Ayn Rand-இன் இரண்டு நாவல்களில் பணம் பற்றி விரிவாகப் பேசுகிறார். Atlas Shrugged மற்றும் Fountainhead. இதில் முந்தைய நாவலில் விளக்கம் அதிகம். இரண்டையும் நாம் சுருக்கினால், பணம் பற்றிய ஒரு அற்புதமான புரிதல் கிடைக்கும்.
பல நல்ல மனிதர்கள் பணத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். அது தவறு. பணம் என்பது ஒரு பரிமாற்றத்தை மதிப்பீடு செய்யும் கருவி. Tool of exchange என்பது அயான் ராண்டின் பிரயோகம். அது voluntary trade-ஐ அடிப்படையாகக் கொண்டது — ஒருவர் உருவாக்கும் மதிப்புக்கு ஈடாக மற்றொருவர் மதிப்பு தர வேண்டும்.
ஆனால் இரண்டு வகை மனிதர்கள் பணத்தை அநீதியாகக் கையாள்கிறார்கள்.
ஒன்று, கொள்ளையர்கள் (Looters). இவர்கள் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். பலத்தை, சட்டத்தை, நட்பை அல்லது பாசத்தைப் பயன்படுத்தி அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுகிறார்கள்.
இன்னொரு வகையினரை அயான் ராண்ட் Moochers என்கிறார். கெஞ்சுபவர்கள். நான் ஏழை, நீ பணக்காரன் என்று சொல்லி அனுதாபம் பெறுவதன் மூலம், கண்ணீர் மூலம், நான் மாணவன் நீ ஆசான் என்று புகழ்வதன் மூலம் பிறரைச் சுரண்டுபவர்கள் என்கிறார்.
இந்த இரண்டு சாராருமே ஒட்டுண்ணிகள்தான். எனவே பணத்தை தீமை என்று சொல்லிக்கொண்டே ஒட்டுண்ணிகளை ஆதரிப்பதும், ஒட்டுண்ணிகளாக வாழ்வதும் சமூகச் சீரழிவுக்கே வழி வகுக்கும். எனவே பணம் என்பது உழைப்புக்கு ஈடான உழைப்பு, மதிப்புக்கு ஈடான மதிப்பு என்பதாக இருக்க வேண்டும்.
நேற்று எழுதியிருந்தேன். என் தோழி ஒருவர் – மாதம் முப்பதாயிரம் ஊதியம் வாங்குபவர் – ஜோடிப்புறா நாவல் பிடிஎஃப் க்கு 1500 ரூ பணம் அனுப்பி விட்டு இருபத்தெட்டாம் தேதி சம்பளம் வாங்கியதும் இன்னும் அனுப்புகிறேன் என்றார். ஒரு மாணவன் நூறு ரூபாய் அனுப்பி பிடிஎஃப் ஐ வாங்கினான். இவர்களெல்லாம்தான் இன்றைய சமூகத்துக்குத் தேவை.
மற்ற பலரையும் நான் ஒட்டுண்ணிகளாகவே பார்க்கிறேன். ஒரு பதிப்பாளருக்கு பிடிஎஃப் ஐ அனுப்பினேன். நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டுமே வந்தது. ஒரு பைசா வரவில்லை. ஆனால் புத்தக விழாக்களில் அவரிடம் நான் வாங்கும் புத்தகங்களுக்குப் பணம் கொடுத்து விட்டுத்தான் வாங்குகிறேன். ஒரு புத்தகம் கூட ஓசியில் வாங்கியதில்லை. ஆனால் தமிழ் எழுத்தாளன் என்ற பிச்சைக்காரனிடம் ஒரு நாவலை ஓசியில் வாங்கிக் கொள்வதில் அவருக்கு எந்த மனக்கிலேசமும் இல்லை.
நானா கேட்டேன் என்று கேட்பார். கேட்கவில்லை. ஆனால், நீங்கள் பதிப்பகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் போதும், எனக்கு நீங்கள் ஃபோன் கூட போட வேண்டாம், உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பேன் என்றார். அது மட்டும் அல்ல.
