ஒலிம்பிக்ஸ் : துரோகங்களும் அவமானங்களும்

 

உலகில் அமைதியை நிலைநாட்டுவதே ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை நோக்கம் என்று சொல்லப் படுகிறது.. இந்த 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்காக பீஜிங்கிலிருந்து 15 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளுக்கான கட்டிடங்களைக் கட்டுவதற்காக அவர்களின் வீடுகள் இடிக்கப் பட்டன. இந்த மக்களை விடுங்கள்; திபேத் என்ற ஒரு பெரும் தேசத்தையே தங்களுடையது என்று சொல்லிப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்குத் தகுதி உண்டா?

திபெத் காரணமாகவும், உள் நாட்டில் அடிப்படை மனித உரிமைகள் இல்லாததன் காரணமாகவும் உலக அளவில் சரிந்து விட்ட தனது இமேஜைக் கட்டி எழுப்பும் காரணத்திற்காகவே சீனா இந்த ஒலிம்பிக்கைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, இந்த ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை இது விளையாட்டு என்பதைத் தாண்டி அரசியல் என்ற கட்டத்துக்குப் போய் விட்டது.

பீஜிங்கில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி அதற்கான கட்டிடங்களைக் கட்டுவதற்காக அந்த இடங்களில் வசித்த 15 லட்சம் பேரின் வீடுகள் இடிக்கப் பட்டு அவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அப்புறப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் கட்டுமானப் பணிகளுக்காக பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப் பட்டுள்ளனர்.

ஆனால் அடிமைத்தனம் என்பது சீனாவுக்குப் புதிதல்ல. சீனாவின் வரலாறே அடிமைத்தனத்தின் வரலாறுதான். உதாரணமாக, சீனப் பெருஞ்சுவரை கி.மு.220-200 இல் சீனாவின் முதல் பேரரசரான கின் – ஷி – ஹுவாங் கட்டத் துவங்கினார். இந்தக் கட்டிடப் பணி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடந்தது. இருபதிலிருந்து முப்பது லட்சம் தொழிலாளர்கள் இந்தக் கட்டிட வேலையின் போது இறந்தனர். எனவே அப்பாவி மக்களை பலி கொடுத்து தேசப் பெருமையைக் காப்பாற்றுவது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல.

இது சீனாவின் பழைய வரலாறு என்றால், புதிய சீனா எப்படி இருக்கிறது? எந்த வித்தியாசமும் இல்லை. உலகில் இன்று தொழில் நுட்பத் துறையில் மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கும் போது, சீனாவைப் பற்றி மட்டும் யாருமே எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அந்த நாட்டில் எல்லாத் துறைகளையும் அரசாங்கம் தனது உளவுத் துறையின் மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தணிக்கை இல்லாமல் சீனாவில் ஒரு துரும்பு கூட உள்ளே நுழைய முடியாது; வெளியிலும் வர முடியாது.

இதில் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பது பத்திரிகைத் துறை. அரசாங்கம் தரும் செய்திகளை மட்டுமே அவர்கள் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறையில் அடைக்கப் படுவார்கள். உலகிலேயே அதிக அளவு பத்திரிகையாளர்கள் சிறையில் இருக்கும் நாடு சீனா தான்.

அதேபோல் கணினித் துறையில் சீன அரசு Great Firewall என்ற சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்கிறது. இதன்படி எந்த சீனக் குடிமகனும் அந்நிய நாட்டிலிருந்து வரும் எந்தத் தகவலையும் தன்னிச்சையாகப் பெற முடியாது. சீன அரசின் உளவுத்துறை அதைப் படித்துப் பார்த்து அவ்விஷயம் உங்களுக்குக் கொடுக்கப் படலாம் என்று கருதினால் மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். விஷயம் சீன அரசுக்கு எதிராக இருப்பதாக உளவுத்துறை கருதினால் நீங்கள் சிறையிலும் அடைக்கப்படலாம். உங்களுக்கு அந்தத் தகவல் வருவதே உங்கள் குற்றத்துக்கு ருசு. வேறு சாட்சி ஒன்றும் தேவையில்லை. சுதந்திரமாக ஒருவர் கணினியில் chat செய்வது கூட அங்கே சாத்தியமில்லை.

