெனில், கவிதைத் தன்மையை ஒரு பிரத்தியேகமான தத்துவக் கோணத்தில் உள்வாங்கி, மொழியின் அடுக்குகளில் பின்னிப் பின்னி அவர் தனது வசனங்களை நகர்த்தும் விதம் அத்தகைய வீச்சைக் கொண்டுள்ளது.கவிதைக்குரியதாகப் பொதுவில் நம்பப்படும் எந்தவிதமான மொழி அலங்காரங்களோ, காட்சிப் படிமங்களோ, அல்லது வர்க்க அடிப்படையிலான இலக்கியப் படிநிலைகளைத் திருப்திப்படுத்தும் சொற்ஜாலங்களோ இன்றி, மனித மனத்தின் ஆழத்தில் படிந்து கிடக்கும் நிறுவனமயப்பட்ட போலித் தன்மைகளையும், அதிகார மையங்களாலும் சமூக நிறுவனங்களாலும் ஒரு தனிமனிதன் மீது சாமர்த்தியமாகத் திணிக்கப்பட்ட பொய்யான பிம்பங்களையும் எவ்விதப் பாசாங்குமின்றி நேரடியாக விசாரணையிடும் மிகக் கூர்மையான ஆய்வுக் களமாகவே இப் பிரதிகள் இயங்குகின்றன.
நிர்குண் தன்னுடைய வெட்டப்பட்ட வாக்கியங்களின் ஊடாக, மனிதனுக்கும், ‘கூட்டம்’ என்று அவரால் அடையாளப்படுத்தப்படும் பெரும் சமூகக் கட்டமைப்பிற்கும் இடையிலான எக்காலத்திலும் தீர்த்துக்கொள்ள முடியாத முரண்பாட்டைத் தனது விவாதத்தின் மையப் புள்ளியாக முன்னிறுத்துகிறார். “கூட்டத்தின் விதிகளுக்கு எது சரி எது தவறு என்பது. இருப்பிற்கு உண்மையா பொய்யா என்று பார்” என்று நிர்குண் எழுப்பும் வரிகள் வெறுமனே தத்துவார்த்தமானவை மட்டுமல்ல. மாறாக, சமூகம் தன்பொருட்டு வகுத்து வைத்துள்ள நெறிமுறைகள், ஒழுக்கவியல் விதிகள், மற்றும் மதிப்பீடுகள் ஆகிய அனைத்தும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான வெறும் புறவயமான போலிமைகளே என்பதையும், மனிதன் இந்த நிறுவனமயப்பட்ட மாயைகளிலிருந்து விடுபட்டுத் தன் அசல் இருப்பை நோக்கிய உண்மையான தேடலைத் தொடங்க வேண்டும் என்பதையுமே இந்த வரிகள் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
மதம், சாதி, பாலினம், அதிகாரம் போன்ற ஒற்றைப் பரிமாணமுடைய படிம அடையாளங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் சுமந்து திரியும் சமூக மனிதனின் போலித் தன்மைகளைத் தத்துவார்த்த ரீதியில் மிகக் கூர்மையாகக் கட்டுடைக்கும் இப் பிரதிகள், இறுதி நிலையில் மனிதமையவாதத்தையே முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, இந்தப் பிரபஞ்ச இருப்பின் உண்மை நிலையை, அதன் சகல நிர்வாணத் தன்மையோடும் தரிசிக்க முயல்கின்றன.என்றபோதிலும், இங்கேதான் நாம் ஒன்றை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சமூகக் கூட்டத்தையும் அதன் அதிகார விதிகளையும் அடியோடு நிராகரிப்பதாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நிர்குணின் பிரதிகள், வேறு வழியின்றி அதே கூட்டத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித வாசகனை நோக்கித் தான் தன் தத்துவ உரையாடலையும் அகவயமான அழைப்பையும் முன்வைக்கின்றன என்கிற அடிப்படையான இருத்தலியல் முரண்பாட்டையும் தங்களுக்குள் மிக இயல்பாகவே கொண்டுள்ளன என்பதை நாம் நிராகரித்துவிட முடியாது.
