கேள்வி: வனம் என்ற சொல்லே உச்சரிக்க அழகான ஒன்று. தங்களுக்கு வனம் மிகவும் பிடிக்கும் என்பது என் அனுமானம். ஏதேனும் விசேஷக் காரணம் ? (சூர்யா, மும்பை)
பதில்: அது எப்படி அவ்வளவு சரியாகக் கண்டு பிடித்தீர்கள். எனக்குக் கடல் பிடிக்காது என்பதே வனம் பிடித்ததற்குக் காரணம் என்று சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்த ஊரில் கடல் உண்டு; வனம் இல்லை. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். வனத்தோடு சம்பந்தப் பட்டது மலை. மலையும் எனக்குப் பிடிக்கும். ஒருவேளை எல்லாத் தமிழ் எழுத்தாளர்களையும் போல் தாமிரபரணி ஓடும் வன பூமியில் பிறந்திருந்தால் எனக்கு வனத்துக்குப் பதிலாக கடல் பிடித்திருக்குமோ என்னவோ? ம்ஹும். அப்படியும் சொல்ல முடியவில்லை. எங்கே பிறந்திருந்தாலும் எனக்கு வனமும் மலைகளுமே பிடிக்கும்.
இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன. காலங்காலமாக வரும் என்னுடைய உயிரியல் தொடர்பு. என் மூதாதையர் காட்டில் வசித்தவர்கள். ஒட்டு மொத்த மனித குலமே அப்படித்தானே? ஒருவேளை எங்களுடைய இனம் மிகச் சமீப காலம் வரை வனத்தில் வசித்திருக்கலாம்; அதனால்தான் என்னிடமும் அந்த ‘ ஜெனெடிக் மெமரி ’ இன்னமும் நீங்கவில்லையோ என்னவோ?
மற்றொரு காரணம், ஆன்மீகம். நம்முடைய ரிஷிகளும், சித்தர்களும், ஆன்மீக புருஷர்களும் வனத்தில்தானே வசித்தார்கள்?
ஆன்மீகம் தவிரவும், வனம் ஒரு தாயைப் போன்றது. பாதுகாப்பானது. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் வனத்திலேயே வசித்து முடித்து விடலாம். கடலில் அது சாத்தியமில்லை. வனம் வாழ்வு என்றால் கடல் மரணம்.
1854- இல் Henry David Thoreau எழுதிய Walden: Life in the Woods என்ற புத்தகத்தை அவசியம் படித்துப் பாருங்கள். என்னுடைய கல்லூரிப் பருவத்தில் அதை நான் படித்திருக்கிறேன். காந்தி தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்கும், அவரது கொள்கைகளுக்கும் ஆதாரமாக இருந்த புத்தகம் இதுதான். வால்டன் என்ற வனத்தில் தோரோ இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து அந்த அனுபவத்தை இந்த நூலில் எழுதியிருக்கிறார். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் அந்த இரண்டு ஆண்டுகளில் ஒருக்கணம் கூட தான் தனிமையை உணர்ந்ததில்லை என்கிறார் தோரோ.
வால்டன் வனத்தில் தனியாய் வாழ்ந்ததற்கு தோரோ மூன்று காரணங்களைக் கூறுகிறார் தோரோ: (1) தொழிற்புரட்சியால் ஏற்பட்ட எந்திரத் தனமான வாழ்க்கை மனிதர்களின் இயல்புத்தன்மையைக் குலைத்து அவர்களை வெறும் எந்திரங்களாகி விட்டது. எனவே, மீண்டும் இயற்கையை நோக்கிச் செல்லுதல், எளிமையாக வாழ்தல். (2) தேவைகளைக் குறைத்து அதன் மூலம் உழைப்பையும் குறைத்தல். மனிதன் அளவுக்கு மீறி உழைக்கிறான் என்பது தோரோவின் கருத்து. இரண்டு மணி நேரம் உழைத்து விட்டு மீதி நேரத்தை அவனுக்குப் பிடித்த வகையில் செலவிட வேண்டும் என்கிறார் அவர். தோரோவுக்குப் பிடித்தது வாசிப்பதும், எழுதுவதும்.
தோரோ மட்டும் அல்ல; கார்ல் மார்க்ஸும் இதே போல் சொல்லியிருக்கிறார். “உங்களுக்குப் பிடித்த வாழ்க்கை முறை எது? ” என்று அவரிடம் ஒருமுறை கேட்ட போது அவர் கூறினார்: “காலையில் பத்து மணிவாக்கில் நதிக்குச் செல்ல வேண்டும். தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டு வந்து , சமைத்து , வோட்காவுடன் சாப்பிட்டு விட்டு உறங்க வேண்டும். பிறகு ஏழு மணிக்கு மேல் எழுந்து ஒயின் அருந்தியபடியே பின்னிரவு வரை பீத்தோவனைக் கேட்க வேண்டும். ”
மனிதர்கள் 18 மணி நேரமெல்லாம் வெகு சாதாரணமாக வேலை செய்யும் இந்தக் கணினி யுகத்தில் வன வாழ்க்கை பற்றிச் சிந்திப்பவர்கள் வெகு அபூர்வம்.
வனம் என்றதும் எனக்கு வேறொரு ஞாபகமும் வருகிறது. ஒருமுறை நானும் சில நண்பர்களும் கேரள வனம் ஒன்றுக்குச் சென்ற போது அங்கே அடர்ந்த காட்டின் உள்ளே ஒரு இடத்தில் பயன்படுத்தப் பட்ட பல ஆணுறைகளைக் கண்டேன். நீலப் படம் எடுப்பவர்கள் அங்கே படம் பிடித்துப் பயன் படுத்தியவை. அம்மாதிரிப் பொருட்களால் வனம் அழிந்து விடும் என்பதால் எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துக் கொண்டு வந்தோம்.
7.9.2008.
4.00 p.m.