சந்தோஷமாகத்தான் வாழ்கிறீர்களா?

 

டியர் சாரு

இதுவரை உங்களிடம் எத்தனை பேர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்களோ தெரியவில்லை ...யாருமே கேட்காமலும் இருந்திருக்கலாம் ;அதைப் பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை ... ஆனால் உங்களது வலைத்தளத்தை வாசித்தபின் எனக்கு இந்த கேள்வியை உங்களிடம் கேட்டே ஆக வேண்டும் என்று தோன்றி விட்டது , நீங்கள் என்னை உங்கள் மகள் ஜனனியைப் போல எண்ணிக் கொண்டு கூட இதற்கு பதில் அனுப்பலாம் ;

உங்களது வலைத்தளத்தை தவிர மற்ற உங்களது படைப்புகள் எதையும் நான் வாசித்ததில்லை இருந்தும் உங்கள் எழுத்துக்கள் படிக்கத் தூண்டவே செய்கின்றன அடுத்த முறை புத்தகத் திருவிழாவில் உங்களது படைப்புகள் சிலவற்றை நிச்சயம் வாங்கியே தீருவது என முடிவு செய்த பின் தான் இந்த செய்தியை அனுப்புகிறேன்

"ஏன் சாரு இவ்வளவு திறமை உள்ள தங்களுக்கு தாங்கள் தற்போது வாழும் இந்த வாழ்க்கை முறை முழுமையாக மனதிற்கு உகந்ததாகத்தான் இருக்கிறதா ? சந்தோசமாகத்தான் இப்படி வாழ்கிறீர்களா ?"

என்னவோ கேட்கத் தோன்றியது கேட்டு முடித்தாகி விட்டது

பதில் வந்தால் சந்தோசமே ; இல்லாவிட்டாலும் வருத்தமில்லை ,

நட்புடன்
கயல்

பதில்: சந்தோஷமாக இருந்தால் நான் எழுதிக் கொண்டு இருக்க மாட்டேன். நிம்மதியாக மேற்கத்திய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டு, வாரம் ஐந்து நாட்கள் ஃபில்ம் சேம்பரில் திரையிடப்படும் உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்திருப்பேன். இந்த வாழ்க்கை நிம்மதிக் கேடாகவே இருந்து கொண்டிருப்பதால்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அது சரி, கயல் என்றெல்லாம் கூட இப்போது பெயர் வைக்கிறார்களா என்ன? அருமையான பெயர்....

* * *

17.9.2008.
10.10 a.m.