பெருமாளின் ஆடம்பர வாழ்வு பற்றி நண்பர்கள் அவ்வப்போது பிராது செய்வதுண்டு. அதைப் பற்றி எப்போதுமே கவலைப்படாத பெருமாள் எப்போதாவது கோட்டை விட்டு விடுவதும் உண்டு. அப்படித்தான் அந்தச் சம்பவம் நடந்தது.
பெருமாள், சீனிவாசன், கோபால் மூவரும் பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாலையின் தரம் மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஞாபகப்படுத்துவதாக இருந்தது. இந்தியா முழுவதுமே நெடுஞ்சாலைகள் இந்தத் தரத்தில்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு வந்தான் வாசன். வாஜ்பேயிக்கு நன்றி. வாஜ்பேயியின் முயற்சியால்தான் அது நடந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டு வரும்போது வாலாஜா அருகில் இரண்டு லாரிகள் ஒன்றுக்கொன்று நேராக மோதி அப்பளமாகிக் கிடந்தன. இரண்டு டிரைவர்களும் அவர்களோடு கூட வந்தவர்களும் உருத்தெரியாமல் கூழாகியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதுதான் இந்தியர்களின் மனோபாவம். ஒருவழிப் பாதையாக எதிரும் புதிரும் இரண்டு சாலைகளை அமைத்திருந்தும் ஒரு லாரிக்காரன் எதிர்ப்புறம் செல்வதற்காக ஒரு ஃபர்லாங் தூரத்தை மிச்சம் செய்யும் பொருட்டு எதிர்வழியிலேயே தன் லாரியை விட்டிருக்கிறான். எதிரே வந்த லாரிக்காரனுக்கு முதலில் ஒன்றுமே புரிந்திருக்காது. புரிந்த கணத்தில் உயிர் பிரிந்திருக்கும்.
வாசனின் வீடு ஊரப்பாக்கத்தில் இருந்ததால் அங்கிருந்து பெருமாளும் கோபாலும் புற நகர் மின் ரயிலில் ஏறி ஊர் வந்து சேர்வது என்று ஏற்பாடு. அப்போதே பெருமாளுக்குக் கௌளி சொல்லியது, ஏதோ தவறு என்று. பெருமாள் தனது நண்பர்களின் பேச்சைக் கேட்டு இந்தப் புறநகர் ரயில்களில் ஏறிய இரண்டு மூன்று தடவைகளிலும் அதிர்ஷ்டவசமாகவே உயிர் பிழைத்திருக்கிறான். ‘ சரி, பரவாயில்லை, எப்போதுமே அப்படி இருக்குமா? ’ என்று நினைத்தபடி கோபாலுடன் ஊரப்பாக்கத்தில் ஏறி விட்டான்.
அது மட்டும் அல்ல; அதற்குச் சில தினங்கள் முன்பாகத்தான் அவன் நல்லபடியாக ஒரு மின்சார ரயில் பயணத்தைச் செய்து முடித்திருந்தான். ஒரு வாரம் முன்பு ஒரு வேலையாக குன்றத்தூர் சென்றிருந்தான்; வழக்கம்போல் ‘ கால் டாக்ஸி ’ யில்தான். (என்ன வேலை? வேறு என்ன, ஃபீல்ட் வொர்க்தான். பெருமாள் தன் காதலியுடன் ‘ சேர ’ நகரத்தில் ஒரு தோதான இடம் கிடைக்கவில்லை என்பதால் குன்றத்தூரில் வசிக்கும் அவனுடைய பேச்சுலர் நண்பன் ஒருவன் பெரிய மனசு பண்ணித் தன்னுடைய வீட்டைப் பயன்படுத்திக் கொள்ளும்படிச் சொல்லியிருந்தான்.) ஆனால் வேலையைக் கன கச்சிதமாக முடித்துக் கொண்டு (மிருகப் புணர்ச்சி...அதை வேறு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.) மூன்று மணியளவில் திரும்பும்போது ஊருக்குத் திரும்புவதே சாத்தியமில்லாமல் போய் விட்டது.