உள்ளே கனன்றுகொண்டிருக்கும் இத்தகையதொரு தொகுப்பினை அதன் முழுமையான பரிமாணத்தில் ஆழமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால், மேற்கத்திய தத்துவமரபில் உருவான இருத்தலியல் மற்றும் அமைப்பியல் சார்ந்த சிந்தனைகள் நமக்கு மிகச் சிறந்ததொரு ஆய்வுக் கோணத்தை வழங்கி நிற்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. மனிதன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காகவும், அதிகாரக் கட்டமைப்புகளின் நிர்ப்பந்தங்களுக்காகவும் தனது சுய சுதந்திரத்தை முற்றிலும் துறந்துவிட்டு, மற்றவர்களுக்காகப் போலியான ஆளுமை முகமூடிகளைத் தன்மீது வலிந்து தரித்துக் கொள்வதையே இந்தத் தத்துவங்கள் ‘மாறாப் போலி அடையாளம்’ என்று கடுமையாக விமர்சிக்கின்றன. அத்தோடு, மனித வாழ்க்கை அடிப்படையில் எவ்வித அர்த்தமுமற்ற விசித்திரத் தன்மை கொண்டது என்றும், இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயல்வது அபத்தமானது என்ற கோட்பாட்டோடும் நிர்குணின் இந்தக் கவிதைகள் மிக நெருக்கமான, அதேசமயம் மிகத் கவனமானதொரு உரையாடலை நிகழ்த்துகின்றன.
நிர்குணின் பிரதிகள் இத்தகைய போலி முகமூடிகளை எவ்விதச் சமரசமுமின்றி இரக்கமற்றுச் சிதைத்தெறிகின்றன. சமூக அமைப்பும் அதன் விழிப்பற்ற சட்டதிட்டங்களும் ஒரு தனி மனிதனை ஒட்டுமொத்தமான ஒரு கூட்டுப் பொருளாகவோ அல்லது உற்பத்திக் கருவியாகவோ சுருக்கி மாற்ற முயலும் போது, நிர்குணின் பிரதிகள் எழுப்பும் குரல் அதற்கு நேர் எதிராகத் தனித்த இருப்பின் அசல் தன்மையை, அதன் சகல முரண்பாடுகளோடும் உயர்த்திப் பிடிக்கிறது. தத்துவத் தளத்தில் விவாதிக்கப்படும் அகத்திற்கும் புறத்திற்குமான மோதல், சுயம் மற்றும் மற்றைமை என்ற அடிப்படையான அகவய முரண்பாடு, நிர்குணின் பிரதிகளில் கூட்டத்திற்கும் தனி மனிதனுக்கும் இடையிலான தீர்க்க முடியாத முரண்பாடாக உருமாற்றம் கொள்கிறது. சமூகக் கூட்டம் ஒட்டுமொத்தமாக வகுத்து வைத்துள்ள போலி விதிகளைத் தாண்டி, ஒரு மனிதன் தன்னைத் தானே, தன்னுள் உறையும் இன்னொருவனை நேரடியாக எதிர்கொள்ளும் போது மட்டுமே அவனது அசல் இருப்பு ஈடேறுகிறது என்பதை இவரின் பிரதிகள் தத்துவத் தளத்தில் மிகத் துல்லியமாக நிறுவ முயல்கின்றன.
அதே நேரம், இவருடைய இந்தப் பிரதிகளை எந்த மரபோடு இணைத்து, எதன் அருகில் வைத்துப் புரிந்துகொள்வது என்ற அடிப்படையான கேள்வி எழுகின்ற நேரம், நமது நவீன கவிதைப் பிரதிகளோடும், தத்துவார்த்தப் பிரதிகளோடும் இவற்றைத் தொடர்ந்து உரசிப் பார்த்துத்தான் அந்தப் புரிதலைச் சென்றடைய வேண்டிய கட்டாயமும் நமக்கு உருவாகிறது. ஏனெனில், எந்தப் பிரதிகளோடு இது நம்மை உரசிப் பார்க்கத் தூண்டுகிறதோ, அப்போதே இயல்பாக அவற்றின் குடும்பத்திற்குள், அதாவது அதே கருத்தியல் பரம்பரைக்குள் நிர்குணின் இந்தச் செய்திகளும் (பிரதிகள்) தங்களை இணைத்துக் கொண்டுவிடுகின்றன. அதனால்தான், மரபான நவீன கவிதைகளோடும், பாரம்பரிய தத்துவ நிலைப்பாடுகளோடும் இவற்றைத் தொடர்ந்து ஊடாடிச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை நமக்கு ஏற்படுகிறது.