எந்த சீனக் குடிமகனும் எந்த வெளிநாட்டுக்காரருடனும் ஆட்சேபணைக்குரிய எதையும் பேசி விடக் கூடாது. முக்கியமாக, நட்சத்திர ஓட்டல்களின் பணியாளர்கள்தான் அரசாங்கத்தின் இலக்கு. .தேவையில்லாமல் அவர்கள் வெளிநாட்டுக்காரர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது. பீஜிங் குடிமக்களுக்கு சீன அரசு வேறொரு ‘சலுகை’யையும் வழங்கியிருக்கிறது. அவர்கள் வீட்டுக்கு யாராவது வெளியூரிலிருந்து விருந்தினர் வந்தால் அவர்களின் முகவரி, அவர்கள் பார்க்கும் வேலை, அவர்களின் ரத்த அடையாளம் போன்ற விபரங்களை அரசாங்கத்திற்கு உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும். விரல் ரேகை அடையாளமும் தர வேண்டுமா என்று தெரியவில்லை

இப்படிப் பட்ட இரும்புத் திரையைப் போட்டுக் வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த என்ன தகுதி இருக்கிறது?

இது ஒரு புறம் இருக்க, இப்போது சீனா இன்றைய தினம் (24.8.2008) முடிவடைந்திருக்கும் இந்த ஒலிம்பிக்கில் பெற்றிருக்கும் 51 தங்கப் பதக்கங்களுக்குப் பின்னாலும் ஒரு சோகமான அடிமை வரலாறு உண்டு. ஒலிம்பிக் போட்டிகளில் சீனா முதல் தங்கப் பதக்கம் வென்ற ஆண்டே1984 தான். இந்த 24 ஆண்டுகளில் தான் சீனா ஒரு தங்கத்திலிருந்து 51 தங்கம் வரை முன்னேறி இருக்கிறது. இது எப்படி நிகழ்கிறது எனில், ஆறு வயதே நிரம்பிய குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டைத் தவிர வேறு எதையுமே கற்றுத் தராமல் – கிட்டத்தட்ட விளையாட்டு இயந்திரங்களை உருவாக்குவது போல் – சீனா பூராவும் அமைக்கப் பட்டிருக்கும் 3000 விளையாட்டு மையங்களில் வைத்துக் கடுமையான பயிற்சி அளிக்கப் படுகின்றனர். விளையாட்டு என்ற பெயரால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சீனாவில் இவ்வாறாக சித்ரவதை செய்யப் படுகின்றனர். இந்தச் சித்ரவதையின் பலன் தான் 51 தங்கம்!

***

கடந்த நூறு ஆண்டுகளில் எந்த இந்தியராலும் சாதிக்க முடியாத சாதனையை அபினவ் பிந்த்ரா சாதித்திருக்கிறார். இதுவரை எந்த இந்தியருமே தனி ஒருவராக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றதில்லை. அது மட்டுமல்லாமல், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஹாக்கி அணி வாங்கிய தங்கப் பதக்கத்திற்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு தங்கப் பதக்கமும் வென்றதில்லை. 1928-இலிருந்து 2004 வரை, தான் கலந்து கொண்ட 23 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் மற்றும் தங்கம் என்று மொத்தம் 15 பதக்கங்களையே வென்றிருக்கிறது இந்தியா.

இந்த மோசமான வரலாற்றைத் தனது தங்கப் பதக்கத்தின் மூலம் மாற்றிக் காட்டியிருக்கிறார் அபினவ் பிந்த்ரா என்ற இளைஞர். இதற்காக இந்தியாவே பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறது. பல மாநில அரசுகள் அபினவ் பிந்த்ராவுக்கு கோடிகளாகவும், லட்சங்களாகவும் பரிசுகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பின்னே இருக்கும் மறக்கடிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட யதார்த்தங்கள் என்ன? இந்த வெற்றி உண்மையிலேயே பெருமைக்குரியதுதானா?

இந்தியாவின் சகல துறைகளிலும் வியாபித்திருக்கும் ஊழல் என்ற பூதாகாரமான சமூகப் பிரச்சினையின் ஒரு குறியீடே ஒலிம்பிக்கில் இந்தியா என்ற 100 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய தேசத்தின் பங்கேற்பு என்று சொல்லலாம்.

