ஐந்து நாட்கள்
அந்த ஐம்பது வயது
நண்பனோடு தங்கினேன்
காலையில் எழுந்து வருவான்
தாகமெடுத்தவன் போல்
மடக் மடக்கென்று
மதுவை அருந்துவான்
எந்த வகை என்பது
முக்கியமில்லை
ரம்மோ விஸ்கியோ பிராந்தியோ
எதுவாக இருந்தாலும் ஓகே
நான் வைன் மட்டுமே
அருந்துபவனென்பதால்
அவனது பட்டியலில்
வைனும் சேர்ந்து கொண்டது
கூடவே கொஞ்சம் கூழோ
கஞ்சியோ உண்டு
பிறகு
கடும் சத்தத்துடன் வாந்தியெடுத்துவிட்டு
உறங்கச் சென்று விடுவான்
வாந்தியெடுக்க அவன் அருகிலேயே
ஒரு சிறிய வாளி உண்டு
ரெண்டு மூணு மணி நேரம் சென்று
மீண்டும் வருவான்
தாகமெடுத்தவனைப் போலவே
மடக் மடக்கென்று
மதுவை அருந்துவான்
தொட்டுக்கொள்ள ஏதேனும் பழம்
மிளகாய்ப்பொடி தூவிய நெல்லிக்காய்
அல்லது
எலுமிச்சை
கொஞ்சமாய் ஏதேனும் உணவு
மீண்டும் கடும் சத்தத்துடன்
ஒரு வாந்தியெடுத்துவிட்டு
உறங்கச் சென்று விடுவான்
இப்படியே இரண்டு மாதம்
ஆகியிருப்பதாக அவன் மனையாள் சொன்னாள்
குடி வாந்தி உறக்கம்
கொஞ்சம் உணவு
குடி வாந்தி உறக்கம்
கொஞ்சம் உணவு
குடி வாந்தி உறக்கம்
கொஞ்சம் உணவு
குளியல் இல்லை
உடை மாற்றவில்லை
பல்கூடத் துலக்குவதில்லை
இத்தனைக்கும் இடையில்
தினமும்
பத்து இருபது கவிதைகள்
எழுதிவிடுகிறான்
ஐந்து நாட்களும்
ஒருவருக்கொருவர்
ஒரு வார்த்தை பேசவில்லை
அந்த அமைதி
அத்தனை எளிதானதில்லை
நான் அவன் மனையாளிடம் கேட்டேன்:
“இது எப்போது நிற்கும்?”
அவள் உறுதியாகச் சொன்னாள்:
“ஓரிரு நாளில் நின்று போகும்.”
“எப்படித் தெரியும்?” என்றேன்.
“நம்முடைய ஒருநாள்
அவருக்கு இரண்டு மாதம்”என்றாள்
இந்தக் கால வித்தியாசம்
அத்தனை எளிதானதில்லை
கிளம்பும் போது
கிளம்புகிறாயா எனக் கேட்டு
கேவிக்கேவி அழுதான்
எனக்கும் துக்கம் மேலிட்டது
அந்த அழுகை
அத்தனை எளிதானதில்லை
இதை ஒரு தோழியிடம்
சொன்னேன்
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்
தோழியின் வயது இருபத்தைந்து
என்பது ஞாபகம் வந்தது
அந்தச் சிரிப்பு
அத்தனை எளிதானதில்லை