குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (50)

 

அலெக்ஸ் அணிந்து கொள்ளும் பிம்பங்களுள் அவனுக்குப் பிடித்தமான பிம்பம் நல்மேய்ப்பர் பிம்பம். எந்த ஆடும் வழி தவறிப் போய் விடாமல் நல்வழியில் கொண்டு செலுத்தி விட வேண்டும் என்ற அவனுடைய அவாவை யார் குறை சொல்ல முடியும், சொல்லுங்கள்?

இப்போது அவனுடைய கவலையெல்லாம் தமிழ் இலக்கியத்தை யார் காப்பாற்றுவது என்பதுதான். சுஜாதாவை அந்த வைகுண்டப் பெருமாள் எடுத்துக் கொண்டு விட்டார். இந்த பூலோகப் பெருமாளை அந்த பாழாய்ப் போன பானு எடுத்துக் கொண்டு விட்டாள். அவளை எப்படியாவது இவனிடமிருந்து துரத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஜி. நாகராஜன் கஞ்ஜாவால் அழிந்த மாதிரி இவன் அந்தப் பெண்ணால் அழிந்து விடுவான்.

பன்னெடுங்காலமாக சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வரும் தமிழ் மொழி இப்படி ஒன்றிரண்டு எழுத்தாளர்களால் நஷ்டப்பட்டு விடாதுதான். இருந்தாலும் இப்படித் தன் கண்ணெதிரே தன்னுடைய நண்பன் ஒரு பெண்ணால் அழிந்து போவதை அலெக்ஸின் நல்மேய்ப்பர் பிம்பம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

நிக்கியிடம் பலமுறை இது பற்றிப் பேசினான் அலெக்ஸ். நிக்கிக்கோ, ‘ இந்த இலக்கியம் இலக்கியம் என்கிறான்களே, அப்படியென்றால் என்ன? ’ என்று பல்லாண்டுங் காலமாக இருந்து வரும் சந்தேகம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த இலக்கியம் என்ற சனியன் மட்டும் பெருமாளைப் பீடிக்காமல் இருந்திருந்தால் அவனும் தன்னைப் போலவே காரும் வீடுமாக வசதியாக வாழ்ந்திருக்கலாம். சரி, அவனாவது போகட்டும் என்று பார்த்தால் இந்த அலெக்ஸ் பயலும் அப்படித்தான் இருக்கிறான். எப்படி இவன்களெல்லாம் ஒரே வார்ப்படத்தில் போட்டு வார்த்த மாதிரி ஒரே மாதிரி யோசிக்கிறான்கள், ஒரே மாதிரி வாழ்கிறான்கள்?

இதோ இப்போது நாகப்பட்டினத்துக்குப் பக்கத்தில் உள்ள பால்பண்ணைச் சேரி என்ற ஊரில் புதிதாக ஒரு பால் பண்ணையைத் திறந்திருக்கிறேன். அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்தச் சுற்று வட்டாரத்தில் எத்தனை பேருக்கு நன்மை... எத்தனை கிராமங்கள் இதனால் பலன் பெற்றிருக்கின்றன... இவன்களுடைய இலக்கியத்தை வைத்து இப்படிச் சொல்ல முடியுமா? இலக்கியம்தான் அதை உண்டு பண்ணுகிறவனையே காலி பண்ணி விடுகிறதே, அது எப்படி மற்றவரை வாழ வைக்கும்? என்ன, இந்த பானு மாதிரி இரண்டு மூன்று வீணாய்ப் போனதுகள் பல்லை இளித்துக் கொண்டு ஓடி வரும்...அதைத் தவிர வேறு என்ன பயன்? இந்த அலெக்ஸுக்கு என்ன ஆயிற்று? இந்தப் பெருமாள்நாய் எந்த நாயோடு சுற்றினால் இவனுக்கு என்ன? பானுவால்தான் பெருமாளின் எழுத்து கெட்டுப் போகிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். போகட்டுமே, அதனால் யாருக்கு என்ன நட்டம்?

ஆனால் இப்போது அலெக்ஸ் வேறு ஏதோ அல்லவா சொல்கிறான்? பானுவால்தான் பெருமாளுக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கிறானாம். இது என்ன புதுக் கதை? பெண்கள் பிரச்சினையால் பெண்நோய்தானே வரும்? இருதய நோயா வரும்?

இதெல்லாம் இந்த இலக்கியவாதிகளின் வியாதி. வயது 45 ஆனதுமே 75 ஆனது போல் புலம்ப வேண்டியது. பெருமாளுக்கு 55 வயது. இந்த வயதில் பானுவோடு படுத்து விட்டானாம். அதனால்தான் இப்போது ஆஸ்பத்திரியில் கிடக்கிறானாம். அலெக்ஸின் கண்டு பிடிப்பு! என்னாங்கடா இது? அப்படியானால் நம்முடைய gang- ஐச் சேர்ந்த 75 வயது அண்ணாச்சி இன்னமும் பெண்களைத் தள்ளிக் கொண்டு போகிறாரே, அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

* * *

10.9.2008.

9.35 a.m.