இன்னும் பல டயலாகுகளைப் பேசுவார். எனக்கு எழுதி எழுதி அலுக்கும்போது அவரை அழைப்பேன். என் மனம் குளிரப் பேசுவார். எனக்குப் புத்துணர்ச்சி வந்து விடும். மீண்டும் முப்பது பக்கம் எழுதுவேன். சமீபத்தில் சொன்னார். சார், இலக்கிய சேவை என்றால் என்ன தெரியுமா? இப்படி என்னைப் போல் புத்தகம் போடுவது அல்ல. உங்கள் வீட்டுக்கும், ஜெயமோகன் சார் வீட்டுக்கும், எஸ்.ரா. சார் வீட்டுக்கும் போய் மூணு மாதம் உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போடுவதுதான் சார்.
கேட்டதும் எனக்குப் பொங்கிப் பொங்கி வந்து விட்டது அழுகை.
அதனால்தான் அவர் கேட்காமலேயே நாவலின் பிடிஎஃப் ஐ அனுப்பினேன். மற்ற பதிப்பாளர்களைப் போன்றவர் இல்லை. மிகவும் வசதியானவர். அவரால் புத்தகத்தின் விலையாக ஒரு ஆயிரம் ரூபாயைக் கூட எனக்கு அனுப்ப முடியவில்லை. சரி, அவ்வளவு கூட வேண்டாம். அந்த மாணவனைப் போல் ஒரு நூறு ரூபாயாவது அனுப்பியிருந்தால் தமிழ் எழுத்தாளர்களைப் போலத்தான் தமிழ்ப் பதிப்பாளர்களும் பிச்சைக்காரர்கள் போல என்று நினைத்துக்கொண்டு திருப்தி அடைந்திருப்பேன். ஆனால் இப்போது அவரைத் திருடன் என்று நினைக்கிறேன். பிச்சைக்காரனாக இருக்கலாம். திருட்டு பெரும் பாவம் இல்லையா? அதிலும் ஞானத்திருட்டு?
நான் சில ஆண்டுகளாகக் கோவில்களுக்குச் செல்வதில்லை. அந்த நேரத்தில் எழுதலாமே என்ற நோக்கம்தான். ஆனால் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் குருக்கள் தட்சிணைத் தட்டைக் காண்பித்தால் அதில் ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல்தான் வைப்பேன். மதுரை மீனாட்சி, திருப்பதி போன்ற பணக்காரக் கோவில்களில் அல்ல. ஏழைக் கோவில்களில். அங்கே குருக்களாக இருப்பவர்களுக்கு ஊதியம் கம்மி. அதை விடக் கொடுமை, பத்துப் பன்னிரண்டு மணி நேரம் அக்னி குண்டத்தில் நிற்க வேண்டும். சிறுநீர் கழிப்பதற்குக் கூட வெளியே போக முடியாது.
எழுத்தாளன் என்பவன் இந்த சமூகத்துக்கும் மொழிக்கும் அடையாளத்தை அளிப்பவன். அவனுடைய ஒரு நாவலை வாங்கிக்கொண்டு கம்மென்று இருப்பீர்களா? அல்லது, பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு அடுத்த பிறந்த நாள் வரட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய தொலைபேசி எண்களையெல்லாம் நான் ஏன் வைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
இந்த அமெரிக்க நண்பரைப் பாருங்கள். மாதம் இருபதாயிரம் டாலர் ஊதியம் வரும். கணவன் மனைவி இருவருமே உயர் பதவியில் இருக்கிறார்கள். பல வருடப் பழக்கம். ஒருமுறை நேரில் வந்த போது மதுவுக்கு மட்டும் இருபதாயிரம் செலவு செய்தார். எல்லாம் சரி. இப்போது பிடிஎஃப் அனுப்பட்டுமா என்று கேட்டால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறார். I totally understand charu என்று ஒரு வாட்ஸப் செய்தி அனுப்புகிறார். எங்கே புரிந்து கொண்டீர்கள்? இப்படித்தான் உங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பதில் சொல்வீர்களா?
புத்தகம் போட்டால் நாலாயிரம் ரூபாய்தான் ராயல்டி கிடைக்கிறது. மொழிபெயர்ப்புக்காக லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியிருக்கிறது. என் நாவலை பிடிஎஃப்பில் அனுப்பி உண்டியல் குலுக்குகிறேன். உங்களுக்கு நாவல் பிடிஎஃப் ஐ அனுப்பவா?
வந்த பதில் என்ன தெரியுமா? அமெரிக்காவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உயர் பதவியில் இருப்பவர்.
I totally understand Charu.
