எனக்கு மிகப் பிடித்த இணைய தளங்களில் ஒன்று கீற்று. கீற்று ஆசிரியர் குழுவின் சில பல கருத்துக்களோடு எனக்கு முரண்பாடு இருந்தாலும் இந்த இணைய தளத்தை லட்சக் கணக்கான தமிழர்கள் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் அறிவும் சுரணையுணர்வும் அற்றுப் போன தமிழ் மகா ஜனங்களுக்கு கீற்று அவசியம் தேவை. பாரதி பற்றிய கீற்றுவின் பார்வை மிகவும் தவறானது. லூயி ஃபெர்தினாந் செலின் போன்ற எத்தனையோ எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஹிட்லரின் ஆதரவாளர்களாக இருந்திருக்கின்றனர். இங்கேயும் தமிழில் இந்துத்துவவாதியான அசோகமித்திரன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. வி.எஸ். நாய்ப்பால் கூட ஒரு இந்துத்துவவாதிதான். எல்லா கலைஞர்களுமே political correctnessஓடு சிந்திக்கக் கூடிய அருந்ததி ராயாக இருந்து விட முடியாது. பாரதியிடம் இந்துத்துவ சிந்தனைகள் உண்டு. ஆனால் அதையெல்லாம் மீறி அவன் ஒரு மகத்தான கலைஞன். கம்பனுக்குப் பிறகு பாலைவனமாகக் கிடந்த தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை நவீனப் படுத்திய மகா கவி பாரதி. பாரதிதாசனிடம் கவித்துவம் கிடையாது. அரசியல்வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படியெல்லாம் கீற்றுவுடன் எனக்கு முரண்பாடுகள் இருப்பினும் கீற்றுவை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.