நவீன தமிழ்க் கவிதையின் வரலாற்று மரபோடு ‘உயில் நிர்குண்’ தொகுப்பிலுள்ள பிரதிகளை, நாம் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பொருத்திப் பார்க்கும்போது, இதன் தனித்துவமான வெளிப்பாட்டு வடிவமும், தனித்தன்மை கொண்ட உள்ளடக்க நிலைப்பாடும் மிகத் தெளிவாகவே வெளிச்சத்திற்கு வருகின்றன. நமது முன்னோடி நவீன கவிஞர்களான கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் போன்றோரின் படைப்புகள் இயற்கையின் வழியே ஒரு மெல்லிய, தியானபூர்வமான மனநிலையைத் தமிழ் வாசகச் சூழலில் கட்டமைப்பவை என்பதை நாம் அறிவோம். அவை பிரபஞ்ச இயற்கை சார்ந்த நுட்பமான காட்சிப் படிமங்களினாலும், உவமைகளினாலும் வாசகனின் மனதை அமைதிப்படுத்தி, அவனுக்கு ஒருவிதமான அக அமைதியையும், அழகியல் தூய்மைவாதப் பரவசத்தையும் அளிக்கக்கூடியவை. ஆனால், நிர்குண் இத்தகைய மரபார்ந்த கவிதை வடிவங்களிலிருந்து மட்டுமன்றி, நவீன கவிதைகளுக்கே உரிய அடிப்படை விதிகளான படிமம், உவமை போன்ற அழகியல் சாதனங்களிலிருந்தும் தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறார்.
மாறாக, கவிதைக்குரியதாகக் கருதப்படும் அனைத்து அழகியல் பூச்சுகளும் சிறுகருணையுமின்றி உரிக்கப்பட்டு, வெட்டப்பட்ட கவிதைத் தன்மைகொண்ட நேரடித் தத்துவ வாக்கியங்களாகவே இவை தங்களை முன்னிறுத்துகின்றன. ஆனாலும், ஒரு உறைந்த கத்தியின் கொடூரமான கூர்மையைப் போல, இவருடைய சொற்கள் எவ்வித மறைமுகக் குறியீடுகளுமின்றி நேரடியாக வாசகனின் மனசாட்சியைத் தாக்குகின்றன.மரபார்ந்த ஜென் தத்துவத்தில் அமைதி என்பது இயற்கையோடு எந்தவித முரண்பாடுமின்றி ஒன்றிப்போவது. ஆனால் நிர்குணிடம் அமைதி என்பது “உன் அமைதி என்பது நீ யாருடன் பேசிக் கொண்டு இருக்கிறாய் என்று யாருக்குத் தெரியாமல் இருப்பது” என்ற மிக அகவயமான, பாதுகாப்பற்ற ஆத்மார்த்தத் தற்காப்பாக உருமாறுகிறது. அதேபோல, கோபத்தை ஒரு வன்முறையாகவோ அல்லது தவிர்க்கப்பட வேண்டிய எதிர்மறை உணர்வாகவோ கருதும் பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்கி, “கோபம் என்பது மிக அழகான காதல்” என்று அதன் உளவியலைத் தலைகீழாக்குவதன் மூலம் மரபார்ந்த கவிதையியல் அழகியலை அவர் அடியோடு நிராகரித்து நகர்கிறார். “உண்மை என்பது நீ பொய்யாக இருக்கிறாய் என்பதை நீ ஏற்றுக் கொள்வது” என்ற வரிகள் வழியே, மனிதர்கள் தங்களைப் பற்றிப் புனைந்து வைத்துள்ள போலிப் பெருமிதங்களை அம்பலப்படுத்தி, படிம அழகியலிலிருந்து முற்றிலும் விலகிய கருத்து மையக் கவிதை என்ற ஒரு வடிவமாக இப் பிரதிகள் தமிழ் கவிதை வெளியில் மிகத் தீர்க்கமாக இயங்குகின்றன.