1988-இல் சோலில் (Seoul) நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு பி.டி. உஷாவை மட்டும் அனுப்பினால் போதுமே என்று தனது விளையாட்டுத் துறை அமைச்சரைக் கிண்டலாகக் கேட்டார் அப்போதய பிரதமர் ராஜீவ் காந்தி. ஏனென்றால் அதற்கு முன்னர் 1986-இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வாங்கிய ஒரே நபர் பி.டி. உஷாதான்.

ஒலிம்பிக்கில் பல தங்கங்கள் மயிரிழையில் - அதாவது, மில்லி மீட்டர் வித்தியாசத்தில் - தவறிப் போய் இருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவின் புகழ் பெற்ற ஓட்டக்காரரான மில்கா சிங் கடைசி நொடியில், எல்லைக் கோட்டுக்குச் சற்று அருகில் வந்து, தன் பக்கத்தில் ஓடுபவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பக்கவாட்டில் திரும்பியதால்தான் அவரது தங்கப் பதக்கம் பறி போயிற்று. அது நடந்தது 1960 ரோம் ஒலிம்பிக்ஸில்.. அதற்கு முன்பு அவர் ஆசியப் போட்டியில் நான்கு தங்கமும், காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கமும் பெற்றிருந்தார். பி.டி. உஷாவுக்கும் இதுதான் நடந்தது.

இது போன்ற தவறுக்கெல்லாம் காரணம் சரியான பயிற்சியாளர் இல்லை என்பதுதான். அதற்குக் காரணம் விளையாட்டுத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதில்லை. கிரிக்கெட்டில் கோடிக் கணக்கான பணம் கொட்டப் படுகிறது. ஆனால் மற்ற விளையாட்டுகளின் நிலை படு கேவலம். கிரிக்கெட்டால் அழிந்து போன பல விளையாட்டுகளில் ஹாக்கியும் கால் பந்தாட்டமும் முக்கியமானவை. ஹாக்கியில் மட்டுமே ஒலிம்பிக்கில் பல தங்கப் பதக்கங்களை இந்தியா வென்ற காலம் உண்டு. ஆனால் இன்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூட இந்திய ஹாக்கி அணி தகுதி பெறவில்லை!

1948இல் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியக் கால் பந்தாட்ட அணி ஃப்ரெஞ்ச் அணியுடன் மோதிய போது அந்த அணியை விட நன்றாக ஆடியது இந்திய அணிதான் என்று பத்திரிகைகள் எழுதின. ஃப்ரான்ஸ் இரண்டு கோல்கள்; இந்தியா ஒரு கோல் போட்டது. இந்த ஆட்டம் பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை எனலாம். ஏனென்றால், இந்திய ஆட்டக்காரர்கள் கால்களில் பூட்ஸ் இல்லாமல் வெறுங்காலுடனே ஆடினார்கள்! இப்படி ஒலிம்பிக் ஆட்டத்துக்கே பூட்ஸ் இல்லாமல் விளையாட அனுப்பிய பெருமை நம்முடையது!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் ஒவ்வொரு தடவையும் இந்தியா கடைசி இடத்தைப் பிடிப்பதன் காரணம் மேலே சொன்னதுதான். போதுமான நிதி ஒதுக்கப் படுவது இல்லை. இப்போது துப்பாக்கிச் சுடுவதில் தங்கம் வென்றிருக்கும் அபிநவ் பிந்த்ராவின் தகப்பனார் ஒரு கோடீஸ்வரராக இருந்திருக்கவில்லை என்றால் இந்தத் தங்கமும் கிடைத்திருக்காது. கோடீஸ்வரர் என்றால் ஒரு கோடி இரண்டு கோடி அல்ல; முந்நூறு கோடிகளுக்கு அதிபர். சிறு வயதிலிருந்தே அபிநவுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளிப்பதற்காக கோடிக் கணக்கான பணத்தை வாரி இறைத்திருக்கிறார் அவரது தகப்பனார். பயிற்சி எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. பயிற்சியாளரும் ஐரோப்பியர். (ஒரு பேரழகியான ஸ்வீடிஷ் பயிற்சியாளர் அந்தப் பெண். இப்படி ஒரு பயிற்சியாளர் கிடைத்தால் நான் கூடத்தான் நன்றாகத் துப்பாக்கி சுடுவேன்!)

