பலிகேட்கும் பாதையில் பரிதவிக்கும் வாழ்க்கை

Tamilish -  தமிழ்

 

சென்னையில் எம்ஜியார் சமாதியை அடுத்து உள்ளது நேப்பியர் பாலம். மகாநதி படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். கமலும் பூர்ணம் விஸ்வநாதனும் அந்தப் பாலத்தில் நின்றபடி கடவுள் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள். அதன் கீழே கூவம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கென்று ஒரு பாதையும் இரண்டு ஓரங்களிலும் நடப்பவர்களுக்கான பாதையும் தனித்தனியே உண்டு. அந்த நடைபாதையில் ஆறு வயதுக் குழந்தை ஒன்று நடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதில் திடீரென்று ஒரு பெரிய உடைப்பு. குழந்தை அதை கவனிக்காமல் அதனுள் விழுந்து கீழே கூவத்தில் விழுந்து விட்டது.

பிறகு என்ன? குழந்தை சாவு என்று பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் சிறு செய்தி. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது.

2004-இல் கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் பற்றியெரிந்து 90 சிறு குழந்தைகள் தீயில் கருகிச் செத்தனர். காரணம், பள்ளிக்கூட நிர்வாகி குழந்தைகளை தொழுவத்தில் விலங்கினங்களை அடைப்பது போல் அடைத்து வைத்திருந்தார். குழந்தைகள் படிப்பதற்கே தகுதி இல்லாத கீற்றுக் கொட்டகை; பக்கத்திலேயே மதிய உணவுக்கான சமையல் அறை; எல்லாவற்றுக்கும் மேலாக வகுப்பறை மாடியில் இருந்தது. குழந்தைகளும் தப்பித்து வர வழியில்லாமல் கதவும் தாளிடப் பட்டு விட்டது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சும்மா இருந்து விட்டார்கள்.

இப்படி ஒரு படு பயங்கரமான குரூரத்துக்கு இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு மரண தண்டனை அல்லவா கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்? ஆனால் நம் நாட்டில் அது நடக்காது. உச்ச நீதி மன்றம் வரை வழக்கு நடந்து கொண்டிருக்கும், பலப் பல ஆண்டுகள்.

சென்ற ஆண்டு இதே மாதம் பழனியில் உள்ள ரோப் கார் அறுந்து விழுந்து நான்கு பேர் இறந்து போனார்கள். அதே போல் சென்னையில் உள்ள ஒரு தீம் பார்க்கில் ராட்சச சக்கரத்தின் ஒரு பெட்டி உடைந்து விழுந்து ஒரு கல்லூரி மாணவிக்கு கை கால் உடைந்து போனது. பார்க் நிர்வாகம் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல அவர்களுடைய வாகனத்தைக் கூட தரவில்லை. அந்த தீம் பார்க் இன்னும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், நீச்சல் குளத்துக்கு மேலே பலகை போட்டு, அதன் மேல் நூற்றுக் கணக்கான விருந்தினர்களை நடனம் ஆட வைத்தது ஓட்டல் நிர்வாகம். கனம் தாங்க முடியாமல் பலகை உடைந்து எல்லோரும் நீச்சல் குளத்தில் விழுந்ததில் ஒரு இளைஞர் நீரில் மூழ்கி இறந்து போனார்; பலருக்கு கை கால் உடைந்தது. அந்த ஓட்டல் இன்னமும் தான் சீரும் சிறப்புமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மைத் தடுப்பு ஊசி போடும் போது நான்கு குழந்தைகள் இறந்தனர். ஊசி போட்ட பதினைந்தே நிமிடத்தில் விழிகள் செருகி, தலை தொங்கி விட்டன அக்குழந்தைகளுக்கு.

என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் செய்திகள். வெறும் செய்திகள். ஒரு செய்தி வந்து நம்மை துக்கத்தில் மூழ்கடிக்கும் போது இன்னொரு செய்தி வந்து பழைய செய்தியை மறக்கடித்து விடும்.