எங்கே போய் முட்டிக் கொள்வீர்கள்? தெரியாத ஆளாக இருந்தால் வாய்க்கு வந்தபடி திட்டலாம். ஏழெட்டு ஆண்டுகளாக நண்பர். என்ன செய்வது? அவர் எண்ணை ப்ளாக் பண்ணி விடலாம். நேரில் வந்தால் எனக்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் என்னைப் பார்க்க முடியும் என்று சொல்லலாம்.
அப்படித்தான் முடிவு செய்திருக்கிறேன். இவர்களைத்தான் அயான் ராண்ட் மேற்கண்டபடி வகைப்படுத்துகிறார். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். இங்கே ஒரு எழுத்தாளனை.
ஒரு ஜமீந்தார் எனக்கு 2000 ரூ அனுப்பியிருக்கிறார்.
மாதம் இருபது லட்சம் சம்பாதிப்பவர் பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் முப்பதாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் ஒரு பெண் 1500 ரூ. அனுப்பி விட்டு, சம்பளம் வாங்கியதும் இன்னும் அனுப்புகிறேன் என்கிறார்.
ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். குறைந்த பட்சம் என்னைப் பார்க்கும்போதெல்லாம், என்னோடு பேசும் போதெல்லாம் “உங்களுக்கு என்ன வேண்டும் சாரு? உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் சாரு? தயங்காமல் சொல்லுங்கள். என்ன வேண்டுமானாலும் – என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்று சொல்லாதீர்கள். தட்சணைத் தட்டை நீட்டும் போது ஒரு ரூபாய் போடுகிறீர்கள், அல்லது, வெறுமனே தட்டைத் தொட்டுக் கும்பிடுகிறீர்கள். ஆனால் ஏன் இப்படி வாயால் வடை சுடுகிறீர்கள்?
இன்னொன்றையும் சொல்கிறேன். நான் செய்வது ஒரு சமூகச் செயல்பாடு. நான் ஒன்றும் வீடு கட்டுவதற்கோ, மற்ற செலவுகளுக்கோ பணம் கேட்கவில்லை. நான் ஒரு கலாச்சார செயல்பாட்டில் இருக்கிறேன். என் நூல்கள் ஆங்கிலத்தில் போனால் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். அதனால் தமிழுக்குப் பெருமை. தமிழ்நாட்டுக்குப் பெருமை. ஸீரோ டிகிரி நாவல் இந்தியாவில் வந்த ஐம்பது சிறந்த புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. Fifty Authors, Fifty Books. HarperCollins. எடுத்த எடுப்பிலேயே ஔரங்ஸேப் க்ராஸ்வேர்ட் அகில இந்திய விருதைப் பெற்றது.
இத்தகைய கலாச்சார செயல்பாட்டுக்காகத்தான் நிதி வேண்டும் என்கிறேன்.
மாதாமாதம் சந்தா/நன்கொடை அனுப்பும் நண்பர்களுக்கு இந்தப் பதிவு பொருந்தாது. அவர்கள் இதைக் கண்டு கொள்ள வேண்டாம். மாதம் இருபது லட்சம் வருமானம். பிடிஎஃப் க்கு பத்தாயிரம். ஜமீந்தார் கொடுக்கும் இரண்டாயிரம். இப்படிப்பட்ட பண உறவையே குறிப்பிடுகிறேன்.
இப்படி நான் ஈடுபட்டுள்ளது ஒரு கலாச்சார செயல்பாடு என்பதால் எனக்கு நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் பணம் பெருகும். ஏனென்றால், நான் சுயநலம் அற்றவன். சமரசம் செய்து கொள்ளாதவன். மரணத்துக்கு அஞ்சாதவன். இந்த அர்த்தத்திலெல்லாம் நான் ஒரு ஞானியாக வாழ்பவன். அதனால்தான் எனக்கு நீங்கள் பண உதவி செய்தால் உங்கள் பணம் பெருகும். ஏனென்றால், நான் கேட்பது ஒரு நற்செயலுக்காக. எனக்காக அல்ல. இந்தச் செயல்பாட்டில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் உங்களின் கலாச்சார/மொழி அடையாளத்தைப் பேணுவதில் ஆர்வம் காண்பிக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.
***
நாவலின் பிடிஎஃப் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விலை எதுவும் இல்லை. நீங்கள் தரும் நன்கொடைதான்.
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai