அத்துமீறல்

என் வாசகன்
வயது இருபத்தொன்று
சில தினங்கள் முன்
ஒரு வாட்ஸப் செய்தி அனுப்பினான்
நீண்ட பதில் கோரும் கனமான செய்தி

தக்க நேரத்துக்குக் காத்திருந்தேன்
இன்று நேரம் கிடைத்து
போய்ப் பார்த்தால்
அதை ரத்து செய்திருந்தான்

என் வாட்ஸப் என் வீடு
அதற்கு ஒன்றை அனுப்புகிறாய்
அப்போதே அது என் உடைமையாகிறது
ஆனால் அதை அனுப்பியதால்
அது இன்னும் உன் உடைமை என நினைத்து
ரத்து செய்ய உனக்கென்ன உரிமை?
அதிலும் உன் வீட்டிலிருந்தே
என் வீட்டுக்குள் நுழைந்து
என் அனுமதியின்றி
என் உடைமையை எப்படி நீ
பறிக்கலாம்?

உடனே அவனை வாட்ஸப்பிலிருந்து
தூக்கினேன்
இதேபோல் பலரும் செய்வதால்
ஒரு விதி செய்தேன்
யாரெல்லாம் என் வீட்டிற்கு
அனுப்பியதை
என் அனுமதியின்றி
இல்லாமல் ஆக்குகிறார்களோ
அவர்களை வாட்ஸப்பிலிருந்து தூக்குவது

கவனியுங்கள்
உங்கள் சுதந்திரத்தில் நான்
அத்துமீறவில்லை
என் அனுமதியின்றி
என் வீட்டிலிலுள்ள பொருட்களை
எடுக்க உமக்கு உரிமையில்லை

என் வீட்டு ஜன்னல் கண்ணாடியில்
ஒரு பறவை பிரதிபலிக்கிறது
ஆனால் அதன் இறகுகள்
காற்றில் உதிர்ந்து மறைந்து போகின்றன
உன் ஒவ்வொரு செய்தியும்
ஒரு கல்லாக விழுந்து
என் இதயத்தில் அலைகளை எழுப்புகிறது
ஆனால்
நீ அந்தக் கல்லைத் திரும்ப எடுத்துக்கொண்டு
குளத்தை அமைதியாக்குகிறாய்

என் மௌனத்தை உன் விரல்களே
நிர்ணயிக்கின்றன
உன் விரல்களின் அசைவுகளுக்கேற்ப
நான் நடனமாட வேண்டியிருக்கிறது

என் வீட்டுக்குள் உன்னுடைய கன்னக்கோல்
எரியும் விளக்கின் நெய்யை
உறிஞ்சும் இருளென துளையிடுகிறது.