இப்போது இந்தப் பழைய செய்திகளையெல்லாம் மறக்கடிக்கும் புதிய செய்தி: விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் என்ற கிராமத்தில் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களில் 45 பேருக்கு ஒரு தனியார் மருத்துவமனை கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறது. குறைபாடு நீங்குவதற்கு பதிலாக கண் பார்வையே பறி போய் விட்டது. ஒருவர் இருவர் அல்ல; 20 பேருக்கு பார்வை போய் விட்டது. இனிமேல் அவர்கள் வாழ்நாள் பூராவும் பார்க்க முடியாது. இன்னும் ஒன்பது பேருக்கு பார்வை திரும்பலாம் என்ற ‘ வாய்ப்பு ’ உள்ளது. இது மட்டும் அல்ல; ஏற்கனவே இரண்டொரு மாதங்களுக்கு முன்னால் இந்த மருத்துவ மனையால் கண் சிகிச்சை அளிக்கப் பட்டவர்களுக்கும் பார்வை போயிருப்பதாகத் தெரிகிறது.

‘ இலவசக் கண் சிகிச்சை முகாம் ’ என்று சொல்லி கண்களில் சிறுசிறு பிரச்சினை (கண்களில் அடிக்கடி கண்ணீர் வடிதல் பொன்றவை) உள்ள பலரை அழைத்துக் கொண்டு போய் ‘ ஆபரேஷன் ’ செய்து பார்வையைப் பறித்து விட்டது மருத்துவமனை. பின்னர் அந்த ஏழை மக்களைக் கொண்டு போய் பாதி வழியிலேயே விட்டு விட்டுப் போயிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அந்த மக்கள் செல்ல வேண்டிய கிராமம் கடுவனூர். கண்ணும் தெரியாமல், ஊருக்குப் போக வழியும் புரியாமல் தவித்துப் போயிருக்கிறார்கள் அவர்கள்.

இந்த நிலையில், பார்வை போனதற்கு மருத்துவமனைதான் காரணம் என்பது நிரூபணமானால் (?!) அதன் மீது ‘கடுமையான ’ நடவடிக்கை எடுக்கப் படும் என்று அறிவித்திருக்கிறார் சுகாதார அமைச்சர்.

இப்படிப் பார்வை போனவர்கள் அனைவரும் செல்வந்தர்களா, அதிகாரிகளா, மந்திரிகளா என்றால் இல்லை. அவர்களுக்கெல்லாம் வெளிநாடுகளையும் மிஞ்சக்கூடிய வகையில் வசதிகள் கொண்ட பணக்கார மருத்துவமனைகள் உண்டு. இங்கே கண் பார்வை இழந்தவர் எல்லோரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கே எந்த உத்தரவாதமும் இல்லாத கிராமத்து ஏழைகள். பார்வை போனவர் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் உதவித் தொகை அறிவித்திருக்கிறது அரசாங்கம். ஒரு கண் போனவருக்கு இரண்டரை லட்சம். ஆக, ஒரு கண்ணின் விலை இரண்டரை லட்சம் ரூபாய்!

இப்படிப் பட்ட இலவச சிகிச்சை முகாம்கள் நடத்தப் படுவதன் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், அதன் பின்னே ‘ வெளிநாட்டு உதவி ’ என்ற பெயரில் வரும் கோடிக் கணக்கான பணம் பற்றிய ஊழல் பூதம் கிளம்புகிறது. இந்தப் பணம் ஒரு சில தனிநபர்களுக்கே போய்ச் சேருகிறதே தவிர இவர்கள் எந்த ஏழை மக்களின் பெயரால் உதவி வாங்குகிறார்களோ அந்த மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. இது மத விவகாரம் என்று சொல்லி நமது ‘மதச் சார்பற்ற ’ அரசாங்கமும் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தனியே ஆய்வு செய்யப் பட வேண்டிய பிரச்சினை.

ஒருக்கணம் நினைத்துப் பார்த்தேன், ‘ ஏன் தீவிரவாதிகள் இவ்வளவு கஷ்டப்பட்டு தாங்களே மனித வெடிகுண்டுகளாக மாறி அப்பாவி மக்களைக் கொன்று போட வேண்டும்? அந்த வேலையைத்தான் இங்கே அரசாங்கமும், அதிகாரிகளும், தனியார் ‘தொண்டு ’ நிறுவனங்களும் செய்து கொண்டிருக்கிறதே? ’ என்று.

