நண்பர் தங்கவேலை சந்தித்து லேப்டாப்பைக் கொடுத்து சாருவிடம் சேர்க்கச் சொல்லும் நோக்கத்துடன் காலையில் திருப்பூரிலிருந்து கோவை கிளம்பினேன். நண்பரை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. சாரு கோவை விமான நிலையத்தில் காலை 9.40இல் இருந்து காத்திருக்க , கோவை சென்றதும் தங்கவேலுடன் சாருவை 10.40க்கு சந்தித்தோம். சாருவையும் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. ” என்ன காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கறீங்க ? ” என்று சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார்.
அடியேனும் தங்கவேலும் , அடியேனும் சாருவும், சாருவும் தங்கவேலும் தங்கவேலின் இல்லத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை. இவை அனைத்தும் எந்தவிதத் திட்டமிடுதலும் இல்லாமல் அந்த நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள். என்னவென்று சொல்வது? இறை சக்தி இன்றைய பொழுதை இப்படி நமக்கு அமைத்திருப்பதை உணர்ந்து, மனதை நிகழ்வுகளோடு பொருத்திக் கொண்டு, வரப்போகும் நிகழ்வுகளுக்குத் தயாராக தங்கவேலின் இல்லத்திற்குச் சென்றோம்.
மதிய உணவுக்குப் பின் கேரளா-கஞ்சிக்கோடு-சத்திரப்படிக்கு மாலை 3.30 க்கு சென்று சேர்ந்தோம். (சத்திரப்படியில் இருந்து சுமாராக நான்கு கிலோமீட்டர் தூரத்தில் குளிர்பான த் தொழிற்சாலை அமைந்துள்ளது.) இரண்டு நாட்களாகத் தொடர்கிறது அந்த நடைப்பயணம். சத்திரப்படியில் பொதுக்கூட்டம் ; நடைப்பயணத்தில் கலந்துகொண்டவர்கள் நீளவாக்கில் இரண்டு இரண்டு பேராக போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைதியாக கோஷமிட்டவாறு மாலை 4.30 க்கு சத்திரப்படியை அடைந்தனர்.(தமிழகத்தில்???)
அந்த ஊர்வலம் சத்திரப்படியின் மையப்பகுதியில் இருந்து எல்லைவரை சென்று திரும்பி வந்தது சுமார் பதினைந்து நிமிடத்தில். பின்னர் பொதுக்கூட்டம். சாருவின் அழுத்தமான உரைக்குப் பின் மீண்டும் நடைப்பயணம். நண்பர் பிஜு, சாருவை அழைக்க சாருவும் நடைப்பயணத்தில் கலந்துகொண்டார். காரை அங்கேயே நிறுத்திவிட்டு நானும் கலந்துகொண்டேன், பதினைந்து நிமிடத்தில் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன்.
நடந்துகொண்டே இருந்தோம். இரண்டு கி.மீ இருக்கலாம். வியர்வையில் தொப்பலாக நனைந்தவாறு அமைதியாக நடந்துகொண்டு இருந்தார் சாரு. இந்த நடைப்பயணம் எங்களைப் பொறுத்தவரை திட்டமிடப்படாதது. அதை சாருவிடம் சொன்னேன். சாரு புன்சிரிப்புடன் தொடர, ஊர்வலம் திரும்பும் அறிகுறியே காணோம்.
பிஜுவிடம் கேட்ட பொழுது ” ஊர்வலம் குளிர்பானத் தொழிற்சாலை வாயில்வரை சென்று முடியும் , அசம்பாவிதம் ஏதும் நடைபெறாவிட்டால் ” என்றார். பயணதூரம் சரியாகத் தெரியாததால் நான் திரும்பி சத்திரப்படி வந்து , நண்பர் தங்கவேலுவையும் அழைத்துக் கொண்டு குளிர்பானத் தொழிற்சாலைக்கு அருகில் சென்றோம். இறுதிக்கட்டத்தை சாரு எதிர்கொள்ள வசதியாக சிறுஓய்வு அவருக்குத் தேவை எனக் கருதிய நான் காரில் கட்டாயப்படுத்தி ஏற்றிக்கொண்டு சென்று குளிர்பானத் தொழிற்சாலைக்குச் சற்று முன்னதாக காவல்துறையினர் இருந்த இடத்தில் காரை நிறுத்தினேன்.
” சிவா , இங்கே நிறுத்தாதீங்க, இன்னும் பின்னால் கொண்டு போயிடுங்க ” என்றார் சாரு. ” ஏன்? ” என்றேன்.
“ சமூகவிரோதிகள் யாரேனும் ஒருவேளை ஊடுருவி இருந்தால் , காவல்துறையினர் அருகில் நிற்கும் காரைத் தாக்கி, குழப்பம் விளைவிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது ” என்றார்.
சற்று பின்னால் சென்று நின்றோம். ஊர்வலம் குளிர்பானத் தொழிற்சாலை வாயிலை வந்தடைந்தது. காவல்துறையினர் தடுத்ததினால் ஆவேசமான
( திருப்பூர் சிவா உடன் )
கூட்டத்தினரை போரட்டக்குழுவினர் அமைதிப்படுத்தினர். ” நம்முடைய இந்தப் போராட்டம் குளிர்பானத் தொழிற்சாலையின் முதலாளிகளுக்கும், அதை அனுமதித்த அரசுக்கும் எதிரான போரட்டமே தவிர காவல்துறையினருக்கு எதிரானது அல்ல ” எனத் தெளிவுபடுத்தி சாரு பேசி நிறைவு செய்ய , கோவை திரும்பினோம்.
சாரு டெக்கான்கிரானிக்கிள் பத்திரிகைக்காக கட்டுரை தயார் செய்து அனுப்பியபின் போத்தனூரில் இருந்து இரவு 10.15க்கு சாருவை சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டு , தேசியநெடுஞ்சாலை வழியாக இரவு 11.15க்கு (போக்குவரத்து மிகமிகக் குறைவாக இருந்தது) வீடு திரும்பினேன்.
நோக்கம் நல்லதாக இருந்தால் , நடப்பது அனைத்தும் நல்லதாகவே அமையும் என்பது மேலும் உறுதியானது.
சில கேள்விகள்:
சாரு ரயிலைத் தவற விட வைத்தது எது ?
போரட்டக்குழுவினர் சரியான நேரத்தில் வந்து சாருவை அழைத்துச் செல்லாமல் , தாமதம் ஆக்கியது எது?
இதன் மூலம் எங்கள் மூவரையும் சந்திக்க வைத்தது எது ?
டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அவர்கள் கேட்டவுடன் கட்டுரை கிடைக்கச் செய்தது எது ?
சாருவை அந்த நடைப்பயணத்தில் சில கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்தது எது ?
நான் 1.45 மணி நேரப் பயணத்தை ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பாக பயணித்து வீடு திரும்பச் செய்தது எது ?
* * * * *
திருப்பூர் சிவா.