இதன் நீட்சியாகவே, அகம் மற்றும் சுயம் குறித்துத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ச்சியாகப் பேசிவந்த முன்னோடி நவீனக் கவிஞரான நகுலனின் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நிர்குணின் பிரதிகள் முற்றிலும் வேறுபட்ட தத்துவார்த்த எல்லைகளை நோக்கித் திரும்புவதைக் காண முடிகிறது. நகுலன் தனது படைப்புகளில் அகத்தின் தனிமையையும், சமூக நெருக்கடிகளால் ஏற்படும் சுயத்தின் சிதைவுகளையும், வாழ்வின் முடிவற்ற சோர்வையும் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். நகுலனின் அகம் என்பது எப்போதுமே தீராத சுய இரக்கத்துடனும், சமூகத்திலிருந்தான விலகலுடனும், தவிர்க்க முடியாத தனிமையின் பெரும் பாரத்துடனும் இயங்குவது. ஆனால், நிர்குண் அந்தத் தனிமையை ஒருபோதும் முடக்கமாகவோ அல்லது விசனமாகவோ அணுகவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். மாறாக, தனிமையை தன்னைத்தானே இரக்கமின்றி எதிர்கொள்ளும் ஒரு அகச் சந்திப்புக் களமாக அவர் மாற்றி அமைக்கிறார். நகுலனிடம் காணப்படும் அந்தத் தீராத அகவயச் சோர்வு நிர்குணிடம் முற்றிலும் இல்லை. அங்கே சுயம் என்பது முழு விழிப்புணர்வுடன் தன் அகத்தோடு மோதும் ஒரு தீவிரமான வேட்டைக்காரனாகச் செயல்படத் தொடங்குகிறது.
“ஒவ்வொரு மனிதனும் ஒரு வேட்டைக்காரன்தான்” என்று வரையறுப்பதன் ஊடாக, மனித மனதின் ஆதி வேட்டை உள்ளுணர்வையும், அவன் தன்னைத்தானே தயவுதாட்சணியமின்றி வேட்டையாடி எதிர்கொள்ளும் இருத்தலியல் உக்கிரத்தையும் நிர்குண் சாத்தியப்படுத்துகிறார். அதேபோல, பிரமிள் போன்ற கவிஞர்களிடம் காணப்படும் ஆன்மீகக் கலகக் குரலோடு ஒப்பிடும்போதும், நிர்குணின் குரல் முற்றிலும் தனித்தே நிற்கிறது. பிரமிளிடம் பிரபஞ்சம் குறித்த ஒரு பெருவியப்பும், அடங்காத ஆன்மீகக் கொந்தளிப்பும் எப்போதுமே இருக்கும். நிர்குணிடமோ அத்தகைய எவ்வித வியப்புமின்றி அகத்தைச் சுட்டெரிக்கும் வறண்ட எதார்த்தமே மேலோங்கி நிற்கிறது. நிர்குணின் பிரதிகள் முழுவதும் ‘சந்திப்பு’ என்ற கருத்தாக்கமே பிரதானமாகச் சுழன்று வருகிறது. வெளியுலகச் சந்திப்புகள் அனைத்தையும் அகத்தே தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் மோதலாகவே கையாள்கிறது. “சந்திப்பிற்கு முன் இருக்கும் ஒருவன் சந்திப்பின் இறுதியில் இருக்கக் கூடாது” என்று குறிப்பிடுவதன் மூலம், உண்மையான சந்திப்பு என்பது மனிதனை உளவியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் முற்றிலும் மறுவுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
மரபார்ந்த ஆன்மீகக் கோட்பாடுகளிலும், மைய நீரோட்ட வேதாந்த தத்துவங்களிலும் ‘நான்’ என்பது பிரம்மத்துடனோ அல்லது பிரபஞ்சப் பேரறிவுடனோ கரைந்து ஒன்றிணைவதையே இறுதி இலக்காகக் குறிக்கும். அல்லது குறிவைக்கும். ஆனால் நிர்குணின் ‘நான்’ குறித்த தத்துவ நிலைப்பாடு இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. “நான் யார் என்று நான் தெரிந்த பின்பு இங்கே இருக்கும் உயிரினங்களில் ஒன்றாக நான் இல்லை” என்ற நிர்குணின் வரி, மனிதன் தன்னைச் சுற்றியுள்ள போலி அடையாளங்களை, அதிகாரப் படிநிலைகளை உதிர்க்கும்போது, வெறும் உயிரியல் ரீதியான குறுகிய எல்லைகளிலிருந்தும், மனிதமையவாதத்திலிருந்தும் எவ்வாறு முழுமையாக விடுபடுகிறான் என்பதை தடங்காட்டுகிறது.