இது ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஆட்சியை மட்டுமே பொறுத்த விஷயம் அல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலவரம். இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனை ஏ.ஐ.ஐ.எம்.எஸ். என்று சொல்லப் படும் அகில இந்திய மருத்துவக் கழகம். ஆசியாவிலேயே கூடப் பெரிதாக இருக்கலாம். இது மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் வருவது.

இங்கே கடந்த இரண்டு ஆண்டுகளில் 49 சிசுக்கள் இறந்து போயிருக்கின்றன. ஒரு வயது கூட நிரம்பாத பிஞ்சுக் குழந்தைகள் அவை. இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுதான் கற்பனையே செய்து பார்க்க முடியாத பயங்கரம். புதிய மருந்துகளை மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் எலிகளிடம் சோதனை செய்து பார்ப்பது வழக்கம். இந்த மருத்துவமனையோ பிறந்த குழந்தைகளிடம் சோதித்துப் பார்த்திருக்கிறது. ரத்தக் கொதிப்பு நோயைக் கட்டுப் படுத்துவதற்கான இரண்டு மருந்துகளை 2728 சிசுக்களிடம் சோதித்ததில் 49 குழந்தைகள் காலி! இந்த மருந்துகளை 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இதுவரை பரிசோதித்ததே இல்லை என்பதுதான் இதிலுள்ள பயங்கரம்!

ஆனால் நம்முடைய மத்திய சுகாதார அமைச்சரோ சினிமாவில் நடிகர்கள் சிகரெட் குடிக்காமல் இருந்தால் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்று அறிவித்து ஷாருக் கானுடனும், அமிதாப் பச்சனுடனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்!

உலகில் எந்த நாட்டிலும் குழந்தைகளின் உயிரை ஒரு அரசாங்கமோ சமூகமோ இவ்வளவு அற்பமாக நினைப்பதில்லை. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை மீது எனக்கு ஆயிரம் முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டுக்குள் மனித உரிமைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

ஒரே ஒரு உதாரணம். எனது நண்பர் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது மூன்று வயதுப் பெண் குழந்தையை மழலை இல்லத்தில் விட்டு விட்டு அலுவலகம் செல்வது தம்பதியினரின் வழக்கம். திடீரென்று ஒருநாள் அவர்கள் வீட்டுக்குப் போலீஸ் வந்து விட்டது. என்ன காரணம் என்றால், குழந்தை பேச்சினிடையே “மை டாட் இஸ் கில்லிங் மி ” ( என் தந்தை என்னைக் கொல்கிறார்) என்று சொல்ல, என்னவோ ஏதோ என்று பயந்து விட்டது பள்ளி.

வீட்டுக்கு வந்து பார்த்த போலீசாருக்கு எதுவும் புரியவில்லை. தந்தையும் குழந்தையும் வெகு ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.. விசாரணையில் ஒன்றும் புரியாமல் திரும்பி விட்டனர்.

பின்னர் என் நண்பரும் குழந்தையும் தங்கள் வழக்கமான கிள்ளும் விளையாட்டில் ஈடுபட, அப்போதுதான் நண்பருக்குப் புரிந்திருக்கிறது. கண்ணாமூச்சி ஆடுவது போல் அவர்கள் ஒருவருக்கொருவர் வலிக்காமல் கிள்ளி விளையாடுவது வழக்கம். ‘ மை டாட் இஸ் கில்லிங் ’ அல்ல; ‘கிள்ளிங் ’ என்று. குழந்தைக்கு கிள்ளுவது என்பதற்கு ஆங்கில வார்த்தை தெரியவில்லை.

” உடனே போலீசாரை வரவழைத்து அவர்களையும் கிள்ளிக் காண்பித்தேன் ” என்றார் நண்பர்.

இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே விளையாட்டாகக் கிள்ளியதற்கே போலீஸ் வந்து விட்டது என்றால் அங்கே குழந்தைகளின் உரிமையை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்று!

இங்கே?

* * *

நன்றி : தினமலர்