அபிநவின் தகப்பனார் கோடீஸ்வரராக இருந்தது மட்டும் அல்லாமல் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் பெருந்தன்மையுள்ள தகப்பனாகவும் இருந்திருக்கிறார். எனவே அபிநவின் இந்தத் தங்கப் பதக்கம் பற்றிப் பெருமிதம் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏனென்றால் அரசாங்கம் விளையாட்டு வீரர்களின் எந்தத் தேவையையும் நிறைவேற்றியது இல்லை. அது மட்டுமல்லாமல் அவர்களை மிக மோசமாகவே இதுவரை நடத்தி வந்திருக்கிறது. ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒரு பளு தூக்கும் வீரர் பஞ்சாபில் கூலி வேலை செய்கிறார் என்பதை நாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.

சென்ற ஆண்டில் மட்டும் அபிநவ் பிந்த்ராவுக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்த நிலையில் அபிநவ் தங்கப் பதக்கம் வென்றதற்காக அவருக்குத் தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது. அபிநவின் ஸ்வீடிஷ் பயிற்சியாளரின் மாதச் சம்பளத்தை விட இந்தத் தொகை குறைவு. அபிநவ் தங்கம் வென்றதும் அவரது கோடீஸ்வரத் தந்தை 200 கோடி ரூயாப் செலவில் கட்டப்பட்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றை தனயனுக்குப் பரிசளித்திருக்கிறார்.

நிதி ஒதுக்கீடு இல்லை என்பது தவிர விளையாட்டுத் துறை எதிர் கொள்ளும் மற்றொரு பூதாகாரமான பிரச்சினை ஊழல் சக் தே என்ற இந்திப் படத்தில் இதை மிகச் சிறப்பான முறையில் காண்பித்திருந்தார்கள்.

இப்போதைய மோனிகா தேவி பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். ஊக்க மருந்து சாப்பிட்டார் என்று சொல்லப் பட்டு, பீஜிங் கிளம்புவதற்கு முந்தின நாள் தடுக்கப் பட்டிருக்கிறார் மோனிகா. மணிப்பூரைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை. இதன் பின்னணி என்னவென்று பார்த்தால் இந்திய விளையாட்டுத் துறையில் இருந்த ஒரு ஆந்திர அதிகாரி தன் மாநிலத்தைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணை ஒலிம்பிக்குக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாகவே மோனிகாவின் மேல் ‘ஊக்க மருந்து சாப்பிட்டார்’ என்ற பழி போடப் பட்டிருக்கிறது.

ஆனால் ஷைலஜாவோ ஊக்க மருந்து சாப்பிட்ட குற்றத்துக்காக ஏற்கனவே இரண்டு முறை தண்டிக்கப் பட்டவர் என்பதால் அவரை நம்பி அழைத்துச் செல்ல முடியாது என்று இந்திய பளு தூக்கும் கழகத்தில் மறுத்து விட்டார்கள். ஏனென்றால், பீஜிங் சென்ற பிறகு ஷைலஜாவின் மீது அப்படி ஒரு குற்றம் நிரூபணமானால் இந்திய பளு தூக்கும் கழகமே ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்யப் படும்.

இது பற்றி மோனிகா சொன்னார்: “சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்வதானால் ஒவ்வொரு நிலையிலும் ஊக்க மருந்து சோதனை நடக்கும் என்பது எல்லா விளையாட்டுக்காரர்களுக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் அவ்வளவு சுலபத்தில் ஊக்க மருந்து சாப்பிட்டு விட மாட்டார்கள். என்னைப் பொறுத்த வரை இதுவரை எந்தச் சோதனையிலும் நான் ஊக்க மருந்து சாப்பிட்டதாக முடிவு வந்ததில்லை. அதனால் இந்த முறை இதில் என்ன ஊழல் நடந்தது என்று தெரியவில்லை. நாளை பீஜிங்கில். நடக்க இருக்கும் ஊக்க மருந்துச் சோதனையில் நான் இருக்க வேண்டும். அந்தச் சோதனையில் நான் ஊக்க மருந்து சாப்பிட்டதாக முடிவு வந்தால் என்னை நடுத்தெருவில் நிற்க வைத்துச் சுட்டுக் கொல்லுங்கள்.”

