எனக்கு ஒன்றும் தெரியாது!

 

என்னிடம் பேச ஆரம்பிக்கும் பலரும் “நான் உங்கள் அளவுக்குப் படித்ததில்லை ” என்று சொல்லியே தங்கள் பேச்சை ஆரம்பிக்கிறார்கள். ஒருவர் கூட விதி விலக்கில்லை. என்னுடைய ‘ அளவு ’ என்ன என்று இவர்களுக்குத் தெரியுமா? குவார்ட்டரா, ஆஃபா,ஃபுல்லா? எது என்னுடைய அளவு?

என்னுடைய நண்பர் மனோஜ் ஒரு விஷயம் சொன்னார். ஒருமுறை தான் பணி புரியும் பத்திரிகைக்காக ஏ.ஆர். ரஹ்மானை சந்திக்கச் சென்றிருக்கிறார். நேர்காணலுக்கு அரை மணி நேரம் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். ஆனால் மனோஜை ரஹ்மானுக்குப் பிடித்துப் போய் விட்டதால் நேர்காணல் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்திருக்கிறது.

(ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். மனோஜ் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஐந்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போன் வரும். “வீட்டிலிருந்து போன்...சரி, கிளம்புகிறேன் ” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விடுவார். தொடர்ந்து இதே போல் நடந்து கொண்டிருப்பதால் ஒருவேளை முன்னேற்பாடாக வீட்டில் போன் செய்யச் சொல்லி விட்டு வருகிறாரோ என்று. எப்படியோ, ரஹ்மானோடு இரண்டு மணி நேரம் பேசும் போது வீட்டிலிருந்து போன் வரவில்லை போலிருக்கிறது!)

நேர்காணலை ஆரம்பிக்கும் போது மனோஜ் ரஹ்மானிடம் “எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது; பொதுவான தளத்திலேயே பேசலாம் ” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ரஹ்மான் “எனக்கும் இசை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது மனோஜ் ” என்று வெகு இயல்பான குரலில் சொன்னாராம்.

“நான் ஒன்றும் அதிகம் படித்ததில்லை ” என்று என்னிடம் ‘ தன்னடக்கமாக ’ பேச்சை ஆரம்பிக்கும் மேதாவிகள் மேலே ரஹ்மான் கூறியதைத் தங்கள் பேச்சுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய துறையில் ஜீனியஸாக விளங்கும் ஒருவர்தான் இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். நிஜமாகவே ஒன்றும் தெரியாதவர்கள் தமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லித் திரியலாகாது. அது பேதமை.

மேற்கண்ட சம்பவத்துக்கு நேர் மாறாக வேறோர் சம்பவம் கூறினார் மனோஜ். பெரிய ஹீரோ நடிகர் அவர். புத்திஜீவியாகக் கருதப் படுபவர். நேர்காணலுக்குச் செல்கிறார் மனோஜ். நடிகரின் மேஜையின் மீது Granta இதழ் ஒன்று மாசு மரு இல்லாமல் வாங்கிய மேனிக்கு இருந்திருக்கிறது. நடிகர் பேச்சினூடே “என்ன சொல்றது இந்தத் தமிழ்நாட்டைப் பற்றி? இதோ நாம் க்ராண்டா அது இது என்று வரவழைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழர்கள்? ” என்று ஏதோ பெரிய மடாதிபதி லெவலில் பேசிக் கொண்டு போனாராம். மனோஜ் சொன்னார்: ” எனக்கு என்னவோ இந்த நேர்காணலுக்காகவே தனது அஸிஸ்டெண்டை விட்டு புக் லேண்ட்ஸிலிருந்து க்ராண்டாவை வாங்கி வரச் சொல்லியிருப்பாரோ என்று சந்தேகமாக இருக்கிறது...அவருடைய நேர்காணல் முழுவதுமே இந்த ரீதியில்தான் இருந்தது. ”

* * *

18.9.2008.

9.15 a.m.