காரணம், அன்றைய தினம் ஏதோ ஒரு மந்திரியும் குன்றத்தூர் வந்திருந்தார். அவருக்கு வேறு மாதிரியான ஃபீல்ட் வொர்க் என்பதால் அவருடைய தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் அந்தச் சிற்றூரில் குவிந்து விட்டார்கள். குன்றத்தூரிலிருந்து போரூர் வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. வெறும் கட்சி வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டன.
அதன் பிறகு நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு ஆட்டோவைப் பிடித்து பல்லாவரம் வரை வந்து, அங்கிருந்து மின்சார ரயிலில் ஊர் வந்து சேர்ந்தான் பெருமாள். அந்த ரயில் பயணம் நல்ல மாதிரி அமைந்து போனதால் கொஞ்சம் ஏமாந்து விட்டான். அப்படி நல்ல மாதிரி அமைந்து போனதற்குக் காரணம், அது ‘பீக் ’ ‘ அவராக ’ இருந்தாலும் அந்த நேரத்தில் மக்கள் வெள்ளம் நகரத்திலிருந்து புறநகரை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கும்.

பெருமாள் ஊரப்பாக்கத்திலிருந்து சென்னை திரும்பிய தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால் வண்டியில் அதிகக் கூட்டம் இருந்தது. கோபாலிடம் நைஸாக “முதல் வகுப்பு டிக்கட் எவ்வளவு இருக்கும்? ” என்று கேட்டான் பெருமாள். “இதை விடப் பத்து மடங்கு அதிகம் இருக்கும் ” என்றான் கோபால். அப்படியானால் எழுபது ரூபாய். பரவாயில்லையே என்று தோன்றியது அவனுக்கு. ஆட்டோவில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னையில் அறுபது ரூபாய் அழுவதற்கு இது எவ்வளவோ தேவலாம். ஆனால் இனிமேல் யோசித்துப் பயனில்லை. வண்டி கிண்டியை நெருங்கிக் கொண்டிருந்தது. கிண்டியில்தான் பெருமாள் இறங்க வேண்டும். கிண்டியிலிருந்து மைலாப்பூருக்கு ஆட்டோ. அதற்கு வேறு ஆட்டோக்காரன் நூற்றைம்பது ரூபாய் கேட்பான். இதெல்லாம் தேவையா, பேசாமல் ஊரப்பாக்கத்திலிருந்து மைலாப்பூருக்கு ஆட்டோவிலோ, கால் டாக்ஸியிலோ வந்திருக்கலாம் என்று மீண்டும் ஒருமுறை நினைத்துக் கொண்டான் பெருமாள்.
புனித தாமஸ் மலை வந்ததுமே இருக்கையிலிருந்து எழுந்து முன்னே வந்து கிண்டியில் இறங்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டான். கோபால் நுங்கம்பாக்கத்தில் இறங்க வேண்டும். முன்னால் நின்றவர்களிடம் “நீங்கள் கிண்டியில் இறங்க வேண்டுமா? ” என்று ஒவ்வொருவராகக் கேட்டான். யாருமே பதில் சொல்லவில்லை. கிண்டி ஸ்டேஷன் வந்தது. முன்னால் நின்றவர்களிடமிருந்து எந்த அசைவையும் காணோம். பின்னால் நின்றவர்களோ பெருங்குரலில் கத்திக் கொண்டே அவனை முன்னோக்கித் தள்ளினார்கள். முன்னால் நின்றவர்களிடம் அப்போதும் எந்த அசைவும் ஏற்படவில்லை. அதற்குள் கிண்டியிலிருந்து ஏறும் கூட்டம் வேறு வண்டியில் ஏறத் தொடங்கி விட்டது. பெருமாளின் பின்னே நின்ற கூட்டம் மதம் பிடித்த யானையாக மாறி அவனை முன்னே தள்ளியது. ஒன்றுக்கொன்று எதிரெதிரே நகரும் இரண்டு இரும்புச் சுவர்களுக்கிடையே மாட்டிக் கொண்டவனாய் விழி பிதுங்கி நின்றான் பெருமாள். ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சைக்காக பிளக்கப் பட்டு பின்னர் சேர்க்கப் பட்டிருந்த நெஞ்சுக் கூடு பாரம் தாங்காமல் உடைந்து விடும் போல் வலித்தது. மூச்சு விட முடியவில்லை.