நிர்குணிடம் சுயம் என்பது ஒருபோதும் ஒற்றைத் தன்மையுடையதல்ல. அது “இருப்பில் நீ இருவன்” என்ற இருத்தலியல் இரட்டைத் தன்மையைக் கொண்டது. “நீ இருக்கிறாய் உன்னுடன் யார் இருக்கிறார் என்பது தான் ஆன்மீகம். ஏனென்றால் உன்னுடன் நீ மட்டும் இருக்க முடியாது” என்று கூறி, சுயத்திற்குள் இயங்கும் அந்த இன்னொருவனின் இருப்பைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், “ஆளுமை என்பது என் மீது ஏறி நடந்தாவது உன்னை நீ சந்தித்துக்கொள்” என்று நிர்குண் முன்வைக்கும் அதிரடியான அறைகூவல், மனிதன் சமூகத்திற்காகத் தரித்துக் கொண்டுள்ள போலி ஆளுமை பிம்பங்களைச் சிதைத்துவிட்டு அசல் இருப்பை அடையத் தூண்டுகிறது. “நீ ஒரு பயணியா படகோட்டியா என்பதை முதலில் முடிவு செய்” என்று மனிதனின் இலக்கற்ற வாழ்க்கைப் பயணத்தையும் அவர் மிகக் தீவிர விசாரணைக்கு உட்படுத்துகிறார்.
இவருடைய பிரதிகளின் வெளிப்பாட்டு வடிவத்தையும், செறிவான வரிகளையும் மேலோட்டமாகக் காணும்போது, இது கபீர் மற்றும் சூஃபி சிந்தனை மரபின் தொடர்ச்சியோ என்ற தோற்றத்தை வாசகர்கள் அடையக்கூடும். ஆனால், இன்னும் ஆழமாக உற்றுநோக்கினால் நிர்குண் சூஃபி மரபிலிருந்தும் கபீரின் ஆன்மீகச் சட்டகங்களிலிருந்தும் தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவது நமக்குத் தெளிவாகப் புலப்படும். கபீர் தனது சடங்கு மறுப்புக் கவிதைகளில் மத நிறுவனங்களையும், பாசாங்குத்தனமான சடங்குகளையும் கடுமையாகத் தாக்கினாலும், அவரிடம் ஒரு ஆன்மீக உரையாடலும் ஆழ்ந்த இறைப் பெயரும் எப்போதுமே தக்கவைக்கப்பட்டுள்ளன. கபீர் “நான் உன் அருகிலேயே இருக்கிறேன்” என்று இறைவனின் குரலாகப் பாடுகிறார். நிர்குணோ “உன்னை நீ சந்திப்பதற்கு தயாராகும் போது தயாராக இருக்கும் ஒருவனை நீ சந்திக்கிறாய்” என்று கூறி அந்த இடைவெளியையே முற்றிலுமாகக் கரைத்துவிடுகிறார். கபீர் பாடுகிறார். நிர்குணோ வாசகனை அசையாமல் அதிரச் செய்து நிற்கச் சொல்கிறான்.
