எனக்குப் பிடித்த எழுத்தாளர் (மீண்டும்)

அவருடைய இணைய தளத்தை அறிமுகப்படுத்தும்போது, அதில் உள்ள ஐந்து சிறுகதைகளும் எனக்குப் பிடித்திருந்ததால் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தலைப்பு வைத்தேன். பிறகு, அவர் ஃப்ரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கதைகளைப் பாராட்டி எழுதினேன். ஆனால் அவருடைய தேர்ந்தெடுப்பில் அரசியல் இல்லை என்று அவரைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன். அவர் என்னிடம் என் அரசியல் தேர்வைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை சூசகமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு அவர் என் மீது கோபம்தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் நன்றி சொன்னார். ஆனால் “எனக்குப் பிடித்த எழுத்தாளர்” என்று சொன்னது அவரைக் கலவரப்படுத்தி விட்டது என்றார். அப்படிச் சொன்னதுதான் என்னைக் கலவரப்படுத்தியது.

எழுத்தாளர்கள் சராசரி மனிதர்களைப் போல் நடந்து கொள்ள மாட்டார்கள். ஒரு பித்த நிலையில்தான் வாழ்வார்கள். அப்படி இருந்தால்தான் எழுத்தாளனாகவே இருக்க முடியும். ’இப்போதைக்குக் கொஞ்சமாக, அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் பாராட்டி வைப்போம், பிறகு எப்படிப் போகிறார் என்று பார்க்கலாம்’ என்றெல்லாம் கலைஞர்கள் கணக்குப் போட்டு வேலை செய்ய முடியாது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று ஆறே சிறுகதைகளைப் படித்து விட்டு சாதனாவைப் பற்றி எழுதினேன். சாதனா மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் என்னை டின் கட்டி அடித்திருப்பார்கள். அந்த அளவுக்கு சாதனாவைப் பாராட்டி எழுதினேன். அதைப் போலவேதான் வளன் அரசுவையும் பாராட்டி எழுதினேன். அவர்களையெல்லாம் “எனக்குப் பிடித்த எழுத்தாளர்” என்று சொன்னபோது வராத கலவரம் இப்போது இவரைப் பற்றி எழுதியதும் இவருக்கே வந்து விட்டதுதான் ஆச்சரியம். ரெண்டு மொக்கை கதை எழுதி விட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரியும் இந்தக் காலத்தில் இப்படியும் அடக்கம் காட்டுகிறார்கள் சிலர்.

காயத்ரி பயணக் கட்டுரை எழுதத் தொடங்கியபோது “வேண்டாம், நாவலாக எழுது” என்றேன். கேட்கவில்லை. கேட்டால் என் மாணவி இல்லையே? பயணக் கட்டுரையாகவே எழுதினாள். பிறகு என் நண்பர் ஒருவரும் அதையே சொல்லியிருக்கிறார் போல. உடனே புத்தி வந்து விட்டது. நான் சொன்னால் கேட்க மாட்டார்கள். ஊர் சொன்னால் கேட்பார்கள். அது என் ராசி.

இப்போது ஹெக்ஸகோன் என்ற தலைப்பில் நாவலாகவே எழுதுகிறாள். அதில் எனக்கு ஒரே ஒரு பிரச்சினைதான். தலைப்பை எப்போது படித்தாலும் கேட்டாலும் ஹெச்சுக்குப் பதிலாக எஸ் தான் காதில் விழுகிறது. ஏன் தான் மொழியில் இத்தனை பிரச்சினைகளை வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. ஆனால் நாவலின் உள்ளே போனால் ஹெச்சும் பொருந்தும், எஸ்ஸும் பொருந்தும் போல் தெரிகிறது.

நாவலில் நாலு அத்தியாயங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதகளம் என்றே சொல்ல வேண்டும். கடைசி கடைசியாக பெண்களின் ஒரு முக்கியமான பிரச்சினையைச் சொல்ல மீண்டும் ஒரு பெண் எழுத்தாளர் வந்து விட்டார். எனக்குப் பொதுவாக பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர், தலித் எழுத்தாளர் என்ற பாகுபாடே பிடிக்காது. ஆனால் காயத்ரி எழுதியிருக்கும் அந்த விஷயத்தை ஒரு பெண்ணால் மட்டும்தான் இத்தனை வலுவாக எழுத முடியும். Kudos gayathri!

ஹெக்ஸகோன் – Gayathri R