கிண்டியில் இறங்க வேண்டிய கூட்டத்திற்கு இனி ஒரு நொடி கூட இல்லை. வண்டி கிளம்பி விடும். அப்போது அந்தக் கூட்டம் தனது முழு பலத்துடன் அவனைத் தள்ள, முன்னே நின்ற கூட்டம் சடாரென்று ஒதுங்கிக் கொள்ள, ஒரு ராட்ஷசனால் தள்ளப் பட்டவனைப் போல் வெளியே வந்து விழுந்தான் பெருமாள். அவன் பின்னே நின்றவர்களில் சிலரும் அவனோடு சேர்ந்து விழ, மற்றவர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். அவன் வைத்திருந்த லேப்டாப் ஒரு பக்கம் சிதற, அவன் அணிந்திருந்த Hugo Boss கண்ணாடி வேறொரு பக்கம் போய் விழுந்தது. அந்த லேப்டாப்பை சென்ற வாரம்தான் அவனுடைய நண்பன் சிவா வாங்கிக் கொடுத்திருந்தான். அடப் பாவி, டாக்ஸியில் போயிருந்தால் அதிக பட்சம் 500 ரூபாய்தானே ஆகியிருக்கும். இந்த லேப்டாப் 50,000 ரூபாய் ஆயிற்றே? இந்தக் கண்ணாடியும் என்ன சாதாரண விலையா? 20,000 ரூபாய். இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை வைத்துக் கொண்டு உன்னை எவன்டா புறநகர் ரயிலில் ஏறச் சொன்னது?
இரண்டு பொருட்களையும் சேகரித்துக் கொண்டான். அதிர்ஷடவசமாகப் பொருட்களுக்கு ஒன்றும் சேதாரம் இல்லை. ஜன்னலின் வழியே குனிந்து கோபாலுக்கு டாட்டா காண்பித்து விட்டு அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்தான். மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
அன்று இரவு முழுவதும் பெருமாளுக்குத் தூக்கம் வரவில்லை. காலையில் ஐந்து மணி அளவில் இதயத் துடிப்பு பயமுறுத்துகிறாற்போல் அதிகமாயிற்று. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான். துடிப்பு அதிகமாகிக் கொண்டு போனதே தவிர குறைவதாகத் தெரியவில்லை.
அலெக்ஸுக்கு போன் போட்டு யோசனை கேட்டான். “நாம் வழக்கமாக டீ குடிப்போம் இல்லையா, அதற்குப் பக்கத்தில் ஹார்வே மருத்துவமனை உள்ளது. அங்கே இருதய நிபுணர் சிவகடாட்சம் இருப்பார். உடனே தாமதம் செய்யாமல் அவரைப் போய்ப் பார் ” என்றான். மீராவும், கார்த்திக்கும் பெருமாளை அழைத்துக் கொண்டு ஆட்டோவைப் பிடித்து அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்குச் சென்றார்கள். ஆனால் அங்கே எந்த மருத்துவமனையும் இல்லை. மணி அப்போது ஆறு ஆகியிருந்தது. மீண்டும் அலெக்ஸை அழைத்துக் கேட்ட போதும் அவன் அதே பதிலையே சொன்னான். பிறகு ஒருவழியாக எல்லோரிடம் வழி விசாரித்துக் கொண்டு வந்தால் அந்த மருத்துவமனை பார்க் ஷெரட்டனுக்குப் பக்கத்தில் இருந்தது. அடப்பாவி, டீக்கடை டீக்கடை என்று சொல்லி கடைசியில் அவசரமான ஒரு கட்டத்தில் அது மறந்து போனதே என்று நினைத்துக் கொண்டான் பெருமாள்.
பின் குறிப்பு: பெருமாளின் ஹெல்த் எப்படி இருக்கிறது என்ற முக்கியமான விஷயத்தை விசாரிக்க விரும்பும் அன்பர்கள் பெருமாளை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவனுக்கு மன உளைச்சல் தராமல் சீனிவாசனையே தொடர்பு கொண்டு விசாரித்துக் கொள்ளலாம். சீனிவாசனின் மின்னஞ்சல் முகவரி: sri7thsense@yahoo.com
* * *
10.9.2008.
7.25 a.m.