கேள்வி: (தமிழ் நாட்டில்) அடுத்த முதல்வர் யார்?
(சீனிவாசன், சென்னை)
பதில்: ஸ்டாலின் என்று சொல்லியிருப்பேன்; ஆற்காடு வீராசாமி மட்டும் இந்த வேலையைச் செய்திருக்காவிட்டால். அவருக்கு ஸ்டாலின் மேல் அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. ஸ்டாலின் மீது மட்டும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகமே இன்னும் பத்து ஆண்டுகளுக்குத் தலையெடுக்க முடியாத படி செய்து விட்டார். அதாவது, பக்தவத்சலம் காங்கிரஸுக்கு என்ன செய்தாரோ அதையே இப்போது ஆற்காடு வீராசாமி தி.மு.க.வுக்குச் செய்து முடித்து விட்டார்.
தமிழகமே ஏதோ ஆஃப்கானிஸ்தான் போல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. சென்னையிலேயே தினமும் ஐந்து மணி நேரம் மின் வெட்டு. திருப்பூர் போன்ற ஊர்களில் பதினைந்து மணி நேரம் மின் வெட்டு. அதுவும் பல மாதங்களாக. ஆனால் இந்த மின் வெட்டு ஏதோ இப்போதுதான் வந்தது போல் அரசாங்கம் புளுகிக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல; அரசாங்க அறிவிப்பின் படி இரண்டு மணி நேரம்தான் மின் வெட்டு! இதை விட வெட்கக்கேடு என்னவென்றால், ரோமாபுரி எரிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தது போல், மின் வெட்டு பற்றி தமிழக அமைச்சர்கள் ஜோக் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு (மட்டும்) 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இத்தனை திமிரோடு மக்களின் வேதனை பற்றி ஜோக் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கடந்த 31.8.2008 அன்று நான் ஒரு வேலையாக குன்றத்தூர் செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் போரூருக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு சிற்றூர் குன்றத்தூர். அன்றைய தினம் ஏதோ ஒரு விழாவுக்காக ஸ்டாலின் குன்றத்தூருக்கு வருகிறார். மாலை நான்கு மணி அளவில் விழா. நான் சென்ற போது மதியம் பனிரண்டு இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்; போரூரிலிருந்து குன்றத்தூர் வரை – பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் – இரண்டு அடிக்கு ஒரு சவுக்குக் கம்பு நட்டு அதில் ட்யூப் லைட்டுகளைப் போட்டு இருந்தார்கள். மேலே தி.மு.க. கொடி. இந்த அலங்காரம் சாலையின் இரண்டு பக்கமும்.
மிகப் பெரிய அதிசயம், அக்கிரமம் என்னவென்றால் அத்தனை ட்யூப் லைட்டுகளும் அந்தப் பட்டப் பகலில் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு அடிக்கு ஒரு ட்யூப் லைட் என்றால், பதினைந்து கிலோ மீட்டருக்கு எத்தனை ட்யூப் லைட் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். சாலையின் இரண்டு பக்கமும் இந்த அலங்காரம் என்பதால் அதை இரண்டால் பெருக்கிக் கொள்ளுங்கள். லட்சம் ட்யூப் லைட்டுகள் வருமா? இவ்வளவுக்கும் மின்சாரம் எங்கிருந்து வருகிறது? தமிழக மின்சார அமைச்சரின் சட்டைப் பாக்கெட்டிலிருந்தா? இதெல்லாம் யார் வீட்டுச் சொத்து? இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? சுதந்திர தினம் அன்று எனக்கு வாழ்த்து அனுப்பிய மகானுபாவர்களை நோக்கி இதை நான் கேட்கிறேன். இங்கே என்ன ஜனநாயகமா நடக்கிறது? இந்தக் காரியத்தைச் செய்தவர்கள் சமூக விரோதிகள் இல்லையா? இந்தச் சமூக விரோதிகளையெல்லாம் ஐந்து வருடங்கள் உள்ளே தள்ள வேண்டாமா? வயிறு பற்றி எரிகிறது ஐயா...இதே போல்தான் தமிழக மக்கள் அத்தனை பேரின் வயிறும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க. என்று அல்ல; அ.தி.மு.க. பதவியில் இருந்தாலும் இதே கதிதான். தமிழக மக்கள் அலுத்துப் போய் விட்டார்கள். விரக்தியில் அவர்கள் சரத்குமாரைக் கூட முதல்வராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். விஜயகாந்தின் காட்டில் நல்ல மழை.
ஒரு பாராளுமன்றத் தேர்தலில் நானும் என் நண்பரும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். நண்பர் அப்போது ஜெயலலிதாவுக்கு வேண்டியவராக இருந்தார். (இப்போது கருணாநிதியின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார்; அது வேறு விஷயம்.) தேர்தலில் அ.தி.மு.க. ஒரு சீட் வாங்கினாலே பெரிய விஷயம் என்றேன். நண்பருக்கு என் மீது ரொம்பக் கோபம். ஆனால் நான் சொல்லிய படி அ.தி.மு.க.வுக்கு ஒரு சீட் தான் கிடைத்தது. அதே போல் இப்போது சொல்கிறேன். தி.மு.க.வுக்கு சட்டமன்றத் தேர்தலில் பத்து சீட் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை. ரேஷனில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுகிறார் கருணாநிதி. ரேஷனில் அவர் அரிசியை இலவசமாகவே கொடுத்தாலும் பயன் இல்லை. மக்களின் வாழ்வில் அரிசியை விட மின்சாரம் அத்தியாவசியமான இடத்தைப் பிடித்து வெகு காலம் ஆகிறது. காட்டில் வேட்டையாடி வயிற்றை நிரப்பித் திரிந்து கொண்டிருந்த கற்காலத்திலா மனித இனம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது?
9.9.2008.
12.30 p.m.