பாரசீக சூஃபி மரபில் ரூமி போன்ற கவிஞர்களிடம் உடல், மது, மது ஊற்றுபவன், ரோஜா, காதலியின் கண்கள் போன்ற அழகியல் மயக்கங்களும், இறைவனோடு ஒன்றிணையும் பரவசக் காதலும் பிரதானமாக இருப்பதை நாம் அறிவோம். ஆனால், நிர்குணிடம் இத்தகைய எந்தக் கவித்துவ மயக்கங்களோ, போதையோ அல்லது காதல் பரவசங்களோ இல்லை. மாறாக சுடுகாட்டின் மயக்கமற்ற நிதாரவான வெறுமையே எஞ்சி நிற்கிறது. இருப்பினும், பத்தாம் நூற்றாண்டில் உருவான ‘மலாமதி’ எனப்படும் சுய குற்றச்சாட்டுச் சூஃபி வழியின் நெருக்கமான தன்மையோடும், போலியான புனிதங்களை இரக்கமற்றுப் பொசுக்கும் இயல்போடும் நிர்குணின் வரிகள் நெருங்கி வருகின்றன. மலாமதி சூஃபிகள் தன்னைத்தானே கண்டிக்கும் சுயம் எனும் நிலையை ஏற்று, சமூகத்தின் வெளிப் புனிதங்களைப் புறந்தள்ளி, அகவயச் சுயத் தண்டனையை ஏற்றவர்கள். தமிழ் சித்தர் மரபில் பட்டினத்தார், சிவவாக்கியார் போன்றோர் உடலரசியலையும் போலிச் சடங்குகளையும் கூர்மையான சொற்களால் பொசுக்கியதைப் போல, நிர்குணும் நிறுவன அமைப்புகளுக்கு எதிரான கலகக் குரலை ஓங்கி எழுப்புகிறார்.
ஆனால், இத்தகைய மரபார்ந்த ஆன்மீகப் போக்குகளிலிருந்து நிர்குண் முற்றிலும் விலகி நிற்கும் புள்ளி என்னவெனில், அவர் ஆன்மீகத்திலிருந்து கடவுள் என்ற அதிகார உருவகத்தையே முற்றிலுமாகக் கழித்துவிடுகிறார். “உன்னைப் படைத்தவனை நீ சந்திக்க வேண்டும். ஆனால் அவன் உன் கடவுள் அல்ல” என்ற வரிகளின் வழியாக, பாரம்பரியமான பக்தி மற்றும் சூஃபி மரபுகளின் இறுதி இலக்கையே அவர் தவிர்த்துவிடுகிறார். ஆன்மீகத்திலிருந்து கடவுள் என்ற பிம்பத்தைக் கழித்துவிட்டு, தன்னுள் இருக்கும் இருத்தலியல் எதார்த்தத்தை மட்டுமே பிரதானமாக நிறுவுகிறார். இவ்வாறாகக் கடவுளையும் பாரம்பரிய ஆன்மீக நிறுவனங்களையும் நிராகரிப்பதாகக் கூறிக்கொண்டே, இவர் பிரதிகளும் ஆன்மீகம், படைத்தவன், கடவுள் போன்ற மரபார்ந்த ஆன்மீகக் கலைச்சொற்களையே தங்களின் இருப்புக்காக மீள மீளச் சார்ந்து நிற்கும் அக முரண்பாட்டையும் தங்களுக்குள் கொண்டுள்ளன என்பதையும் நாம் தர்க்கரீதியாக மறுப்பதற்கில்லை.
நிர்குணின் பிரதிகள் கவிதைக்கான வழக்கமான படிமம் மற்றும் உவமைப் போலிமைகளைத் துறந்து, சுருக்க வாக்கிய நடை வழியாக இயங்கும் நுட்பம் ஆழமான கவனத்திற்குரியது. எதிர்முரண் வாக்கியங்கள் வழியாக வாசகனின் தர்க்க அறிவை உடைத்து, அவனது மனசாட்சியின் முன் கண்ணாடியைப் பிடிக்கும் மொழியியல் உத்தியை நிர்குண் மிக வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார். “கோபம் என்பது காதல்”, “அமைதி என்பது இரகசிய உரையாடல்”, “உண்மை என்பது பொய்யை ஏற்பது” போன்ற முரண் வாக்கியங்கள் சாதாரண மொழித் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தத்துவார்த்த விழிப்பை வாசகனுக்குத் தருகின்றன.