மோனிகா சொல்வதை நிரூபிக்கும் மற்றொரு தகவல் என்னவென்றால், கடந்த 18 மாதங்களில் 30 முறை அவர் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார். ஒருமுறை கூட அவர் ஊக்க மருந்து சாப்பிட்டதற்கான அடையாளம் அவர் உடலில் தென்படவில்லை.

விஷயம் என்னவென்றால், ஷைலஜாவை அனுப்புவதற்காக திட்டமிட்ட ஒரு சதி நடந்திருக்கிறது. World Anti-Doping Agency –ஆல் அங்கீகரிக்கப் படாத ஒரு லோக்கல் சோதனைச்சாலையில் கிடைத்த முடிவை வைத்தே மோனிகா பீஜிங் செல்வது தடுக்கப் பட்டிருக்கிறது; அதுவும் கடைசி நேரத்தில்.

நம்முடைய அரசாங்க சோதனைச் சாலைகளின் லட்சணம்தான் ஏற்கனவே நாறிக் கிடக்கிறது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் போதே தடுப்பு மருந்து விஷமாக மாறி அக்குழந்தைகளைக் கொன்று விடுகின்றன. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறது அரசாங்கம். ஆனாலும் இந்தியாவில் ஏன் இந்த அளவுக்கு போலியோவால் பாதிக்கப் பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் குழந்தைகளுக்குக் கொடுக்கப் படும் போலியோ மருந்து சரியான முறையில் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப் படுவதில்லை. அதனால் அந்த மருந்துகள் வீரியத்தை இழந்து விடுகின்றன. நம்முடைய அரசாங்க மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதி இல்லாமல் நாறிக் கொண்டிருக்கும் பிணங்களைப் போல் நாறிக் கொண்டிருக்கிறது இந்திய சுகாதார வசதி. அதனால்தான் போலியோ சொட்டு மருந்து கொடுத்தும் நூற்றுக்கொரு குழந்தை போலியோ நோயுடனேயே பிறக்கிறது.

அவமானம் இதோடு முடியவில்லை. மோனிகாவின் பீஜிங் பயணம் தடுக்கப் பட்டவுடன் மணிப்பூர் முதல் மந்திரி இந்தியப் பிரதம மந்திரியோடு பேசினார். பேசிய பின்னரே சரியான சோதனை முடிவு கிடைக்கிறது. அந்த லேட்டஸ்ட் முடிவின் படி மோனிகா ஊக்க மருந்து உட்கொண்டிருக்கவில்லை! ஆனால், அதற்குப் பிறகும் மோனிகா பீஜிங் செல்ல முடியவில்லை. ஏனென்றால் இந்திய ஒலிம்பிக் கழகம் தன்னுடைய ஒலிம்பிக் வேலைகளை அதற்குள் முடித்துக் கொண்டு விட்டது. “தாமதமாகி விட்டது, ஸாரி” என்று கை விரித்து விட்டது அந்த அரசு அமைப்பு.

இந்த அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு விளையாட்டு வீரர் தன் வாழ்நாளில் எத்தனை மணி நேரம் இதற்காக செலவு செய்ய வேண்டும் என்று தெரியுமா? ஒருவர் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தால் மட்டுமே இந்த அளவுக்கு மேலே வர முடியும். அபிநவ் விஷயத்தில் பாராட்டப் பட வேண்டியது என்னவென்றால், இவ்வளவு பெரும் பணக்காரராக இருந்தும் அவர் ஒரு நாளில் பத்துப் பனிரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். (அவருக்கு மைனஸ் நான்கு என்ற அளவில் கண் பார்வைக் குறைவும் உண்டு). பளு தூக்கும் வீரரின் பொறுப்போ அதை விடக் கடினமானது. தன்னுடைய ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் அவர் பளு தூக்கும் விஷயத்தை ஒட்டியே கட்டமைக்க வேண்டும்.

ஆனால் இது எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது இந்தியா வாழ்வில் வேரூன்றியிருக்கும் ஊழல். ஒலிம்பிக் பட்டியலின் கடைசியில் வரும் இந்தியாவின் பெயரைக் கண்டு பெருமூச்சு விடும் கோடானு கோடி இந்தியர்களுக்கு இந்த ஒலிம்பிக் தரும் செய்தி இதுதான்.

***

24.8.2008.

(கலா கௌமுதி மலையாள வார இதழிலும், உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரை)