காலை நடைப்பயிற்சிக்கு
ஆறரை மணிக்குக் கிளம்பி
கீழேயிறங்கும் மாடிப்படி
க்கட்டுகளில் அமர்ந்து
காலணியை மாட்டுவேன்
சரியாக அந்த நேரத்தில்
மேல்வீட்டுக்காரர் படிக்கட்டு
களில் இறங்குவார்
வணக்கம் சொல்வார்
வணக்கம் சொல்வேன்
சமயங்களில் என் நேரம் மாறும்
அவரும் அதே நேரத்தில்
இறங்குவார்
வணக்கம் சொல்வார்
வணக்கம் சொல்வேன்
ஒருநாளும் தப்பியதில்லை
கீழே இறங்கினால்
ஒரு நாய் என்னிடம்
வாலை ஆட்டியபடி
ஓடி வரும்
ஒருநாளும் அதற்கு நான்
பிஸ்கட் கொடுத்ததில்லை
சங்கீதா உணவகத்தின் அருகில்
ஒரு பிச்சைக்காரர்
தினந்தோறும் வணக்கம்
சொல்வார் நானும்
வணக்கம் சொல்வேன்
ஒருநாளும் அவருக்கு நான்
பணம் கொடுத்ததில்லை
நான் நடக்கும் தெருமுனையில்
இருக்கும் இட்லிக் கடையில்
சீருடையணிந்த ஆட்டோ பஸ்
ஓட்டுனர்கள் நின்றபடியே இட்லி
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்
சாயா மாயா டீக்கடையைத்
தாண்டும்போது அந்த இளம்பெண்ணை
தினந்தோறும் பார்க்கிறேன்
அதே இடம் ஆனால்
நேரம் மாறும்
ஏன் என்னோடு பேச
முடியாவிட்டால் நீ
பதற்றம் கொள்கிறாய்,
ஒரு வாரம் பேசாவிட்டாலும்
பதற்றம் கொள்ளலாகாது
என்கிறாள் மோகினிக்குட்டி
என்னிடம் வாலை ஆட்டியபடி
வரும் நாய்க்குட்டிக்கு ஒருநாள்
பிஸ்கட் கொடுக்க முயன்ற
என் மனையாளைக்
கடிக்கப் பாய்ந்தது
நாய்க்குட்டி