குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (54)

 

 

காலை சுமார் ஏழு மணி அளவில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டான் பெருமாள். அவனுடைய ரத்தத்தில் பொட்டாஷியம் குறைந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது.அதோடு இருதயம் சம்பந்தப்பட்ட எல்லாப் பரிசோதனைகளையும் செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்கள். இருதயம் சம்பந்தப்பட்ட எந்தச் சிறு பிரச்சினையாக இருந்தாலும் குறைந்த பட்சம் 15,000 ரூபாயைக் கறந்து விடுவதென்பது எல்லா மருத்துவமனைகளிலுமே எழுதப்படாத விதியாக இருப்பதால் அது பற்றி பெருமாள் ஆச்சரியப்படவில்லை.

சரித்திரப் படங்களில் ஹீரோவை பலவித சங்கிலிகளால் பிணைத்து அரசவைக்கு இழுத்து வருவார்களே, அது போல அவனுடைய மார்பிலும், கைகளிலும் பலவிதமான ட்யூப்கள் மாட்டப்பட்டு அவை ஏதேதோ பயமுறுத்தக் கூடிய எந்திரங்களுடன் பிணைக்கப் பட்டிருந்தன. இது போதாது என்று கைகளின் ரத்தக் குழாய்களில் கடாமாட்டு ஊசியையும் செருகியிருந்தார்கள்; அவ்வப்போது சோதனைக்காக ரத்தம் எடுக்கவும், மருந்துகளைச் செலுத்தவும் அந்த ஊசி உதவும். இடது கையில் ஒரு மாட்டு ஊசியைக் குத்தி அந்த ஊசி மூலம் பொட்டாஷியத்தைச் செலுத்தினார்கள். செலுத்துவதற்கு முன் டாக்டர் அவனிடம் வந்து ” கொஞ்சம் வலிக்கும்; பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். அப்போதே அவனுக்குத் தெரிந்து விட்டது, உயிர் போகும் வலி காத்திருக்கிறது என்று. நரம்புகளே தெறித்து விடும் என்பது போன்ற வலி. பாபாவை வேண்டிக் கொண்டான் பெருமாள். உடனே வலி தீர்ந்து விட்டது என்று புருடா எல்லாம் விட மாட்டேன். ஆனால் அந்தக் கிராதக வலியை சகித்துக் கொள்ளும் சக்தி அவனுக்கு பாபாவின் நினைப்பால் கிடைத்தது.

சுமார் இரண்டு மணி நேரம் ரத்தத்துக்குள் சென்றது பொட்டாஷியம். ஆனால் அந்த வலியை விட பிரச்சினையாக இருந்தது என்னவென்றால், காலையிலேயே மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்து விட்டதால் மலம் கழிக்கவில்லை. ஜலம் போக பீங்கான் குவளை கொடுத்திருந்தார்கள். அதே போல் ஒரு பெரிய கிண்ணம் போன்ற ஒன்றைக் கொடுத்து “இதில் மலம் கழித்துக் கொள்ளுங்கள் ” என்றார்கள். அதுதானே எனக்கு முடியாது!

இருதய அறுவை சிகிச்சை செய்த போதே பெருமாள் மலம் கழிப்பதற்கு அந்தக் குவளையைப் பயன்படுத்தியதில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் அரை நினைவுடன் இருந்த போது திரவ உணவு கொடுக்கப் பட்டது. தேகம் அசையவே கூடாது என்பதால் ஆண்குறியின் உள்ளே ஒரு குழாய் செருகப்பட்டு அதன் வழியே மூத்திரம் வெளியேறி விடும். பின்னர் தனியறைக்கு அனுப்பப்பட்டபோதும் ஒரு சில தினங்கள் அதிகம் அசையக் கூடாது என்று சொல்லி மலக்கோப்பை கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவனால் படுக்கையில் இருந்தபடியே மலக்கோப்பையில் மலம் கழிப்பது இயலாததாகி விட்டதால் மீராவைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு கழிப்பறைக்குச் சென்றுதான் மலம் கழிப்பான்.

ஆனால் இப்போது அவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் கழிப்பறைக்கெல்லாம் செல்ல முடியாது என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும் அது சாத்தியமில்லை என்று அவனுக்குப் புரிந்தது. உடம்பு பூராவும் குழாய்களை மாட்டி சோதித்துக் கொண்டிருக்கும் போது அவன் எப்படி எல்லாவற்றையும் கழட்டிப் போட்டு விட்டு கழிப்பறைக்குப் போக முடியும்?

அன்று பூராவும் அது சங்கடமாகவே இருந்தது. அதனால் சரியாக சாப்பிடவும் இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் முழு நினைவுடன் எதுவும் பேசாமல், எதுவும் படிக்காமல், இசை கூடக் கேட்காமல் எப்படி ஒருநாள் பூராவும் படுத்துக் கிடக்க முடியும்?

பேசக் கூடாது; சரி. படிக்கவும் கூடாது, இசையும் கேட்கக் கூடாது என்றால் அது சாத்தியமா? அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது.

ஆனால் அவனுக்கு நேர் எதிரே படுத்துக் கிடந்த ஒரு பாட்டி அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவை அனுபவித்து ரசித்துக் கொண்டிருப்பதைப் போல் தெரிந்தது. காலையில் மருத்துவமனையில் கொடுத்த இட்லியை சாப்பிட முடியாது என்று மறுத்து விட்டார் அந்தப் பாட்டி. வீட்டிலிருந்து மிளகாய்ப் பொடியும், நல்லெண்ணையும் வந்தால்தான் இட்லி சாப்பிட முடியும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். மருத்துவமனையில் கொடுத்த பாலையும் அருந்தவில்லை. அதனால் முழுப் பட்டினி கிடக்க வேண்டாம் என்று வீட்டிலிருந்து வந்த காப்பிக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டது. நல்ல அருமையான ஃபில்டர் காப்பி. ஃப்ளாஸ்கிலிருந்து திறக்கும் போதே மணம் நாசியைத் துளைத்தது. மதியமும் மருத்துவமனை சாப்பாட்டைச் சாப்பிட மாட்டேன் என்று மறுத்து விட்டார் பாட்டி. இது பற்றி மருத்துவ மனை நிர்வாகம் கூடிப் பேசி முடிவெடுப்பதற்குள் பாட்டி மூச்சு பேச்சு இல்லாமல் சாய்ந்து விட்டார். அப்போது ஒரு நர்ஸ் ஓடி வந்து அந்தப் பாட்டியின் மார்பில் கை வைத்து நீண்ட நேரம் ‘ பம்ப் ’ செய்து அவருக்கு மீண்டும் உயிர் வரச் செய்தார். அந்த நர்ஸ் மட்டும் அவ்வளவு அவசரமாக வந்து அதைச் செய்திருக்காவிட்டால் அந்தப் பாட்டியின் போன உயிர் போன உயிர்தான்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மணி நேரம் இருக்கும். பாட்டியின் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வந்து பாட்டியைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். அப்போது பாட்டி அந்தப் பெண்ணை அதிகாரமாக அழைத்து (மருமகளாக இருக்கும்) அவரது படுக்கைக்குக் கீழே இருந்த காப்பி ஃப்ளாஸ்க் மற்றும் நேற்று கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கேரியர் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். அந்தப் பெண் இதை எதிர்பார்க்கவில்லை போலும். அவள் முகத்தில் அந்த அதிர்ச்சி தெளிவாகத் தெரிந்தது. பதற்றமோ என்னவோ, எடுத்த வேகத்தில் அந்த எவர்சில்வர் கேரியர் அவள் கையிலிருந்து தவறி விழுந்து பெருத்த சப்தத்தை எழுப்பியது. பாட்டி தன் மருமகளை (?) ஏதோ திட்டினார். பிராமணக் கொச்சை. சரியாகக் காதில் விழவில்லை.

பெருமாளுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் தவிர மற்ற எல்லா முடிவுகளும் சரியாக இருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது 130-90 என்று இருந்த ரத்த அழுத்தம் நேரம் ஆக ஆக கூடிக் கொண்டே போனதன் காரணம் மருத்துவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் பெருமாளுக்குப் புரிந்தது. எதுவுமே செய்யாமல் வெறுமனே படுத்துக் கிடந்ததுதான் காரணம்.

மறுநாள் காலை மறுபடியும் அதே மலப் பிரச்சினை. ஆனால் சீக்கிரமே வீட்டுக்குப் போய் விடலாம் என்று சொன்னபடியால் சற்று ஆசுவாசமடைந்தான் பெருமாள். ரத்த அழுத்தம் கூடிக் கொண்டே போனது. சுமார் ஒன்பது மணி அளவில் ‘படிக்கலாம் ’ என்றார்கள். மீராவுக்குத் தகவல் கூறப் பட்டது. அவள் குத்துமதிப்பாக ஓரான் பாமுக்கின் My Name is Red -ஐ எடுத்து வந்தாள். அது ஏற்கனவே படித்த புத்தகம். முகுந்து நாகராஜனின் அகி என்ற கவிதைத் தொகுப்பை அனுப்பச் சொல்லி அலெக்ஸுக்குத் தகவல் சொன்னான் பெருமாள். பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தது அகி. ஒரு மணி நேரம் படித்ததும் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வந்து 120-80க்கு வந்து சேர்ந்தது.

மதியம் இரண்டு மணி அளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் உடனடியாக கழிப்பறையை நோக்கிச் சென்றான் பெருமாள்.

* * *

15.9.2008.

1.30 p.m.