ஆயினும், கவிதையின் முதன்மை அழகியலாக கருதப்படும் (பழக்கப்பட்டுப்போன) படிமங்களும் உவமைகளும் முற்றிலுமாக மறுக்கப்படுவதால், இப் பிரதிகள் கவித்துவ உணர்வை இழந்து, சில சமயங்களில் வறண்ட தத்துவக் குறிப்புகளாகவும் வெறும் போதனைகளாகவும் சுருங்கிவிடும் மிகப்பெரிய ஆபத்தையும் தங்களுக்குள் கொண்டுள்ளன. “இருப்பில் நீ இருவன்”, “சந்திப்பு”, “வேட்டைக்காரன்”, “பயணி, படகோட்டியா” போன்ற சில குறிப்பான கலைச்சொற்களும் அதற்கு நிகரான தத்துவக் குறியீடுகளும் தொகுதி முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரேவிதமான சொற்பயன்பாட்டுச் சுழற்சியோடு வருவது, பிரதியின் வெளிப்பாட்டு வீச்சை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துவதுடன், தொடக்கப் பத்தியில் வாசகனுக்கு ஏற்படும் தத்துவ அதிர்ச்சிக்குப் பிறகு, வாசிப்புப் போக்கில் அவனுக்கு ஒருவிதமான வடிவச் சலிப்பு ஏற்படுவதையும் வாசிப்பனுபவத்தில் தவிர்க்க முடிவதில்லை.
அதேபோல, இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்கும்போது, சமூகத்தையும் மனித உறவுகளின் இயங்கியலையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, எந்தவிதப் புறவயமான பிணைப்புமின்றி அகத்திற்குள் மட்டுமே தொடர்ந்து சுழல்வதால், இப் பிரதிகள் மனித சமூகத்தின் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ஒருகட்டத்திற்கு மேல் முட்டுச்சந்திலும், வறண்ட அகவயத் தனிமைவாதத்திலும் கொண்டு போய் முடிகின்றன என்பது இதற்கான கவனிக்கத்தக்க விமர்சனமாக முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. இந்த இருத்தலியல் விவாதத்தில் நாம் வாழும் சமூகத்தின் வர்க்க, சாதிய மற்றும் வரலாற்று ரீதியான பொருள்முதல்வாத எதார்த்தங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, வெறும் அகவயமான ஒரு தத்துவ வெளியில் மட்டுமே ஒட்டுமொத்த உரையாடலும் நகர்த்தப்படுகிறது என்பது இந்தப் பிரதிகள் கொண்டுள்ள அணுகுமுறையின் மிக முக்கியமான வரம்பாக, அல்லது ஒரு தத்துவார்த்தப் போதாமையாக அமைகிறது என்பதை நாம் விமர்சனப் பூர்வமாகக் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ஒரு சமூகத்தின் புறவயமான உற்பத்தி உறவுகளையும், அதிகாரப் படிநிலைகளையும் கணக்கில் கொள்ளாமல் அகத்தை மட்டுமே உற்றுநோக்குவது என்பது ஒருவகையான தப்பித்தலாகவே முடிந்துவிடும் அபாயத்தை மிக அருகில் வைத்திருப்பதாகும்.
தொகுத்துப் பார்த்தால், ரஸ்புடின் நிர்குணின் ‘உயில் நிர்குண்’ தொகுப்பென்பது, வெறுமனே வாசித்து இன்புறுவதற்கோ அல்லது மைய நீரோட்ட இலக்கியச் சூழலில் தத்துவங்களைப் பேசி மகிழ்வதற்கோ ஆன ஒரு நுகர்வுப் படைப்பல்ல. மனிதன் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காகத் தன்னைத்தானே சமரசம் செய்துகொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, தன்னோடு தான் முழுமையாக ஒன்றிணைவதற்கான ஒரு சிந்தனைப் பயிற்சியை அக்கறைகொள்வதற்கு சமிக்ஞைகளைக் காட்டுவதாகும். வாசகனைத் தன் சொந்த மனசாட்சியின் முன்னும் அசல் இருப்பின் முன்னும் நிர்வாணமாக நிறுத்தும் ஒரு அசாத்தியமான பிரதி பிம்பமாகவே இது அமைகிறது. பாரசீக சூஃபிகளின் மயக்கும் நறுமணத்தைப் போர்த்தி இவரை நாம் அணுக முற்பட்டால், இவரிடம் இருக்கும் அந்த உறைந்த கத்தி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும்.
இவ்வகையில், ‘உயில் நிர்குண்’ தொகுப்பானது நவீன தமிழ் இலக்கியச் சூழலில் கவிதையியல் வடிவத்திற்கும் தத்துவ விசாரணைகளுக்கும் இடையே நிகழும் ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத உரையாடலாக இருக்கிறது என்றே சொல்லலாம். மரபார்ந்த கவிதை அழகியலின் மேலாதிக்கத்தையும், நவீனத்துவப் படிமங்களின் போலிமைகளையும் ஒரே நேரத்தில் கைவிட்டுவிடும் இந்தப் பிரதிகள், வாசகனைத் தன் அசல் இருப்பை நோக்கித் திருப்பும் ஒரு கருவியாகவே இயங்குகிறது. அதேவேளையில், கவித்துவ உணர்வின்மை, சொற்பயன்பாட்டுச் சுழற்சி, சமூக அரசியல் பொருள்முதல்வாதத்தின் புறக்கணிப்பு போன்ற இதன் உள்ளார்ந்த எல்லைகளும் போதாமைகளும் விமர்சன ரீதியாகப் பரிசீலிக்கப்படும்போதே, இப் பிரதிகளின் மதிப்பும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இதன் துல்லியமான இடமும் செறிவோடு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவப்பட முடியும். அதற்காக ஆழமான உரையாடல்களை நிர்குண் அவர்களின் பிரதிகளை முன்வைத்து செய்ய வேண்டியது அவசியம்.
நிர்குண் அவர்களின் சில பிரதிகள்:
“உன்னை நீ சந்திப்பதற்குதயாராகும் போதுதயாராக இருக்கும்ஒருவனை நீ சந்திக்கிறாய்.”
“இறந்து விடும்உடலோடு நீ செய்வதெல்லாம்இறந்து விட்டஉடலை வைத்து செய்வதெல்லாம்என்றும் இறந்து விடாதஉனக்கு செய்யும் ஒன்றாக ஆகாது.”
“அந்த இடம்ஆகா ஓகோ இடம் என்றுகூட்டம் உனக்கு சொன்ன போதுஅந்த இடத்திற்குநீ சென்றாய்அந்த ஆகா ஓகோவைநீ சந்திக்காத போதுகூட்டம் உனக்கு சொன்னதுநீ சரியில்லை என்று.”
“பார்ப்பது தவறில்லைசரியா தவறா என்று பார்ப்பது தான் தவறுஏனென்றால் இங்கேசரி என்பதும் தவறு என்பதும்உண்மையா பொய்யா என்பது அல்ல.கூட்டத்தின் விதிகளுக்குஎது சரி எது தவறு என்பது.”
“உன் மதம் உன்னுடையது இல்லை
உன் ஜாதி உன்னுடையது இல்லை
உன் தேசம் உன்னுடையது இல்லை
உன் உண்மை உன்னுடையது இல்லை
கடைசியில் நீயே
உனக்கு உன்னுடையவனாக இல்லை
கடைசி வரைநீ என்பவன் அடுத்தவன்.
அடுத்தவன் கொடுத்தவன்.”
“நீ ஒரு பயணியாபடகோட்டியா என்பதைமுதலில் முடிவு செய்.
நீ ஒரு பயணி என்றால்
உன் துடுப்புகளுடன்
படகில் ஏறாதே.
நீ ஒரு படகோட்டி என்றால்
உன் பயணங்கள்
உனக்கானது அல்ல.”
“ஒவ்வொரு மனிதனும்
ஒரு வேட்டைக்காரன்தான்
ஆனால் அந்த மனிதனின்
தயக்கங்கள்தான்
அந்த மனிதனை வேட்டையாடும்ஒன்றாக வைத்திருக்கிறது.”#
உயில்_நிர்குண்#ரஸ்புடின்_நிர்குண்#நவீன_இலக்கியம்#இருத்தலியல்#தத்துவம்#இலக்கிய_விமர்சனம்#TamilLiterature#Existentialism#LiteraryCriticism
தொகுதி கிடைக்குமிடம்: ராஸலீலா பதிப்பகம்
Email address: raasaleelapathippagam@gmail.com
Phone: +917339680708